Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

38 டாலர்கள்!

ஃபேஸ்புக்கின் தொடக்கப் பங்கு விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது இதுதான். ஃபேஸ்புக்கின் பங்குகள் விற்கத் தொடங்கியதும், சற்றே அதிகரித்த பங்கு மதிப்பு சில மணி நேரங்களில் சடசடவெனக் குறைய ஆரம்பித்தது. ஆச்சர்யத்துக்கு உரிய நிகழ்வு இது. காரணம், பொதுச் சந்தைக்குத் தயாராகிய கடைசி சில நாட்களில், இந்தப் பங்குக்கு இருக்கும் அதிகப்படியான டிமாண்ட் பற்றிய செய்திகள் வந்தபடியே இருந்தன. பொதுவாக, இதுபோன்ற செய்தி வெளிவந்தால், அந்தப் பங்கின் விலை சந்தையில் முதல் நாளில் இருந்து அதிகரிக்க வேண்டும். ஆனால், ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரை நிலைமை தலைகீழாகிவிட்டது.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

காரணம் இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், மிகப் பெரிய காரணியாகப் பலரும் ஆள்காட்டி விரலைச் சுட்டிக்காட்டுவது தங்களது பங்குகளை விற்க ஃபேஸ்புக் தேர்ந்தெடுத்த சந்தை... நாஸ்டாக் (NASDAQ) (www.nasdaq.com/) .

கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட பல டெக் நிறுவனங்களின் தேர்வு இந்தச் சந்தைதான். பாரம்பரிய முறையில் பங்குத் தரகர்கள் நிறுவனப் பங்குகளை ஒருவரிடம் இருந்து மற்றவர் மாட்டுச் சந்தை ஸ்டைலில் வாங்கியபடி இருந்த முறையை மாற்றி தொழில்நுட்பத்தைப் புகுத்தியது நாஸ்டாக். ஆனால், இப்படி மேம்பட்ட தொழில்நுட்பமே நாஸ்டாக்குக்குப் பிரச்னையாகிவிட்டது. பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் இணையம் மூலமாகப் பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமாகத் தயாரித்துவைத்திருந்த ஆர்டர்களைச் சரிவரப் பூர்த்திசெய்யாமல் நாஸ்டாக் சந்தையே சுணங்கிப்போனது. 'இன்ன விலையில் வாங்கவும்’ என்று முதலீட்டு நிறுவனங்கள் கொடுத்திருந்த ஆர்டர்கள் செயலாக்கப்படவில்லை என்பதே சந்தை முடியும் வரை பங்குகளை வாங்கி விற்கும் தரகர்களுக்குத் ( Stock Brokers ) தெரியவில்லை. தொடங்கியபோது என்ன விலையில் ஆரம்பித்ததோ, அந்த நாளின் இறுதியில் அதே விலைக்குத் திரும்ப வந்துவிட்டது!

நாஸ்டாக்கின் மீது கடும் கோபத்தில் பலரும் வழக்கு தொடர்ந்திருப்பது ஒரு புறம் இருக்க, 'இந்தப் பங்கு விலை சரிவுக்கு நாஸ்டாக் காரணம் இல்லை. ஃபேஸ்புக்கின் பிஸினஸ் மாடல் அத்தனை வலுவானது அல்ல; அவர்களுடைய வருமானம் சரிந்து இருப்பதை அவர்களே ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இதை அறிந்து முதலீட் டாளர்கள் வாங்கிய பங்குகளை விற்பதால்தான், விலை சரிந்தபடி இருக்கிறது’ என்ற வாதங்களையும் பல இடங்களில் கேட்க முடிகிறது.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

எது எப்படி இருந்தாலும், சரேலெனச் சறுக்கியிருக்கும் பங்கு விலையைப் பற்றிய விவாதங்கள் ஃபேஸ்புக்கின் முக்கியத்துவத்தையோ, அந்த நிறுவனம் டெக் உலகில் உண்டாக்க முடிகிற இடையீடு வலிமைக்கோ சம்பந்தம் இல்லாதவை என்பது எனது கருத்து.

கொசுறு செய்தி: ஒரு வீட்டைக் கட்டின பிறகுதான் கல்யாணம் முடிப்பேன் என்பது போன்ற மத்யம டைப் கனவுகள் இருந்ததோ என்னவோ தெரியவில்லை. பொதுச் சந்தையில் நுழைந்ததும் பில்லியனரான ஃபேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பெர்க் அடுத்த நாளே தனது வீட்டுக்குப் பின்னால் இருக்கும் புல்வெளியில் ரொம்ப சிம்பிளாகத் திரும ணம் செய்துகொண்டது மீடியாக்களில் அத்தனை முக்கியச் செய்தியாக வரவில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் தவிர்த்து, டெக் உலக ஜாம்பவான்கள் அனைவருமே தாங்கள் ஈட்டிய செல்வ வளங்களைப் பளீரெனத் தெரியும் வகையில் செலவழிப்பதைப் பார்த்தவர் களுக்கு, ஸக்கர்பெர்க்கின் எளிமை சற்றே ஆச்சர்யமூட்டியதைப் பார்க்க முடிகிறது. தொழில் முனைய விரும்பும் இளைஞர்களுக்கு ஸக்கர்பெர்க் நல்ல ரோல் மாடல்.  

இப்போது கூகுள் Vs ஆரக்கிள்...

தன்னுடைய காப்புரிமைகளைக் களவாடி விட்டது கூகுள் என ஆரக்கிள் தொடர்ந்து இருந்த வழக்கில் ஆரக்கிளுக்குச் சாதகமான முதல் கட்டத் தீர்ப்பு வந்ததைச் சொல்லி இருந்தேன். சில நாட்களுக்கு முன் வந்த அடுத்த கட்டத் தீர்ப்பு கூகுளுக்குச் சாதகமாக அமைந்திருக்கிறது. 'ஆரக்கிள் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும் காப்புரிமைகளைத் தெரிந்தே கூகுள் திருடியதாகத் தெரியவில்லை’ என்று திட்டவட்டமாகத் தீர்ப்பு கிடைத்திருப்பது கூகுளுக்கு மகிழ்ச்சி.

வளரும் நாடுகளில் பிரபலமாக இருக்கும் ஆண்ட்ராயிட் அலை இயங்கு மென்பொருளின் எதிர்காலம் என்ன ஆகுமோ என கவலைகொண்டவர்கள் சற்றே நிம்மதிப் பெருமூச்சுவிடலாம்.

சென்ற வார 'வட போச்சே’ பரிதாபம் நிகழ்ந்திருப்பது யாஹூவின் தலைமைச் செயல் அதிகாரியாகச் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்காட் தாம்ப்ஸனுக்கு. 70-களில் அக்கவுன்டிங் பிரிவில் பட்டம் வாங்கியிருந்ததை, கணிப்பொறியியல் துறையில் பட்டம் வாங்கியதாக தன்னுடைய ரெஸ்யூமில் தெரிவித்திருப்பது தவறானது என்ற காரணத்தைக் காட்டி அவரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கிவிட்டது யாஹூ நிறுவனத்தின் இயக்குநர் குழு. பொதுச் சந்தையில் இருக்கும் நிறுவனங்களை நடத்துபவர் களின் செயல்பாடுகள் நம்பிக்கை கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது இந்தச் சம்பவம்!

-Log off