Published:Updated:

வீடே கோயில்... மனைவியே தெய்வம்!

நெகிழவைக்கும் காதல்

வீடே கோயில்... மனைவியே தெய்வம்!

நெகிழவைக்கும் காதல்

Published:Updated:

''இந்திராணி எனக்கு மனைவியா மட்டும் இல்ல... தாயாகவும் இருந்தாள். என்னை ஒரு மனுஷன் ஆக்கினது அவள்தான். அவள் என்னைவிட்டு எங்கேயும் போகலை; என்னுடன்தான் வாழ்ந்துவருகிறாள்.' மனைவியின் சிலைக்கு உணவு படைத்துக்கொண்டே பேசுகிறார் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்!

வீடே கோயில்... மனைவியே தெய்வம்!
##~##

மனைவியின் பிரிவைத் தாங்கமாட்டாமல், அவருடைய முழு உருவச் சிலையை வீட்டுக்குள் அமைத்து தினமும் அந்தச் சிலையுடன் மனம்விட்டுப் பேசும் மனிதர் கோவிந்தராஜ். 'எனக்கு வயது 60. மேட்டுப்பாளையம் நகராட்சியில் எழுத்த ராக இருந்து ஓய்வு பெற்றேன். என்னுடைய மகன் செந்தில் குமார் மற்றும் மகள் பூர்ணிமாதேவி. திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார்கள்.

நான் குடியிருந்த தெருவில்தான் இந்திராணியின் வீடும் இருந்தது. இந்திரா பார்க்க அவ்வளவு அழகு. நான் அவள் வீட்டைக் கடந்துதான் என்னுடைய அலுவலகம் போக வேண்டும். அவளைப் பார்க்கும்போது இவள் எனக்காகவே பிறந்தவள் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒருநாள் இந்திரா பள்ளிக்கூடம் போகும் வழியில் அவளை மறித்து என் காதலைச் சொன்னேன்.

பதில் சொல்லாமல் போய்விட்டாள்.  அவளாகப் பதில் சொல்லட்டும், அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் வற்புறுத்தக் கூடாது என்று அமைதியாக இருந்தேன். மூன்று நாட்கள் கழித்து என்னைப் பார்த்துச் சிரித்தாள். அந்த நொடி அவளின் காதலை உணர்ந்தேன். எங்கள் காதலுக்கு அவள் வீட்டில் எதிர்ப்பு இல்லை. எங்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு.  காரணம், சாதி. என் வீட்டில் அவசரமாக எனக்குத் திருமணம் ஏற்பாடு செய்தார்கள்.

வேறு வழி இல்லாமல் நானும் இந்திராணியும் பழநி கோயிலுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டோம். மைசூர் சென்றுவிட்டு சில வாரங்கள் கழித்து ஊருக்குத் திரும்பினோம். இருவரின் வீட்டிலும் எங்களை ஏற்கவில்லை. வாடகைக்கு வீடு பிடித்து வாழ்க்கையைத் தொடங்கினோம். இந்திராணி எனக்குத் தாயாகவும் தாரமாகவும் இருந்து, பாசத்தைக் காட்டினாள்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் எனக்குப் பணி உயர்வு கிடைத்தது. குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களைப் படிக்கவைத்துத் திருமணமும் செய்துகொடுத்தோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். திருமணம் புரிந்த நாளில் இருந்து ஒருநாள் ஏன்... ஒரு நிமிடம்கூட எங்களுக்குள் கருத்து முரண்பட்டது இல்லை; அவள் எதையும் என்னிடம் ஆசைப்பட்டுக் கேட்டது இல்லை. அவள் அதிகபட்சமாக ஆசைப்பட்டது ஒன்றே ஒன்றுதான். அது சொந்த வீடு.

வீடே கோயில்... மனைவியே தெய்வம்!

மேட்டுப்பாளையத்தில் நிலம் வாங்கினேன். சமையல் அறை, படுக்கை அறை, பூஜை அறை எனப் புது வீட்டுக்குப் பார்த்துப் பார்த்து ஸ்கெட்ச் போட்டது அவள்தான். எல்லா வேலைகளும் முடிந்தது. விடிந்தால் பால் காய்ச்சும் நிகழ்ச்சி. அன்று இரவு 'லேசாக நெஞ்சு வலிக்குது’ என்றவளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினேன். போகும் வழியிலேயே என்னைத் தவிக்கவிட்டுப் போய்விட்டாள்...'' என்றவர் பழைய நினைவுகள் தாக்க, அழத் துவங்கினார்.

சிறிது நேரம் கழித்து... ''அதன்பிறகு எனக்கு வாழவே விருப்பம் இல்லை. குறிப்பாக, இந்த வீட்டைப் பார்க்கவேப் பிடிக்கவில்லை. இந்த வீடே அவளது உயிரைப் பறித்துக்கொண்டது போல இருந்தது. சொந்த வீட்டைப் பூட்டிவைத்துவிட்டு வாடகை வீட்டில் தனியாகத் தங்கினேன். திடீர் என்று ஒருநாள், அவள் விருப்பப்பட்டு ஆசையாக கட்டிய அந்த வீட்டை ஒதுக்குவது, அவளுக்குச் செய்யும் துரோகம் என்று தோன்றியது. அவள் இறந்த பின்பும்  அவள் இருப்பது போல் நினைத்து அவளிடம் பேசிக் கொண்டுதான் இருந்தேன். அப்போதுதான் அவளைச் சிலையாக வடித்தால் என்ன என்று தோன்றியது.

மத்தவங்ககிட்ட என் மனைவி சிலையை வடிக்கச் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு ஓரளவு கம்பி வேலை, கொத்தனார் வேலைத் தெரியும். நானே அவள் சிலையை வடிச்சேன். சும்மா சொல்லக் கூடாது. அவளே நேரில் வந்த மாதிரி தத்ரூபமாக சிலை உருவானது. முன்பு இந்த வீட்டுல  அவளுடன் ஒன்றாக வாழ நினைத்தேன். அவள் இப்போது இல்லை. ஆனாலும், அவளுடன் இப்பவும் நான் வாழ்ந்துட்டு வர்றேன்...'' என்கிறார் உருக்கமாக!

வீடே கோயில்... மனைவியே தெய்வம்!

- சா.வடிவரசு 
படங்கள்:  வி.ராஜேஷ்