Published:Updated:

வலையோசை

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

வலையோசை

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - புதுச்சேரி

Published:Updated:
வலையோசை

எஸ்.செந்தில்குமார் எனும் இயற்பெயர் கொண்ட பாரதிக்குமார், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிர்வாகப் பொறியாளர் ஆக பணிபுரிந்துவருகிறார். இவர் தன்னுடைய http://bharathikumar.blogspot.in/ வலைப்பூவில் சமூக, இலக்கிய கட்டுரைகளை எழுதிவருகிறார். அவருடைய வலைப்பூவில் இருந்து...

வலையோசை


2012ல் உலகம் அழியுமா?

வலையோசை

2012-ல் இந்த உலகம் பேரழிவினைச் சந்திக்கும் என்றும், நில அதிர்வுகளாலும் கட்டுக்கடங்காத வெள்ளத்தினாலும் மக்கள் பலியாவார்கள் என்றும் ஒரு தரப்பினர் ஜோதிடம் சொன்னபடி இருக்கின்றனர். இதை அடிப்படையாக வைத்து ஹாலிவுட்டில் ஆங்கிலப் படங்கள் தயாராவதும், அவை கோடி கோடியாக வசூல் செய்வதும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. உலகம் அழிவதற்கான வருடமாக 2012-ஐ எப்படிச் சொல்கிறார்கள்? எந்த உலக மகா ஜோதிடன் இதைக் கணித்தது என்ற கேள்வி எல்லோருக்குமே உண்டு.

உலகம் முழுக்கப் பரவலாக இவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் இருந்தாலும், மெஸோ அமெரிக்கர்களில் ஒரு பிரிவினரான 'மயன்’ எனும் இனத்தவர்கள் ஆரூடங்கள், அசரீரிகள் மீது அதிக நம்பிக்கை உடையவர்கள். வேட்டையாடுதலும்  கால்நடை மேய்ப்புத் தொழிலும் இவர்களின் பிரதானமான வாழ்வாதாரங்கள். கிட்டத்தட்ட தமிழர்களைப் போல் உயர்ந்த நாகரிகமும்  அறிவியல் மற்றும் வானவியல் துறையில் பரந்துபட்ட அறிவும் கொண்டவர்கள் மயன்கள். கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்தபோதுதான் ஐரோப்பியக் குடியேற்றம் ஏற்பட்டது. அதன் பிறகே முறைமைப்படுத்தப்பட்ட எழுத்து முறை பரவலாக அந்தப் பகுதிகளில் ஏற்பட்டது. ஆனால், மத்திய அமெரிக்கப் பகுதிகளில் (மயன்கள் வாழ்ந்தப் பகுதிகளில்) எழுத்து முறையைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயமாகும். அது மட்டுமல்லாமல் வானியல் மற்றும் கட்டடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்.

##~##
'யுனெஸ்கோ’ அமைப்பு மெஸோ அமெரிக்கர்களின் வசிப்பிடங்கள், வழிபடும் தலங்கள் பலவற்றை உலகம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய 'கலாசாரச் சின்னங்களாக’ அறிவித்து இருக்கிறது. மயன் இனத்தவர்கள் வாழ்ந்த ஆதிகாலத்திலேயே 'மயன் காலண்டர்’ ஒன்றை உருவாக்கி இருந்தனர். அந்த காலண்டர், நாட்களை அடையாளப்படுத்தும் கணக்கீட்டுக்கானதாக மட்டுமல்லாமல் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் நடக்கக் கூடிய விஷயங்களையும் ஆரூடங்களையும் பதிவுசெய்து இருந்தனர்.

மயன்களின் பிரதானக் கடவுள் சூரியன்தான். வானில் நிகழும் கிரகணங்கள், தட்பவெப்ப நிலை மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களது கணிப்புகள் இருந்தன. உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய காலம் வரையிலான நாட்களை 'சூரிய காலம்' என்று ஒட்டுமொத்தமாகக் குறிப்பிட்டாலும், சில ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கிய தொகுப்புக்களாகப் பிரித்தனர். அவர்களின் கணக்குபடி, நாம் வாழ்ந்துகொண்டு இருக்கும் இன்றைய காலகட்டம் 'ஐந்தாவது சூரிய காலம்’ என்றும், டிசம்பர் 21, 2012-ல் இந்த உலகம் அழிந்துவிடும் என்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கணித்து இருக்கின்றார்கள். அந்த மயன் காலண்டரை அடிப்படையாக வைத்துதான், ஹாலிவுட் திரைக்கதை ஆசிரியர்கள் தங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டபடி இருக்கிறார்கள்.

