Published:Updated:

வலையோசை - சித்திரவீதிக்காரன்

வலையோசை - சித்திரவீதிக்காரன்

வலையோசை - சித்திரவீதிக்காரன்

வலையோசை - சித்திரவீதிக்காரன்

Published:Updated:
 ##~##
வலையோசை - சித்திரவீதிக்காரன்

'சித்திரவீதிக்காரன்’ என்ற பெயரில் எழுதும் சுந்தர், மதுரை கல்லூரி ஒன்றில் பணிபுரிந்துவருகிறார். மதுரை வீதிகளில் அலைந்து அலைந்து பித்தேறி ஒவ்வொரு வீதியும் மனதில் சித்திரமாகப் படிய, சித்திரவீதிக்காரன் ஆனேன் என்று அறிமுகம் கொடுக்கும் இவரின் (http://maduraivaasagan.wordpress.com)வலைப்பூ முழுக்க மதுரை மண் மணம் கமழ்கிறது. அவருடைய வலைப்பூவில் இருந்து...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பச்சரிசி மாவிடிச்சி... மாவிடிச்சி...
பக்குவமா மாவரைச்சு... மாவரைச்சு
சுக்கிடுச்சு மிளகிடுச்சு... மிளகிடுச்சு
பக்குவமாக் கலந்துவச்சு... கலந்துவச்சு
அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்தோம்
எடுத்து வந்தோம்...
அம்மன் அவ எங்களையும் காக்க வேண்டும்
காக்க வேண்டும் தாயே! ’  

'மதுரை மரிக்கொழுந்து வாசம்’ என்ற பாடலில் முதலில் வரும் வரிகள்தான் மேலே உள்ளவை. ராமராஜன் திரைப்படங்களின் மூலம் கிராமிய மண் வாசனை உலகம் எங்கும் பரவியது. நாட்டுப்புறவியல் துறையில் இருந்து ராமராஜனுக்கு முனைவர் பட்டமே வழங்கலாம். நகைச்சுவைக்காக இதைச் சொல்லவில்லை. சமீபத்தில்  

'மதுரை நாட்டுப்புறவியல்’ என்ற புத்தகம் வாசித்தேன். அதில் அவ்வை நோன்பைப் பற்றி எழுதியிருந்த வரிகள் 'செவ்வாய்க் கொழுக்கட்டை’யை நினைவூட்டின.

வலையோசை - சித்திரவீதிக்காரன்

தை, மாசி, ஆடி மாதங்களில் செவ்வாய்க் கிழமைகளில் அவ்வை நோன்பைப் பெண்கள் கடைபிடிக்கிறார்கள். அன்று இரவு கொழுக்கட்டை செய்து, பிள்ளையாருக்கு வைத்து வழிபடுவார்கள். மேற்கொண்டு வழிபாட்டு முறை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. சாதி, வயது வித்தியாசம் இல்லாமல் பெண் என்ற அடிப்படைத் தகுதி ஒன்றோடு அவ்வை நோன்பைக் கடைபிடிக்கிறார்கள். நல்ல கணவன் அமைய, திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் தீர, குழந்தைப் பேறு கிடைக்க எனப் பல காரணங்களுக்காக இப்படி வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அண்ணா நகரில் நாங்கள் குடியிருந்த காலனியில் உள்ள பெண்கள் எல்லாம் எங்கள் வீட்டில்தான் 'செவ்வாய்ப் பிள்ளையார்’ கும்பிட வருவார்கள். ஒரு அறை கொண்ட சிறிய வீடுதான் எங்களுடையது. எனவே, அவர்கள் சாமி கும்பிடும் வரை என்னை இரவு வீட்டுக்கு வெளியே படுக்கச் சொல்லிவிடுவார்கள். மறுநாள் 'நீங்க மட்டும் கொழுக்கட்டை செஞ்சு திங்கிறீங்க. எனக்கு இல்லையா?’னு கத்துவேன். மறுநாள் அம்மா எனக்கு இனிப்பான பால் கொழுக்கட்டை செஞ்சு தருவாங்க!

