கத்திரி வெயில் ஒரு விதத்தில் இனிமையானது. காரணம், இந்தச் சமயத்தில்தான் சில்சிலீர் பிரதேசமான உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறும். மலர்ந்தும் மலராத லட்சக்கணக்கான பூக்களைக்கொண்டு உருவாக்கப்படும் அலங்காரங்கள், மலைவாழ் மக்களின் பாரம்பரியமான கலை நிகழ்ச்சிகள் என்று கலர்ஃபுல்லாகக் களைகட்டும் இந்த மலரோற்சவம்!
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சமீபத்தில் 116-வது ஆண்டு மலர்க் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் துவங்கியது. இந்த ஆண்டு மலர்க் கண்காட்சியின் சிறப்பம்சம்,ஒடிஷாவைச் சேர்ந்த மணல்சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக்கின் மணல் சிற்பம் தான். பெண்ணின் முகம் ஒன்றைப் பிரமாண்ட மாக மணலால் வடிவமைத்து 'மலர்கள் மலர் கையில் பூமி புன்னகைக்கிறது’ என்று பஞ்ச் வைத்து இருந்தார். புவி வெப்பமயமாதல் பிரச்னை குறித்து எச்சரிக்கை மணி அடிப்பதாக இருந்தது அவருடைய கான்செப்ட். இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் ஏக வரவேற்பு.
சுமார் 6 ஆயிரம் கார்னேஷன் மலர்களால் உருவாக்கப்பட்ட வளைவுகள், நீலகிரி வரையாடு உருவம், மெகா சைஸ் கிளி என்று நோக்கிய திசை எங்கும் மலர் பிரமாண்டங்கள் மனதை வருடின. மொத்தம் 250 மலர் வகைகளில் அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. அதிலும் டேலியா, ஆந்தூரியம், ஜெர்பரா, கிளாடியஸ், ஃபேன்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஏற்றுமதி ரக மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அலங்காரங்களின் மேல் கேமரா ஃப்ளாஷ்கள் மின்னிக்கொண்டே இருந்தன. இது தவிர, பதினைந்தாயிரம் மலர்த் தொட்டிகளும் கண்காட்சி வளாகத்தை நிறைத்திருந்தன.
மலர்க் காட்சிக்கு ஆஜரான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஒரு லட்சத்து ஐந்தாயிரத் தைத் தாண்டியது. கண்காட்சி நடந்த மூன்று நாட்களும் நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களான கோத்தர், குரும்பர், இருளர், தோடர் ஆகிய மக்களின் பாரம்பரியமான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. வாங்கு இசைக் கருவியை இசைத்தபடி இந்த மக்கள் நடனமாடியபோது உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியாத பார்வையாளர்களும் களத்தில் இறங்கி ஸ்டெப்ஸ் போட்டது கலர்ஃபுல் காம்பினேஷன்.
மலர்க் காட்சியின்போது வித்தியாசமான மலர்களைக்கொண்டு அதி பிரமாண்டமான வடிவங்களை அமைப்பதில் தனியார் மற்றும் அரசுத் துறைகளுக்குள் பெரும் போட்டி நடக்கும். இந்த ஆண்டு அலங்காரத்தில் அசத்தி, சுழற்கோப்பையைத் தட்டிச் சென்றது குன்னூர் அருகே வெலிங்டனில் இருக்கும் ராணுவக் கல்லூரி. பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்ட 710 கோப்பைகளில் 180 கோப்பைகளை இந்தக் கல்லூரியே தட்டிச் சென்றது ஹை லைட்.
ஃப்ளவர் ஷோவில் கலந்துகொண்ட கோவை யைச் சேர்ந்த சுஜாதா ''வாழ்க்கையில ரெண்டு விஷயங்களுக்குக் கணக்குப் பார்க்கக் கூடாது. ஒண்ணு சாப்பாடு. அடுத்தது டூர். எப்ப வுமே ரோஜா, மல்லிகைனு வழக்கமான மலர்களை மட்டுமே கடந்துபோகிற நமக்கு, 'இப்படிக்கூட பூக்கள் இருக் குதா?’னு அசரவைக்குது இந்த மலர்த் திருவிழா. அதுலயும் பொண்ணுங்களுக்கு ஷோ கேம்பஸை விட்டு வெளியே வர மனசே வர்றதில்லை. தீபாவளி, பர்த் டேவைக்கூட மிஸ் பண்ணலாம். ஆனா, ஊட்டி மலர் கண்காட்சியை மிஸ் பண்ணவே கூடாது!'' என்கிறார் கூலாக.
இப்போ சொல்லுங்க... கத்திரி வெயில் இனிமையானதுதானே!
- எஸ்.ஷக்தி,
படங்கள்: தி.விஜய், ந.வசந்தகுமார்