மயன் இனத்தவர்கள் வாழும் பல்வேறு நாடுகளை ஸ்பெயின் ஆக்கிரமித்துக் கைப்பற்றிய பின்னர், ஸ்பானிய மக்களோடு மயன் இனத்தவர்கள் இணைந்து ஒரு புதிய கலப்பு இனமாக மாறிவிட்டனர். மயன் இனத்தவர்களின் கலாசாரம், பண்பாடு, மெள்ள மெள்ள அழிந்துவருகிறது. எஞ்சி இருக்கும் மயன் இனத்தவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு சிறுசிறு இனக் குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றனர்.                  

2012-ல் உலகம் அழியப்போவதாக சொல்லப்படும் ஆருடங்களை, அனுமானங்களை எந்த அறிவியல் மனமும் ஒப்புக்கொள்ளாது. ஆனால், மொழி மற்றும் கலாசாரங்களின் மீது தொடுக்கப்படும் எதேச்சதிகார படையெடுப்புகளை பற்றிய எச்சரிக்கையாகக் கருத முடியும்.

திரைக்குப் பின்னால்...

வலையோசை

அடுத்த தலைமுறைக்கான தலைவர்களைப் புரட்சியிலோ, புத்தகங்களிலோ, சமகால சமூக வெளியீடுகளிலோ தேடாமல்  திரையரங்கங்களில் தேடுபவர்கள் நம் தமிழர்கள். அரசியலில் மாற்றம் என்பது சித்தாந்தரீதியாக இருக்க வேண்டுமே தவிர, தனி மனிதர்கள் மூலம் அல்ல என்ற உணர்வு  இல்லாமல் போனதற்குக் காரணம் நமக்கு அரசியல் குறித்தும் தெளிவும் இல்லை; திரைப்படம் குறித்தும் தெளிவும் இல்லை என்பதே.

திரைப்படங்களில் காட்டப்படும் பாத்திரங்களில் அதீத ஆற்றல், பிரமாண்டம் எல்லாம் அந்தப் பாத்திரங்களாக நடிப்பவர்களின் வெளிப்பாடு அல்ல... அதற்குப் பின்னே பல நூறு தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று புரிந்தால் தமிழகத்தின் அரசியல் வேறு மாதிரி இருந்திருக்கக் கூடும்.

பகடைக் காய்களா குழந்தைகள்?

வலையோசை

உலகின் அதிகபட்ச சந்தோஷக்காரர்களாக இரண்டு பிரிவினரைக் குறிப்பிடுவார்கள். 1. மனநிலை பிறழ்ந்தவர். 2. குழந்தைகள். இரண்டு பிரிவினருக்கும் கள்ளங்கபடம் இல்லை. இரண்டு பிரிவினருக்கும் நீண்ட காலத் துயரங்கள் இல்லை.

பிரச்னை, அவர்களுக்கு சிகிச்சை அளித்து நம்மைப் போலவே மாற்ற நினைக்கும் இடத்தில் இருந்துதான் துவங்குகிறதோ என்ற சந்தேகம் அவ்வப்போது எழுந்தபடியே இருக்கிறது. தேர்வுகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட மாதங்கள் துவங்கியவுடனே எழுகிற பதற்றம் குழந்தைகளைவிடப் பெற்றோர்களுக்கு அதிகமாகி விடுகிறது. எவ்வளவு நீளமான பட்டங்களைப் பெயர்களுக்குப் பின்னால் தாங்கி நின்றாலும் குழந்தைகளைப் படிக்கவைக்கிற முயற்சியில் முட்டாளாக நம்மை உணர்கிற தருணம் உறுத்தியபடியேதான் இருக்கிறது!