வலையோசை - சித்திரவீதிக்காரன்

 ஜல்லிக்கட்டு என்றாலே நம் நினைவுகளில் நீச்சல் அடிப்பது, மதுரை அலங்காநல்லூர்தான். அலங்காநல்லூருக்கும் அழகர்கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்துக்கு முன்பு சித்திரைத் திருவிழாவுக்கு வரும் அழகர், அலங்காநல்லூர் வழியாக வந்துதான் தேனூருக்கு அருகில் உள்ள வைகை ஆற்றில் இறங்குவாராம். அழகர்கோயிலில் இருந்து வரும் அழகருக்கு இந்த ஊரில் வைத்து அலங்காரம் செய்ததால் 'அலங்காரநல்லூர்’ என்று அழைக்கப்பட்டு இருக்கிறது. காலப்போக்கில் இந்தப் பெயர் மருவி 'அலங்காநல்லூர்’ ஆகிவிட்டதாம்.  

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வருடந்தோறும் யாருக்காக நடத்தப்படுகிறது தெரியுமா? இந்த ஊரின் காவல் தெய்வமான முனியாண்டிக்காகத்தான் நடத்தப்படுகிறது.

வலையோசை - சித்திரவீதிக்காரன்

முனியாண்டி மலையாள தேசத்தில் இருந்து மதுரைக்கு வந்த காவல் தெய்வம். மலையாள தேசத்தில் முனியாண்டியின் அலப்பறை தாங்காமல் அவருடைய அப்பா ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டாராம். அந்தப் பெட்டி கரை ஒதுங்கிய இடம்தான் அலங்காநல்லூர். அந்தப் பெட்டியைக் கண்டெடுத்தவர்களிடம்  முனியாண்டி, 'தான் இங்கேயே இருந்து மக்களைக் காப்பதாக’க் கூறினாராம். அந்தப் பெட்டியை ஆற்றில் இருந்து கண்டெடுத்த குடும்பத்தினர்தான் இது வரையில் காலகாலமாகப் பூசாரியாக இருந்து பூஜை செய்துவருகின்றனர். இது போன்ற கதைதான் கருப்புசாமிக்கும் சொல்லப்பட்டு வருகிறது!

வலையோசை - சித்திரவீதிக்காரன்

 'யானை மலை எங்கள் உயிர். யானை மலை எங்கள் தெய்வம். யானை மலை எங்கள் அரண். யானை மலை எங்கள் தொன்மம். யானை மலை எங்கள் வரலாறு. யானை மலை எங்கள் அடையாளம். யானை மலை எங்கள் உலகம்!’

மதுரை மலைகள் சூழ்ந்த மாநகரம். இந்த ஊரில் நீங்கள் எந்தத் திசையில் பயணித்தாலும் ஒரு பெரிய மலையைப் பார்க்கலாம். யானை மலை, நாக மலை, அழகர் மலை, திருப்பரங்குன்றம், சமண மலை என நாலாபக்கமும் மலைகளை அரணாகக்கொண்டு அமைந்த உலகின் தொன்மையான நகரம், நம்ம மதுரை. மலைகள் எல்லாம் மதுரைக்கு அழகாக, அரணாக இருப்பதாக எண்ணி மகிழ்ந்துகொண்டு இருக்கும் வேளையில் யானை மலையை 'சிற்ப நகரம்’ என்ற கலைப் பார்வையோடு ஒரு குழு பார்க்க, மனதில் கலக்கம் ஏற்பட்டது.  செவனேனு படுத்து மதுரையைப் பார்த்துக்கொண்டு இருக்கும் யானையை எழுப்பி நிப்பாட்டப் போறாங்களாம். மேலும், நிறையச் சிற்பங்கள் செய்து இந்த மலைப் பகுதியையே சிற்ப நகரமாக்கப் போறாங்களாம். நகரமாக்கப்போறாங்களா இல்லை நரகமாக்கப் போறாங்களானு தெரியல.

சிற்ப நகரம் அமைக்கும்போது யானை மலையில் இருந்து கிடைக்கும் கிரானைட்டுகள் பல ஆயிரம் கோடி ரூபாய்க்குப் போகுமாம். இப்போதுதான் இவர்களுடைய 'கலைப் பார்வை’ தெளிவாக நமக்குத் தெரிகிறது. 3 கி.மீ. நீளத்தில் படுத்திருக்கும் யானையை எழுப்பி நிற்கவைத்தால் அரை கிலோ மீட்டரில் அடங்கிவிடும். மீதியை அறுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இது கலைப் பார்வையா? காமாலைப் பார்வையா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism