Published:Updated:

பார்க்கலாம்... கடவுள் எவ்வளவுதான் எடுக்குறார்னு ?

உ.அருண்குமார் படங்கள்: பா.காளிமுத்து

பார்க்கலாம்... கடவுள் எவ்வளவுதான் எடுக்குறார்னு ?

உ.அருண்குமார் படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
##~##

ராசாத்தி... ஒரு மாற்றுத்திறனாளி. அதைப் பற்றிக் கவலைப்படாமல், மாற்றுத்திறனாளிகளுக்கான காமன்வெல்த் விளையாட்டில்  குண்டு எறிதல் போட்டியின் தர வரிசைப் பட்டியலில் நான்காம் இடத்தினைப் பெற்று இருப்பவர். இதுவரை குண்டு எறிதல் பிரிவில் கலந்து கொண்ட ஒரே தமிழ்ப் பெண் இவர்தான். சாதனைகளுக்கு நடுவே இவர் சந்தித்துவரும் சோதனைகளின் வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது புற்றுநோய்.

மதுரை திருமங்கலத்தில் வசிக் கும் ராசாத்தியை நேரில் சந்தித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. உடல் மெலிந்து, முகம் கருத்து, தலைமுடி உதிர்ந்து 32 வயதிலேயே 50 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் இருந்தார். ஆனாலும், வார்த்தைகளில் உற்சாகம் கொப்பளித்தது.

''எனக்குப் பிறவியிலேயே போலியோவினால் இரண்டு கால்களும் வலது கையும் பாதிச்சிருச்சு. ஒரு கம்பெனியில் வேலைபார்க்கும்போது மாற்றுத் திறனாளியான என் கணவர் பாலமுருகனைச் சந்திச்சேன். என்னால பிடிமானம் இல்லாம நடக்க முடியும். ஆனா அவரால, இன்னொருத்தர் துணை இல்லாம நடக்கவே முடியாது. மனம் விரும்பி  ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்போ அவர்  பெட்டிக் கடை வெச்சிருக்கார்.

பார்க்கலாம்... கடவுள் எவ்வளவுதான் எடுக்குறார்னு ?

இந்த நிலைமையில்தான் முதல்முறையா 2007-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டி நடந்துச்சு. அதில் 'குண்டு எறிதல்’ பிரிவில் கலந்துக்கிட்டு முதல் பரிசு வென்றேன். நான் வேலை பார்க்கிற கம்பெனி ஓனர் என்னைக் கூப்பிட்டு, 'உனக்குத் திறமை இருக்கு. நீ கண்டிப்பா சாதிப்ப’னு உற்சாகம் கொடுத்து, லண்டன்ல நடக்கப்போற, உலக அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கானப் போட்டிகள் (பாரா ஒலிம்பிக்) பத்திச் சொன்னார். அத்துடன் லண்டன் போறதுக்கு நான் வேலை பார்த்த கம்பெனியே ஸ்பான்சர் செஞ்சுது. அந்தப் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். அப்புறம் பெங்களூருவில் 60 நாடுகள் கலந்துக்கிட்ட போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றேன். 2010-ல் காமன்வெல்த் போட்டியில் தேசிய அளவில் நாலாவது இடத்தைப் பிடிச் சேன்.  

காமன்வெல்த் போட்டிக்குப் போய்வந்த பிறகு, உடல் எடை குறைஞ்சு தலைமுடி உதிர ஆரம்பிச்சுது. ஹாஸ்பிடல் போகப் பணம் இல்லை. என்னோட காது தோட்டை அடகு வெச்சுப் பணம் புரட்டினேன். டாக்டர் தைராய்டு கேன்சர்னு சொன்னாரு. எனக்கு அந்த அதிர்ச்சியிலேர்ந்து மீளவே முடியல.  எங்க ரெண்டு பேருக்குமே நிலையான வருமா னம் எதுவும் கிடையாது. எப்படி ட்ரீட்மென்ட் எடுக்கப்போறோம்னு திகைச்சு உட்கார்ந்துட்டோம். விஷயம் தெரிஞ்சு என் கம்பெனியில் இருந்துதான் பண உதவி செஞ்சாங்க.

பார்க்கலாம்... கடவுள் எவ்வளவுதான் எடுக்குறார்னு ?

என் சிரமத்தைப் பத்திக், கேள்விப்பட்ட  கலைஞர் அய்யா என்னை நேர்ல கூப்பிட்டுப் பேசி, அரசாங்க வேலை தர்றதா சொல்லிஇருந்தார். ஆனா, அதுக்குள்ள ஆட்சி மாறிடுச்சு. ஜெயலலிதா அம்மாவும் என்னைப் பத்திக் கேள்விப் பட்டு, விசாரிக்க அதிகாரிகளை அனுப்பி    வெச்சாங்க. அந்த அதிகாரிகள் என்கிட்ட'அரசாங் கத்திலேர்ந்து ஏதும் உங்களுக்கு பண உதவி வேணுமா’னு கேட்டாங்க. ஆனால், நான் 'பணம் வேணாங்கய்யா, நிரந்தரமா ஏதாவது ஒரு வேலை போட்டுக்கொடுங்க’ன்னு சொன்னேன். 'சரி’னு சொல்லிட்டுப் போயிருக்காங்க.  

இவ்வளவு கஷ்டத்துக்கு நடுவுலேயும் கேன்ச ருக்கு ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கேன். இருந்தும் நான் என்னோட முயற்சியைக் கைவிடலை. ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டே, போன நவம்பர் மாசம் நடந்த 'பாரா ஒலிம்பிக் அத்லெட்டிக்ஸ்’ போட்டிகள்ல கலந்துக்கிட்டு வட்டு எறிதல்ல தங்கப் பதக்கமும் ஈட்டி எறிதல்ல முதல் பரிசையும் வென்றேன்.  ஒரே ஒரு வருத்தம், இப்ப குண்டு எறிதல் போட்டியில் கலந்துக்க முடியலை. தோள்பட்டையும், கழுத்தும் பயங்கரமா வலி எடுக்குது. அதனால குண்டு எறிதல் போட்டியில் கலந்துக்கிறதை நிறுத்திட்டேன். கூடுதல் வலியா என் மூத்த பொண்ணு  சமீபத்துல ஒரு விபத்துல இறந்துபோயிட்டா. இவ்வளவு கஷ்டத்துக்கு இடையிலே ஆகஸ்ட் மாசம் லண்டன்ல நடக்க இருக்குற பாரா ஒலிம்பிக் போட்டியில கலந்துக்க நான் செலெக்ட் ஆகியிருக்கேன். நம்பிக்கையோட கலந்துக் கலாம்னு இருக்கேன்.

பார்க்கலாம்... கடவுள் எவ்வளவுதான் எடுக்குறார்னு ?

பார்க்கலாம்... கடவுள் எவ்வளவுதான் எங்க கிட்டே இருந்து எடுத்துக்கிட்டே இருப்பார்னு?'' வெறுமையாகச் சிரிக்கிறார் ராசாத்தி.