Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : மனுஷ்ய புத்திரன் கவிஞர்படங்கள் : சொ.பாலசுப்பிரமணியன்

நானும் விகடனும்!

இந்த வாரம் : மனுஷ்ய புத்திரன் கவிஞர்படங்கள் : சொ.பாலசுப்பிரமணியன்

Published:Updated:
##~##

ன் இளம் பருவம் எந்த அளவுக்குக் கடினமானதாகவும் இருளும் புகையும் படிந்ததாகவும் இருந்ததோ... அந்த அளவுக்கு நான் இந்த வாழ்க்கையைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு இருந்தேன். சிரிப்பு என்றால் சாதாரணச் சிரிப்பு அல்ல, என்னைச் சுற்றியிருந்த ஒவ்வொன்றின் அபத்த நிலைகளையும் கண்டு இடிஇடியென அப்படி ஒரு சிரிப்பு. என் பால்யத்தின் சிநேகிதர்களுக்கும் சகிகளுக்கும் நான் பேச ஆரம்பித்தாலே, சிரித்துச் சிரித்துக் கண்கள் நிறைந்துவிடும். அது இந்த வாழ்வின் அநீதிக்கு எதிரான வன்மம் மிகுந்த சிரிப்பு. உடல்நலம் இல்லாத ஒரு குழந்தையை அவ்வளவு சந்தோஷமாகப் பார்க்கிற யாரும் மனம் குழம்பிப்போவார்கள். துயரத்தின் ஒரு சிறிய நிழல்கூட என் மனதிலோ, உடலிலோ விழுந்தது இல்லை. அப்போது என்னைப் பார்த்த யாரும் இப்போது அந்தச் சிரிப்பு எங்கே போயிற்று என்று கேட்கிறார்கள். எனது அந்தச் சிரிப்பில் என்னோடு துணையாக வந்தவன் விகடன். ஒரு குதூகலமும் குறும்பும் நிறைந்த இளம் பருவத்துத் தோழன் என்ற நினைவுதான் எனக்கு விகடனைப் பற்றி இருக்கிறது. விகடன் அந்தக் குதூகலத்தில் இருந்து மாறவே இல்லை. நான்தான் எங்கேயோ விலகி வந்துவிட்டேன்.

 சிறைபட்ட, தனிமைப்பட்ட என் இளமையின் முற்றத்தில் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் கொண்டுவந்து அடுக் கினார் என் அப்பா. காமிக்ஸ் புத்தகங்கள், மாயாஜாலக் கதைகள், நாவல்கள்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நானும் விகடனும்!

சினிமா வசனப் புத்தகங்கள், வார மாத இதழ்கள், செய்தித்தாள்கள் என என்னவெல்லாமோ அதில் இருந்தன. மூக்குத்தி போன்ற சில இதழ்கள் யார் கை வழியாகவோ ரகசியமாக வந்து சேர்ந்தன. நான் விகடனின் ஜோக்கு களாலும் அரசியல் கேலிச்சித்திரங்களா லும் வெகுவாக ஈர்க்கப்பட்டேன். அதில் வெளிப்பட்ட எளிய புத்திசாலித்தனமும் விஷயங்களைக் கலைத்து விளையாடும் நேர்த்தியும் எனக்கு ஏற்படுத்திய உவகையை அளவிடவே முடியாது. ஜோக்குகளில் வரும் திருடர்கள், போலீஸ்காரர்கள், கணவர்கள், மனைவிகள், வேலைக்காரர் களின் உருவங்கள் எனது கனவுகளில்கூட வரத் தொடங்கின. சம காலம் குறித்த தீவிரமான விழிப்பு உணர்வும் விமர்சனங் களும் இருந்தால் மட்டுமே உண்மையான அங்கதத்தை உருவாக்க முடியும். விகட னுக்கு அது அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது.

ஒரு கேலித் துணுக்குக்காக விகடன் ஆசிரியர் தண்டிக்கப்பட்டது பழைய செய்தி. அந்தத் துணிச்சலையும் சுதந்திரத்தையும் விகடன் எப்படித் தக்கவைத்துக்கொண்டு இருக்கிறது என்பதுதான் முக்கியமானது. அதற்கு இணையான அல்லது அதைவிடத் தீவிரமான துணுக்குகளைப் பல பத்திரிகைகள் ஏற்கெனவே வெளியிட்டு இருப்பதைப் பலமுறை கண்டிருக்கிறேன். அந்தத் துணுக்கில் வெளிப்படும் அரசியல் விமர்சனத்தை, தண்டிப்பதற்கான ஓர் அளவுகோலாகக்கொண்டால், 'சோ’ ராமசாமி துக்ளக்கில் வெளியிட்ட எண்ணற்ற கேலிச்சித்திரங்களுக்காக எத்தனை முறை தண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும்?

விகடன் ஆசிரியர் தண்டிக்கப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒரு பத்திரிகை ஒரு சமூகத்தில் கொண்டிருக்கும் சார்பற்ற நம்பகத்தன்மையும் பரந்த செல்வாக்கும்தான் அந்தக் காரணம். விகடனின் கருத்து கள் உடனடியாகப் பொது அபிப்ராயமாக மாறக் கூடியவை என்பதால்தான் அது பலரையும் அச்சுறுத்தக்கூடியதாக இருந்தது. 2 ஜி விவகாரத்தில் ஆ.ராசா விகடனுக்கு எதிராகத் தடை கோரியதையும் இதன் ஒரு பகுதியாகத்தான் புரிந்துகொள்ள முடியும். இந்த நம்பகத்தன்மையும் செல்வாக்கும் சர்க்குலேஷனில் இருந்து உருவாவது அல்ல. மாறாக, ஒரு பத்திரிகை தனது அந்தரங்க சுத்தியான செயல்பாட்டின் வழியே நீண்ட காலப் பயணத்தில் கண்ட டைவது அது!

ஒருகட்டத்தில் நான் விகடனின் பழைய இதழ்களைத் தேடிப் போக ஆரம்பித்தேன். விகடனின் பைண்ட் செய்த இதழ்கள், தொடர்கதைகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. குறிப்பாக, பழைய தீபாவளி மலர்கள். அவை தமிழ் வாழ்க்கையின் மாபெரும் கலாசாரப் பதிவுகள் என்பதை உணர்ந்த சந்தர்ப்பம் அது. விகடன் அங்கதத்துக்கான பத்திரிகையாக மட்டுமே இருந்திருந்தால், அதன் இடம் எங்கோ சுருங்கிப்போயிருந்திருக்கும். தீவிரமான சமூக, இலக்கியப் பார்வைகள்கொண்ட எழுத்தாளர்களின் களமாகவும் விகடன் இருந்தது.

நானும் விகடனும்!

ஜெயகாந்தன் ஒரு பெரும் சக்தியாக விகடனின் வழியே எழுந்து வந்தார். சமூகத்தின் நிலைபெற்ற மதிப்பீடுகளை இரக்கமின்றித் தாக்கும் அவரது கதைகளை விகடன் எந்தத் தயக்கமும் இன்றி வெளியிட்டது. ஜெயகாந்தனும் விகடனும் அன்று உண்மையில் இரண்டு யுகங்களுக்கு இடையிலான 'யுக சந்தி’யாக நின்றிருந்தனர். ஓர் இளம் எழுத்தாளனாக நான் இன்று அந்த இடத்தைப் பொறாமையுடன் பார்க்கிறேன். ஒரு துணிச்சலான, ஆகிருதியுள்ள எழுத்தாளனுக்கு அதே துணிச்சலும் ஆகிருதியும் உள்ள ஒரு பத்திரிகை கிடைப்பது அரிதிலும் அரிது. ஜெயகாந்தனுக்கு அந்த அதிர்ஷ்டம் இருந்தது. விகடனில் வெளிவந்த அவரது முத்திரைக் கதைகளும் தொடர்கதைகளுமே இன்றும் தமிழில் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளாக இருக்கின்றன.

விகடன் வெகுசன ரசனையைத் தொடர்ந்து உயர்த்தியும் மாற்றியும் வந்திருக்கிறது. ஜெயகாந்தனுக்குப் பிறகு சுஜாதா, விகடனின் மகத்தான படைப்பாளியாக எழுந்து வந்தார். அவரது 'கற்றதும் பெற்றதும்’ தொடரும் ஜூனியர் விகடனில் எழுதிய 'ஏன்? எதற்கு? எப்படி?’ அறிவியல் கேள்வி  - பதிலும் தமிழ் வாசகப் பரப்பில் ஒரு பெருந்திரள் கல்வியை (mass education) வழங்கியது. அதுவரை தமிழ் இதழியல் பரப்பில் வராத எண்ணற்ற விஷயங்கள் ஒரு புதிய மொழியில் சொல்லப்பட்டன. ஜெயகாந்தனைப் போலவே சுஜாதாவும் விகடனில் தனக்குக் கிடைத்த அந்தக் கட்டற்ற சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தினார். தமிழின் இரண்டு மகத்தான படைப்பாளிகள் தங்களது ஆகச் சிறந்த பங்களிப்புகளை ஒரே பத்திரிகையின் வழியாகத்தான் செய்திருக்கிறார்கள். நான் இந்த இருவரின் வழியே வளர்ந்தவன். ஆகவே, விகடனின் வழியே வளர்ந்தவன்!

நவீன எழுத்தாளர்களுக்கு வெகுசன தளத்தில் முக்கிய இடம் கிடைக்கச் செய்த விகடனின் பணிக்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. ஜூனியர் விகடனில் வெளிவந்த கி.ரா-வின் கரிசல் காட்டுக் கடுதாசியும் அப்துல் ரகுமானின் தொடரும் எனக்கு ஏற்படுத்திய ஆழ்ந்த பரவசம் இன்றும் நினைவில் இருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தைப் பல லட்சம் வாசகர்களி டம் ஏற்படுத்த விகடனே காரணமாக இருந்தது. ஜெயமோகன், நாஞ்சில் நாடன், வண்ணதாசன் எனப் பலரும் தங்களது சிறந்த பத்திகளை விகடனில் எழுதினார் கள். விகடன் எவ்வளவுக்கு எவ்வளவு வெகுசன தளத்தில் தன்னை முதன்மையான இதழாகத் தக்கவைத்துக்கொண் டதோ, அதே அளவு அக்கறையை, தீவிர இலக்கியம், பண்பாடு சார்ந்த விஷயங் களிலும் உறுதியாக விட்டுக்கொடுக்காமல் இருந்துவந்திருக்கிறது. தமிழக இதழியல் வரலாற்றில் இது ஓர் அபூர்வமான நிகழ்வு.

2002-ல் நான் உயிர்மை இதழைத் துவங்கியபோது, தொடர்ந்து  இருப்பேனா இல்லையா என்கிற சவால் அது. கையில் ஒரே ஓர் இதழைக் கொண்டுவருவதற்கான பணம் மட்டுமே இருந்தது. தற்கொலைக்கும் மனப் பிறழ்வுக்கும் இடையே நம்பிக்கை யின் சின்ன வெளிச்சத்தோடு ஊர்ந்து கொண்டு இருந்தேன். கனிமொழியையும் அவரது கணவர் அரவிந்தனையும் தவிர, எனக்கு இந்த நகரத்தில் நண்பர்கள் என்று யாரையுமே தெரியாது. பத்திரிகைக்கான பூர்வாங்க வேலைகளைச் செய்தபடி, நான் நம்பிக்கையற்று தடுமாறிக்கொண்டு இருந்த நேரம். ஒரு நாள் காலை விகடன் இதழைப் பிரித்தபோது, எதிர்பாராத ஒரு சந்தோஷம். என்னுடைய ஒரு சின்ன கார்ட்டூன் சித்திரம் வெளியாகி இருந்தது. அதற்குக் கீழே 'கவிஞர் மனுஷ்ய புத்திரன் உயிர்மை என்ற பெயரில் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப்போகிறாராம்’ என்ற ஒரு துணுக்குச் செய்தி. அந்தச் சமயத்தில் அந்தச் செய்தி ஏற்படுத்திய உற்சாகத்துக்கு அளவே இல்லை. அதுதான் இந்தப் பத்திரிகைகான முதல் அழைப்பு. முதல் அங்கீகாரம். வெறுங்கையோடு போராடுபவர்களுக்குத்தான் இதுபோன்ற ஓர் அங்கீகாரத் தின் மதிப்பு புரியும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று பெரிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டேன். என் படைப்பு வாழ்க்கையின் உச்சகட்டத்தில்இருந்து எழுதிய கவிதைகள் அவை. மூன்று புத்தகங்களை யும் பற்றி தமிழில் மூன்றே மூன்று குறிப்புகள் மட்டுமே வெளிவந்தன. அவை விகடன் வரவேற்பறையில் வந்தவை. மேலும், அதில் ஒரு புத்தகத்துக்கு விகடன் விருதும் கிடைத்தது. என் வாழ்நாள் எல்லாம் எழுத்தாளர்களைக் கொண் டாடி வந்திருக்கிறேன். அவர்கள் என்பால் காட்டும் மௌனத்துக்கு அர்த்தம் தெரியும் என்பதால், அதுபற்றி வருந்த ஒன்றுமே இல்லை!

தமிழ் இதழியல் வரலாற்றில் விகடன் மூன்று முக்கியமான முயற்சிகளை மேற்கொண்டது. புலனாய்வு இதழியலில் ஜூனியர் விகடன் வழியாக அது ஆற்றிய பங்கு. பல புலனாய்வு அரசியல் இதழ்களுக்கு அதுவே முன்னோடி. இதழியலின் முக்கியச் செயல்பாடாகிய சமூகக் கண்காணிப்பு என்பது இதன் மூலம் உருவாக்கப்பட்டது. மற்ற இரண்டு, ஜூனியர் போஸ்ட்டும் விகடன் பேப்பரும். இரண்டும் மறைந்துபோனாலும் அவை உருவாக்கிய வண்ணமயமான இதழியல் பங்களிப்பு எனக்குப் பெரும் ஆர்வத்தைத் தந்தது. அவை போன்ற முயற்சிகள் தமிழில் இன்றுவரை இல்லை. அவை என்றாவது மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் விகடன் தனது உக்கிரமான நீதி உணர்ச்சியை வெளிப்படுத்தியதை உலகெங்கும் உள்ள தமிழர்கள் நன்றியுடன் நினைக்கிறார்கள். அதேபோல, அரசும் பல ஊடகங்களும் கூடங்குளம் போராட்டத் தலைவர் சுப.உதயகுமாரனைத் தேச விரோதியாக சித்திரித்த ஒரு காலகட்டத்தில், விகடன் அவரைத் தமிழகத்தின் முதன்மையான மனிதராகத் தேர்வு செய்ததன் மூலம் மகத்தான அரசியல் அறத்தினை வெளிப்படுத்தியது!

ஊடகங்கள் இன்று அரசியல் வர்த்தக விளையாட்டின் ஒரு பகுதியாக மாறிவிட்ட காலத்தில், ஓர் எழுத்தாளனாக, இதழியலாளனாக, சமூக விமர்சகனாக, ஒரு வாசகனாக, விகடனின் அக்கறைகளும் அது உருவாக்கும் வெளியும் இன்றைய காலகட்டத்தில் பெரும் மதிப்பு வாய்ந்தவை என்றே இக்கணம் இதயபூர்வமாக உணர்கிறேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism