Published:Updated:

பார்வை மொழி பாவனா!

பார்வை மொழி பாவனா!

பார்வை மொழி பாவனா!

பார்வை மொழி பாவனா!

Published:Updated:

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகேதான் இருக்கிறது பாவனாவின் வீடு. 'சாஹாஜிகா’ என்ற பெயரில் இயற்கைப் பட்டு விற்பனைக் கூடம் வைத்து இருக்கும்  இவர் ஒரு மாற்றுத் திறனாளி. வீட்டில் ஓர் அறையின் ஓரத்தில் வீல் சேரில் இருந்தபடி என்னை வரவேற்று சிரிக்கிறார் பாவனா!

##~##

''ஆ... ஆஹ்... ஹ்ஹ்வ்வ்...'' என்று பாவனா நம்மை உள்ளே அழைக்கும்போது அவரின் தலை ஒரு பக்கமாகச் சாய்கிறது. கைகள் இரண்டும் பக்கவாட்டில் இழுத்துக்கொள்கின்றன. வாயின் ஓரத்தில் எச்சில் வழிகிறது. அவருடைய அம்மா கல்பனா ஓடிவந்து பாவனாவின் கழுத்தில் மாட்டப்பட்டு இருக்கும் 'ஸ்பாஞ்ச்’சை சரிசெய் கிறார். ''இவதான்... கடைக்கு ஓனர். என் மகள்!'' என்று எனக்குப் பெருமையாக அறிமுகம் செய்து வைக்கிறார் அந்த அன்பு அம்மா. ''என் விகடன்ல இருந்து வந்திருக்காங்க. உன்னை இன்டர்வியூ பண்றதுக்கு...'' என்று பாவனாவிடம் சொன்னதும் மீண்டும் உதிக்கிறது ஒரு புன்னகை.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இவளுக்கு 'அதிடாய்ட் செரிபரல் பால்ஸி’ன்னு ஒரு நோய். உடலின் சில பாகங்களைத் தவிர வேற எதுவும் வேலை செய்யாது. பிரசவம்  ஆனப்ப டாக்டர்கள் பயன்படுத்தின கத்திரிக் கோல் இவளோட மூளையில் பட்டுச் சேதப்படுத்திடுச்சு. அதனால உடலின் சில பாகங்கள் முடங்கிப் போச்சு. இது என்னோட தவறும் இல்லை. அவளோட தவறும் இல்லை. இது ஒரு விபத்து!'' என்று கல்பனா நம்மிடம் சொல்கிற போதே அவரின் குரல் கம்மியது. ''ஆஹ்ஹ்வ்வ்..'' என்ற பாவனாவைப் பார்த்தபடி, ''ஐ நோ... 'என்னைத்தான் பேட்டி எடுக்க வந்திருக்காங்க. நீ ஃபீல் பண்ணாதே..’ங்கிறா..'' என்று சிரித்தவர் 'கம்யூனிகேஷன் சார்ட்’டை பாவனாவின் அருகில் எடுத்துச் சென்றார். அந்தச் சார்ட்டில் ஆங்கில எழுத்துக்கள் 26ம் எழுதப்பட்டு உள்ளன. பாவனாவால் பேச முடியாவிட்டாலும், அவர் தன் கண்களைக் கொண்டுதான் மற்றவர்களிடம் உரையாடுகிறார். அவர் கண் எந்தெந்த எழுத்துக்களின் மீது நிற்கின்றனவோ அந்த எழுத்துக்களைச் சேர்த்து வார்த்தையாக்கினால் அவர் சொல்ல வருவது நமக்குப் புரியும். எழுத்துக்களைச் சுட்டிக் காட்டுவதில் அவரிடம் அவ்வளவு வேகம். பள்ளிக்குச் சென்றது முதல் இப்போது வரை இதுதான் பாவனாவின் மொழி. அதாவது பார்வை மொழி!

பார்வை மொழி பாவனா!

