Published:Updated:

வலையோசை - இன்றைய வானம்

வலையோசை - இன்றைய வானம்

வலையோசை - இன்றைய வானம்

வலையோசை - இன்றைய வானம்

Published:Updated:
வலையோசை - இன்றைய வானம்
வலையோசை - இன்றைய வானம்

 தமிழ்ச்செல்வன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர். மதுரையில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் பணிபுரிகிறார். தன்னுடைய பதிவுகள் மட்டுமல்லாமல்; தன்னுடைய நண்பர்களின் கட்டுரைகள், கவிதைகள்,  இன்னும் பல தகவல்களையும்   (http://indrayavanam.blogspot.in) என்கிற வலைப்பூவில்

வலையோசை - இன்றைய வானம்

தொடர்ந்து எழுதிவருகிறார், அவருடைய வலைப்பூவில் இருந்து...

 புதிய அடிமைகள்!

வலையோசை - இன்றைய வானம்

மனிதர்களை மனரீதியாக அடிமையாக்கும் போதைப் பொருளாக ஃபேஸ்புக் மாறிவருகிறது என்று நார்வேயின் பெர்ஜன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரித்து இருக்கிறார்கள். எந்த அளவுக்கு ஒரு மனிதர் ஃபேஸ்புக்கின் அடிமையாகிறார் என்பதை அளப்பதற்கான அளவீட்டையும் அவர்கள் உருவாக்கி உள்ளனர். ஃபேஸ்புக் என்ற சமூக வலைதளம் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆசிய மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் ஜனநாயக உரிமைகள் கோரி நடந்த போராட்டங்களுக்கு மக்களைத் திரட்ட ஃபேஸ்புக்தான் பெரிய அளவில் பயன்பட்டது. தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடந்துவரும் போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் ஃபேஸ்புக்கைதான் பயன்படுத்திவருகிறார்கள். பெரும்பாலான நேரத்தினை ஃபேஸ்புக்கில் செலவிடுவது, தொடர்ந்து பதிவுகளைப்போடுவது போன்றவை மனிதர்களை நாளடைவில் அடிமை மன நிலைக்கு ஆளாக்கிவிடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  ஏதாவது ஒரு காரணத்தால் சமூக வலைதளத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், கடுமையான மன அழுத்தத்தை சந்திக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். 423 மாணவர்களைக்கொண்டு இந்த ஆய்வினை நார்வே பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்திருக்கிறார்கள். சமூக வலைதளத்தினைத் தொடர்ந்து பயன்படுத்திவரும் இவர்களில், அப்படி வாய்ப்பு கிடைக்காதபோது பதற்றம் அடையாமல் இருந்தது வெகு சிலரே என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்!

 பெட்ரோல் நாடகம்!

வலையோசை - இன்றைய வானம்

பொதுவாக கிராப்புறங்களில் 'ஏழரையை இழுத்துவிட்டுவிட்டாயே' என்று கூறுவார்கள். இன்றைக்கு மத்தியில் ஆட்சி செய்துகொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசு மக்களுக்கு ஏழரையை இழுத்துவிட்டு உள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நள்ளிரவில் பெட்ரோல் லிட்டருக்கு ஏழரை ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் இந்திய மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.

ஆனால், 'இந்தப் பூனையும் பால் குடிக்குமா’ என்பதுபோல மத்திய கூட்டணி ஆட்சிக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், 'இந்த விலை உயர்வுக்கும் அரசுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை, இது எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவு' என்று கொஞ்சம்கூட நாக்கு நடுங்காமல் பொய் உரைக்கிறார். இந்த விலை உயர்வை அரசு தீர்மானிக்கவில்லை என்றால், எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நச்சரித்தபோதும், உ.பி. உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களின்போது எண்ணெய் விலை உயர்வை நிறுத்திவைக்க காங்கிரஸ் கட்சியால் எப்படி முடிந்தது? அப்போது மட்டும் சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை குப்புற விழுந்துக்கிடந்ததா? அல்லது இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து சந்திர மண்டலத்தில் சஞ்சரித்துக்கொண்டு இருந்ததா?

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் பெட்ரோல் விலை நமது நாட்டைவிடக் குறைவாகவே உள்ளது. உதாரணமாக, பாகிஸ்தானில் பெட்ரோல் விலை இந்தியாவை விட 26 சதவிகிதம் குறைவு.

இந்த லட்சணத்தில் டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையையும் உயர்த்தப்போவதாக சங்கு ஊதி மணியடிக்கிறது மன்மோகன் சிங் அரசு. சிறப்புச் சலுகையாக விஷத்தின் விலையை மட்டும் குறைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இருக்கிறதோ, என்னவோ?

 பாலித்தீன் இல்லாத உலகு செய்வோம்!

வலையோசை - இன்றைய வானம்

இன்றைய தலைமுறையினருக்கு வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பிளாஸ்டிக் 'கேரி பேக்’ மாறிவிட்டது. இப்படி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை நாம் முறையாக அப்புறப்படுத்துவதே  இல்லை. மாறாக, பூமிக்குக் கேடு விளைவிக்கும் வகையில் கண்ட இடத்தில் வீசுகிறோம். பாலித்தீன் எனப்படும் வேதிப் பொருளால் உருவாக்கப்படும் இந்த பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, காற்று மண்டலம் பெரிதும் மாசுபடுவதுடன் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு சம்பந்தப்பட்ட பல வகை நோய்கள் ஏற்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் பைகள் நீர்நிலைகளையும் நிலத்தடி நீரையும் தடுத்து, நீர் ஆதார வழிகளின் நெட் வொர்க்கையும் பாதிக்கிறது. இந்த வகையில் 'கேரி பேக்’ எனும் பாலித்தீன் பைகளும் 'யூஸ் அண்ட் த்ரோ’ பிளாஸ்டிக் கப்புகளும் இயற்கையை அழிப்பதில் முன்னணியில் உள்ளன.  

பிளாஸ்டிக் பைகளின் சீர்கேட்டைத் தடுக்க கடைகளுக்கோ, இட்லி மாவு அல்லது உணவுப் பொருட்களோ வாங்கச் செல்லும்போது அதற்கு உண்டான பாத்திரங்களைக் கொண்டுசெல்வதன் மூலம் பாலித்தீன் பைகளைப் பயன்படுத்துவதில் இருந்துத் தப்பிக்க முடியும். 'பாலித்தீன் பைகளைப் பற்றி ஏன் இவ்வளவு கவலை?’ என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். மலை போலக் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள் அணுகுண்டை விட ஆபத்தானது. அடுத்த தலைமுறையினருக்கு இது பேராபத்தாக முடியும். நிலைமை மோசமாவதைத் தவிர்க்க பிளாஸ்டிக் பைகளுக்கு நிச்சயம் தடை விதிக்க வேண்டும். பாலித்தீன் இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் எல்லோரும் இணைந்து செயல்படுவோம்!