Election bannerElection banner
Published:Updated:

சிட்டுக்குருவி பற பற !

செய்தி மற்றும் படங்கள்: என்.சுவாமிநாதன்

##~##

முன்பெல்லாம் வீடுகள், வீதியோர மரங்கள், ஆலயச் சுவர்கள் இங்கெல்லாம் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடிந்த சிட்டுக்குருவிகள் இப்போது அரிதிலும் அரிதாகிவிட்டன. செல்போன் கதிர்வீச்சுகளும் விவசாய நிலங்கள் அழிப்பும்தான் இதற்கான முக்கிய காரணங்கள் என்று சொல்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதற்கு மத்தியில் கன்னியாகுமரி மாவட்டத்தில், அதிலும் குறிப்பாக நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் எல்லா இடங்களிலும் சிட்டுக்குருவிகளைக் காணமுடிகிறது. நாகர்கோவில் 'அப்டா’ மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள்தான் அதற்கான ஆச்சர்யக் காரணம். குமரி மாவட்ட 'இயற்கையின் நண்பர்கள் அமைப்பு’ இதற்கான பாதை போட்டுக் கொடுத்து உள்ளது.

சிட்டுக்குருவி பற பற !

இது எப்படிச் சாத்தியமானது?

இயற்கையின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் டேவிட்சனிடம் பேசினோம். ''எங்க 'இயற்கையின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பாக ஒவ்வொரு வருஷமும் சிட்டுக் குருவி வளர்க்க விரும்புறவங்களுக்கு இலவசமாக் கூடு செஞ்சு கொடுக்கிறோம். அந்த வகையில் கடந்த சில வருடங்களாக 'அப்டா’ மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்குக் கூடுகள் கொடுத்தோம். மார்க்கெட் என்பதால் சிட்டுக்குருவிகளுக்குத் தேவையான உணவும் தாராளமாக் கிடைக்கும். கூடவே இந்த இடம் சிட்டுக்குருவிகளுக்குப் பாதுகாப்பாகவும் இருக்கும். அதனால சிட்டுக்குருவிகள் இங்கே பெருகி இருக்கு.

சிட்டுக்குருவி பற பற !

உலகம் போகிற வேகத்தில் செல்போன், இன்டர்நெட்னு ரொம்பவே முன்னேறிட்டோம். இதனால பல பாதிப்புகளும் வந்திடுச்சு. செல்போன் டவர்ல இருந்து வர்ற கதிர்வீச்சுக்கூட சிட்டுக் குருவி இனம் அழியறதுக்குக் காரணம்னு சொல்றாங்க. முன்னாடியெல்லாம் கூரை, ஓடு வீடுகள்தான் அதிகமா இருக்கும். அதில் உள்ள துவாரங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்ந்துட்டு இருந்துச்சு. இப்ப வீட்டு கட்டமைப்புகளும் மாறிடுச்சு. நகர்ப்புற விரிவாக்கம்கிற பேர்ல மரங்களையும் வெட்டிட்டோம்.

சிட்டுக்குருவி பற பற !

விவசாயிகளின் தோழனாக இருந்த இந்தச் சிட்டுக்குருவிகளின் வாழ்விடங்களையும் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றியதால்  அழிச்சுட்டோம். மனிதர்களோடு நெருங்கிப் பழகிய சிட்டுக்குருவிகள் இப்போது நமக்கு வெறும் காட்சிப் பறவையாகிடுச்சு. வீட்டுக்கு வீடு சிட்டுக்குருவிக் கூடுகளை வைத்து அதை வளர்க்குறதுதான் அந்த இனத்துக்கு நாம செய்ற நன்றியா இருக்கும். அதற்கான முதல் முயற்சியைத்தான் இந்த அப்டா சந்தை எடுத்துள்ளது'' என்றார்.

ஆரோக்கியமான முயற்சி!

சிட்டுக்குருவி பற பற !
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு