Published:Updated:

கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை

புதுடெல்லி, மே 11,2011

கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை

தேர்தல் காலங்களில் பிரசாரம் மேற்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தங்களுக்கென டி.வி. சேனல்களை துவக்குவது அதிகரித்து வரும் சூழலில், அத்தகைய சேனல்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய விதிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் நிருபர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி இன்று கூறுகையில், "தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ள சில மாநிலங்களில் உள்ள டி.வி. சேனல்களில் பெரும்பாலானவை அரசியல் கட்சிகளுக்குச் சொந்தமானவை.

அந்தச் சேனல்களில் மற்ற கட்சிகளின் விளம்பரங்கள் இடம்பெற மறுக்கப்படுகிறது. சேனல் வைத்திருக்கும் அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை மற்ற சேனல்களில் விளம்பரம் செய்வது இல்லை.

தங்களது கட்சிப் பிரசாரத்துக்காக தங்களின் சொந்த சேனல்களையே எல்லையின்றி பயன்படுத்துவதை எப்படி கணக்கில் (தேர்தல் செலவு) கொண்டு வருவது பற்றி ஆய்வு செய்து வருகிறோம். தற்போது அந்தப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளோம். இதுதொடர்பாக. அடுத்தத் தேர்தல்களுக்கு முன்பாக, புதிய விதிமுறைகளைக் கொண்டு வருவோம்," என்றார் குரேஷி.

எதிர்காலத்தில் இணையதளம் மூலம் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தித் தரும் உத்தேசம் உள்ளதா என்றதற்கு, அதற்கான சாத்தியமே இல்லை என்றார் அவர்.