Published:Updated:

என் ஊர் - அண்ணா நகர்: திவ்யதர்ஷினி

VJ Divyadharshini

அழகென்ற சொல்லுக்கு அண்ணா நகர்!

என் ஊர் - அண்ணா நகர்: திவ்யதர்ஷினி

அழகென்ற சொல்லுக்கு அண்ணா நகர்!

Published:Updated:
VJ Divyadharshini
##~##

''டி.வி. ஷோவில் கேமரா முன்னாடி எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசிருவேன். ஆனால், இப்படித் திடுதிப்புனு வந்து 'ஊரைப் பத்திச் சொல்லுங்க’ன்னா நான் என்ன சொல்றது? அண்ணா நகரைப் பற்றி என் மனசுல உள்ளதைச் சொல்றேன். ஆனா, கலாய்க்கக் கூடாது. ஓ.கே-வா?'' - கண்டிஷனோடுப் பேசுகிறார் சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

 ''நான் பிறந்தது கீழ்ப்பாக்கம். ஆனா, என் வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்கள் எல்லாமே அண்ணா நகர்ல இருக்கும்போதுதான் நடந்துச்சு. அண்ணா ஆதர்ஷ் காலேஜ்,    சி.எஸ்.ஐ. மோசஸ் ஸ்கூல்னு நான் படிச்சதும் சரி, இன்னைக்கு வாழ்றதும் சரி, அண்ணா நகர்லதான். 'உனக்கு  டார்ஜிலிங் பிடிக்குமா... சிம்லா பிடிக்குமா?’னு கேட்டா 'எனக்கு அண்ணா நகர்தான் பிடிக்கும்’னு சொல்வேன். ஏன்னா, சென்னையிலேயே அழகான ஏரியான்னா அது, அண்ணா நகர்தான்.

என் ஊர் - அண்ணா நகர்:  திவ்யதர்ஷினி

வி.ஐ.பி-க்களின் வீடுகள்,  சென்னையின் பெரிய பார்க்கான டவர் பூங்கானு எங்க ஏரியாவுக்குன்னே சில பெருமைகள் இருக்கு. அதே போல சென்னையில அதிகமா மரங்கள்  இருக்குறதும் எங்க ஏரியாவுலதான். மரங்கள் இருக்கிறதால, எவ்வளவு வெயில் அடிச்சாலும் தெரியாது. இங்க உள்ள ஒவ்வொரு வீடுமே அழகு. ஏழாம் வகுப்புப் படிக்கிறப்ப 'உனக்கு பைக் கத்துத் தர்றேன்’னு சொல்லிட்டு நைட் 10 மணிக்கு பக்கத்துல இருக்கிற கிரவுண்டுக்கு என்னை எங்கப்பா கூட்டிட்டுப் போனார். பைக் ஓட்டும்போது, பைக்கைப் பள்ளத்துல விட்டு, தலைகுப்புற விழுந்து அடிபட்டது நேத்து நடந்த மாதிரி ஞாபகத்தில் இருக்கு. அப்போ விட்டதுதான், இன்னைக்கு வரைக்கும்  நான் பைக்கைத் தொடவே இல்லை.  

ஸ்கூல் படிக்கிறப்ப மதியச் சாப்பாட்டுக்காக தர்ற 10 ரூபாய்ல 8 ரூபாய்க்கு மட்டும் சாப்பிடுவேன். மீதி இருக்கிற 2 ரூபாய்ல ஸ்கூல் முன்னாடி இருக்கிற 'அய்யனார் ஸ்டோர்’ல சாக்கோ ஸ்டிக் வாங்கிச்  சாப்பிட்டுக்கிட்டே ஃப்ரெண்ட்ஸோட நடந்து வந்ததை  நினைச்சா சந்தோஷமா இருக்கு. அதே மாதிரி  ஸ்கூலுக்குக் கௌம்புறப்பத் தினமும் எங்க தாத்தா நாலு முறுக்கு, நாலு பர்ப்பி வாங்கித் தருவார். அதை ஸ்கூலுக்கு எடுத்துட்டுப் போய் ஃப்ரெண்ட்ஸுக்கு ஷேர் பண்ணிக் கொடுத்து சாப்பிடுவேன். ஆறு மாசத்துக்கு முன்னால  தாத்தா இறந்துட்டாரு. அவர் ஞாபகம் வரும்போது எல்லாம் ஃப்ரெண்ட் ஸோட சாப்பிட்ட பர்ப்பியும் முறுக்கும் ஞாபகத்துக்குவரும்.

என் ஊர் - அண்ணா நகர்:  திவ்யதர்ஷினி

அண்ணா நகர்ல எனக்குப் பிடிச்ச இடங்கள்ல அண்ணா ஆதர்ஷ் காலேஜும் ஒண்ணு.  காலேஜுக்கு வெளியிலப் பழம் விக்கிற பாட்டியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தப் பாட்டிக்கிட்ட மாம்பழம் கேட்டா, 'மாம்பழத்தைவிட கொய்யா வாங்கிச் சாப்பிடு. உடம்புக்கு நல்லது’னு அக்கறையோடச் சொல்வாங்க. காலேஜ் முடிஞ்சதும் பக்கத்துலயே இருக்கிற 'காபி டே’யில குடிச்ச காபி யின் டேஸ்ட்டும் 'கங்கோத்ரி’யில் சாப்பிட்ட பானிபூரியின் ருசியும் மறக்கவே முடியாது.  

சின்ன வயசுலப் பார்த்த அண்ணா நகர் இன்னைக்கு எவ்வளவோ மாறிடுச்சு.  தினம் தினம் நான் பார்த்து ரசிச்ச அண்ணா ஆர்ச்சை இடிக்கப்போறாங்கனு கேள்விப்பட்டப்ப, ரொம்ப வருத்தமா இருந்துச்சு. மாற்றங்களை ஏத்துக்கணும்தானே. ஆர்ச் இல்லைனா என்ன, அழகான அகலமான சாலைகள், ஏகப்பட்ட ரெஸ்டாரென்ட்டுகள், ஷோ ரூம்கள், ஐயப்பன் கோயில்னு எப்பவும் அண்ணா நகர் செம அழகுதான்!''

- சா.வடிவரசு

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

• நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஏதாவது ஒரு ஃப்ரெண்ட் வீட்டுக்குச் சென்று விதவிதமான உணவுகளை ஹோட்டலில் ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்துத் தோழிகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது பிடித்தமான பொழுதுபோக்கு!

•  அதி தீவிரமான ரஜினி ரசிகை. ரஜினி உடல்நிலை முடியாமல் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்காக வீட்டுக்கு அருகே உள்ள அம்மன் கோயிலில் அர்ச்சனை செய்திருக்கிறார்!

•  ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் டி.வி-யில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் திவ்யதர்ஷினி!

• அண்ணா ஆதர்ஷ் கல்லூரியிலேயே இளங்கலை, முதுகலைப் படித்தவர் தற்போது அங்கேயே எம்.ஃபில். படிப்பும் படித்துவருகிறார்!