Published:Updated:

நடிகன் என்று மாறியாச்சு !

இ.கார்த்திகேயன் படங்கள்: எல்.ராஜேந்திரன்

நடிகன் என்று மாறியாச்சு !

இ.கார்த்திகேயன் படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
 ##~##

வயது 72 என்றால்  நம்பச் சிரமமாகத்தான் இருக்கிறது. நாடகத் துறையில் 52 வருடங்கள் அனுபவம் பெற்ற அருணாச்சலம் பற்றி வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் சொல்லி இருந்தார் வாசகர் மணிகண்டன். அருணாசலத்தை திருநெல்வேலி டவுன் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தோம்.

''சின்ன வயசுல இருந்தே நடிப்புன்னா எனக்கு ரொம்ப இஷ்டம். பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆருனு எல்லா ஹீரோக்கள் நடிச்ச படத்துக்கும் என்னுடைய அப்பா என்னைக் கூட்டிட்டுப் போவாரு. டூரிங் டாக்கீஸ்ல கண் இமைக்காமப் படத்தைப் பார்ப்பேன். முதல் நாள் பார்த்த படத்தை மறுநாள் நண்பர்கள் முன்னால நடிச்சுக் காட்டுவேன். அந்தக் காலத்து இ.எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் படிச்சேன். மேல படிக்க முடியலை.

நடிகன் என்று மாறியாச்சு !

எங்க ஊரில தமிழறிவு நாடக மன்றம், திருவள்ளுவர் கலா மன்றம், முத்தமிழ்க் கலை மன்றம், பாரதி கலை மன்றம்னு மொத்தம் நாலு நாடக மன்றம் இருந்துச்சு. பள்ளிக்கூடத்தில் இருந்து  வந்ததும் என்னுடைய கால் தானாக தமிழறிவு நாடக மன்றம் நோக்கிப் போயிடும். அங்க ஒத்திகை நடக்கிறதை ஒளிஞ்சு நின்னுப் பார்ப்பேன். காப்பி வாங்கிட்டு வர்றது, தண்ணீர் மொண்டு கொடுக்குறது, நாற்காலி எடுத்துப்போடுறது, ஸ்க்ரீன் கட்டுறதுனு எடுபுடி வேலைகள் பார்ப்பேன். 1958-ம் வருஷம்னு நினைக்கிறேன். நாடகக் கலைஞர்கள் எல்லாரும் சாப்பிட்டு முடிச்சதும்  பேசிட்டு இருந்தாங்க. அப்ப 'உனக்கு நடிக்கத் தெரியுமாடா?’னு ஒரு பெண் கலைஞர் கேட்டார். நானும் 'ஆமா’னு வேகமாத் தலையாட்டினேன். 'எங்க ஏதாவது நடிச்சுக் காட்டு’னு சொன்னதும்... முதல் நாள் கோயில் கொடையில் சுடலை மாடசாமி ஆடுன மாதிரி ''ஆதாரி ஓடு கையோ ஓ... ஓ.../மத்தியான வேளையிலே ஓ... ஓ...  / வாராரு சுடலை தெய்வம் ஓ... ஓ...  / தீப்பந்தம் எடுத்துக்கிட்டு ஓ... ஓ...''னு பாடிகிட்டே இடை இடையே ''தபுக்கு தபுக்கு தபுக்கு... தூம் தூம் தூம்...’ னு வாயாலேயே தாளச் சத்தம் கொடுத்தேன். ஆடி முடிச்சதும் கைதட்டிப் பாராட்டினாங்க. நாடகத்துல நடிக்குற வாய்ப்பும் கொடுத்தாங்க. என்னோட முதல் நாடகம் 'பிரேம பாசம்’. ரொம்ப ஆசையோட தயாராகியிருந்தேன்.  மழை பேஞ்சு நாடகம் கேன்சல். ஆனா, அடுத்ததா 'ராஜா தேசிங்கு’ நாடகத்துல காமெடியன், 'தங்கமணி’ நாடகத்துல போலீஸ், 'அசோகன் காதலி’-யில் ராஜகுரு, 'மாறவர்மன் காதலி’-யில் ராஜதந்திரி, 'பாண்டிய மகுடம்’நாடகத்தில் அமைச்சர்னு மொத்தம் 250 நாடகங்களுக்கு மேல நடிச்சிட்டேன்.

நடிகன் என்று மாறியாச்சு !

'அலங்காரி’ங்கிற நாடகத்துல கரும்பட்டை யான் குடும்பம், செம்பட்டையான் குடும்பம்னு ரெண்டு குடும்பங்கள் இருக்கும். இதில் நான் கரும்பட்டையான் குடும்பக் கதாபாத்திரத்திலே யும், 'கரகாட்டக்காரன்’ படத்துல நடிச்ச சண்முகசுந்தரம் செம்பட்டையான் குடும்பக் கதாபாத்திரத்திலேயும் நடிச்சோம். 'சதுரங்க சாணக்கியன்’ நாடகத்தில் 'பக்கோடா’ காதர், ஓமக்குச்சி நரசிம்மன் போன்றவர்களோட சேர்ந்து நடிச்சேன். அதில் ஓமக்குச்சி அரிவாள் தீட்டுறக் காட்சியப் பார்க்கவே ரொம்ப காமெடியா இருக்கும். முத்துராமன், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.வி.ராமதாஸ், குமரிமுத்து, 'என்னத்தே, கண்ணையானு நிறைய சினிமா நடிகர்களோட நடிச்சாச்சு.

நடிகன் என்று மாறியாச்சு !

இத்தனை வருஷமா நடிச்சாலும் இன்னும் நடிப்பு மேல உள்ள ஆசை குறையவே இல்லை. அதான் இப்பவும் சினிமாக்காரங்க வந்தா, தேடிப் போய் வாய்ப்புக் கேட்கிறேன். ரொம்ப முயற்சி பண்ணியதில், இப்போ மணிரத்னம் இயக்குற 'கடல்’ படத்தில் நடிக்கிறேன்.இப்போகூட என்னால எந்த கேரக்டரையும் பண்ண முடியும்'' என்றவர், உடனே ராஜா, ஜமீன்தார், பிச்சைக்காரன் மற்றும் முனிவர்போல விதவிதமாக நடித்துக் காட்ட ஆரம்பிக்கிறார்!