''தன்னோட பிசினஸ் பத்திச் சொல்லச் சொல்றா...'' என்று நம்மிடம் திரும்பி பாவனாவின் கதையை விவரிக்கிறார் கல்பனா. ''வாழ்க்கை முழுவதும் 'கம்யூனிகேஷன் சார்ட்’னு ஆனதுக்கு அப்புறமும் அவள் கவலைப்படவே இல்லை. பரீட்சையையும் இந்த 'கம்யூனிகேஷன் சார்ட்’ மூலமாதான் எழுதினா. இவள் எழுத்துக்களைச் சுட்டிக்காட்ட, இவளோட 'ஸ்கிரைப்’ பரீட்சை எழுதுவார். அப்படியே எத்திராஜ் காலேஜ்ல பி.காம். படிப்பையும் வெற்றிகரமா முடிச்சா. 'சரி, அதுக்கு அப்புறம்?’னு கேட்டதுக்கு 'பிசினஸ்’னு நம்பிக்கையா சொன்னா. 'சரி என்ன பிசினஸ்?’னு கேட்டதுக்கு அவ சொன்ன பதில் 'சாஹாஜிகா’. சம்ஸ்கிருதத்தில் 'சாஹாஜிகா’னா 'அஹிம்சை’னு அர்த்தம். இயற்கையான முறையில் பட்டு நூல் உற்பத்தி செஞ்சு, அதை வெச்சுப் பட்டுப் புடவை நெசவு செய்யறாங்க. அந்தத் துணிகளை விக்கிற   பொட்டீக் ஒண்ணு ஆரம்பிக்கப்போறதா சொன்னா. எங்களுக்கு ஆச்சர்யம். இதைப் பத்தின விஷயங்களை எல்லாம் தன் ஃப்ரெண்ட்ஸ் மூலமா நெட்டில் தேடி எடுத்துத் தெரிஞ்சுவெச்சிருக்கா.

பொதுவாப் பட்டுப் புடவைகள் நெசவு செய்யணும்னா உயிரோட இருக்கிற பட்டுப் புழுக் கூடுகளைக் கொதிக்கிற தண்ணியில போட்டுச் சாகடிச்சிருவாங்க. அந்தப் புழுக்கள் எல்லாம் செத்ததுக்கு அப்புறம், கூடுகளை மட்டும் தனியே எடுத்து அதில் இருந்து பட்டு நூலைப் பிரிச்சு  நெசவு செய்வாங்க. ஆனா, இயற்கையான முறையில் அந்தப் பட்டுப் புழுக் கூட்டில் இருக்கும் புழுக்கள் எல்லாம் தானாகவே சாகும். அது சாகும்போது கூட்டை விட்டு வெளியே வந்து விழுந்திடும். அப்புறம் அந்தக் கூடுகளில் இருந்து பட்டு நூல் எடுக்கலாம். என்ன ஒண்ணு, அந்தப் புழுக்கள் இயற்கையான முறையில் இறந்துபோக நாம கொஞ்ச நாள் காத்திருக்கணும். அவ்வளவுதான்.

இந்தியாவில் இந்த 'அஹிம்சா சில்க்’கைகண்டு பிடிச்சவர் குஷூமா ராஜய்யாங்கிறவர். அதுக்காக அதை பேட்டன்ட் பண்ணியும் வெச்சிருந்தார். அவரோட வெப்சைட்டில் போய் எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்கிட்டா. ஜார்க்கண்ட் பட்டு ஜவுளிக் கழகம், அங்கிருக்கிற பழங்குடிகளுக்கு ஆர்கானிக் சில்க் தயாரிக்கிற பயிற்சி தர்ற விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டா. உடனே இந்த இரண்டு இடத்தையும் மெயில் மூலம் தொடர்புகொண்டா. இவளோட உடல் நிலை தெரிஞ்சதும் அவங்களும் தங்களோட தயாரிப்புகளைக் கொடுக்கிறதுக்குச் சம்மதிச் சாங்க. இந்த பிசினஸ் ஆரம்பிக்கறதுக்கு பணம் தர என் கணவர் முன்வந்தார். ஆனா, அதை மறுத்துட்டு பேங்க்ல அப்ளை பண்ணி லோன் வாங்கினா. அவங்க இவளை நம்பி 2 லட்ச ரூபாய் லோன் கொடுத்தாங்க. வெற்றிகரமா 'சாஹாஜிகா’ உதயமாச்சு.

அப்புறம் வாழை நார்ல பட்டுப் புடவை நெய்யறவங்க தாங்களாகவே முன்வந்து அவங்க தயாரிப்புகளைக் கொடுத்துட்டுப் போனாங்க. அதே மாதிரி 'ஆரோவில்’லில் இருந்து இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படுகிற பருத்தி களைக் கொண்டுவந்து கொடுத்தாங்க. இவ ளோட தன்னம்பிக்கைக்கு ஏற்றபடி எல்லாமே நல்லபடியா அமைஞ்சுது..'' என்று சொல்லி நிறுத்த, பாவனா தன் கையால் அறையின் ஓரத்தைச் சுட்டிக் காட்டினார். அந்த இடத்தை நான் பார்த்துவிட்டுக் கேள்வியுடன் அமர்ந்திருக்க, கல்பனா தொடர்ந்தார்.

பார்வை மொழி பாவனா!

''இங்க வர்றவங்க எல்லோரும் கிரெடிட் கார்டு வசதி இல்லையான்னு கேட்டுட்டு சமயத்தில் எதுவும் வாங்காம திரும்பிப் போயிடுவாங்க. அதனால பேங்கல கிரெடிட் கார்டு வசதி செஞ்சு கொடுக்கச் சொல்லிக் கேட்டா. ஆனா, பேங்க்ல ரொம்ப யோசிச்சாங்க. ஏன்னா, நிறைய பேப்பர்ல கையெழுத்துப் போட வேண் டியதா இருந்துச்சு. சரி, இவளுக்குப் பதிலா வேற யாரோட பேரிலாவது கிரெடிட் கார்டு மெஷின் வாங்கலாம்னு பார்த்தா, நானோ, எங்க குடும் பமோ, இவளோட ஃப்ரெண்ட்ஸோ யாரும் பார்ட்னரா இல்லை. அதனால இவளே போராடினா. ஆறு மாசப் போராட்டத்துக்கு அப்புறம் இதோ கிரெடிட் கார்டு மெஷின் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போயிட்டாங்க...'' என்றார் கல்பனா. அதை ஆமோதிக்கும் வகை யில் தலையசைத்துவிட்டு, ''ஆஹ்ஹ்ஹ்... வ்வ்...'' என்றார் பாவனா. ''இவங்க இப்படி ஆயிட் டாங்களேன்னு என்னிக்காவது நீங்க கவலைப் பட்டது உண்டா..?'' என்று கேட்டதும். ''கவலைப் பட்டு..? நான் வித்யாசாகர்னு சிறப்புக் குழந்தை களுக்கான ஸ்கூலுக்கு பிரின்ஸிபாலா இருக்கேன். இவளை மாதிரியேதான் அங்கே இருக்கிற எல் லாக் குழந்தைகளும். நான், என் குடும்பம், இவ நண்பர்கள், இவளோட வெல்விஷர்ஸ்னு எல் லாருமே இவளுக்கு ஆதரவா இருக்கோம். இருந்தும், இவ எப்பவும் சுயமா இருக்கணும்னு தான் நினைப்பா. அஹிம்சா பட்டுத் துணிகளை விற்கிறதில் சிட்டியிலேயே இதுதான் நம்பர் ஒன் பொட்டீக்னு பேர் வாங்கணும்கிறதுக்காக உழைச்சுக்கிட்டே இருக்கா. நிச்சயம் இவ சாதிப்பா...'' என்றார் கல்பனா.

''சரி... அவங்க லட்சியம் என்னனு கேட்டுச் சொல்லுங்க..'' என்றதும் தன் விழிகளை அசைத்து அசைத்து எழுத்துக்களைச் சுட்டிக்காட்டினார். கல்பனா சொன்ன பதில் இதுவாக இருந்தது: 'பிசினஸில் கவனம் செலுத்துறது மூலமா என்னோட குறைபாட்டை மறக்கணும்!’ ''ஆ..ஹ்ஹ்ஹ்வ்வ்..'' என்று அழகாகப் புன்னகைக்கிறார் பாவனா!

பார்வை மொழி பாவனா!
பார்வை மொழி பாவனா!

- ந.வினோத்குமார்
படங்கள்: அ.ரஞ்சித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism