Published:Updated:

என் ஊர் - சாத்தான்குளமாக மாறிய 'சாஸ்தா குளம் !

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் மு.செய்யது முகம்மது ஆசாத் படங்கள்: சிதம்பரம், ஆ.முத்துக்குமார்

என் ஊர் - சாத்தான்குளமாக மாறிய 'சாஸ்தா குளம் !

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் மு.செய்யது முகம்மது ஆசாத் படங்கள்: சிதம்பரம், ஆ.முத்துக்குமார்

Published:Updated:

 சாத்தான்குளம்

##~##

''ஊரில் முன்பு புலமாடன் செட்டியாரும், ராமமூர்த்தி பிள்ளையும், அபுபக்கர் சாய்புவும்தான் கார் வைத்திருந்தார்கள். ஒரு அரசு மருத்துவரும் பஞ்சாயத்தில் வரிவசூலிப் பவரும்தான் சைக்கிள் வைத்திருந்தனர். மற்றபடி ஊரில் எல்லோருமே நடைராஜாக்கள்தான். ஊருக்குப் போவதை முதல்நாளே டிராம் வண்டி டிரைவரிடம் சொல்லிவைத்துவிட வேண்டும். அவர், மறுநாள் வீட்டின் முன்நின்று சத்தம் கொடுத்து நம்மை பஸ்சில்  அழைத்துச் செல்வார். முன்பு எங்கள் ஊர் கிராமமாக இருந்தது. பின் னர் தேர்வு நிலைப் பேரூராட்சி ஆகி, இப்போது தாலுக்காவாகிவிட்டது!'' - என் விகடனுக்காகத் தன்னுடைய ஊர் சாத்தான்குளம் பற்றிப் பெருமை பொங்கப் பேசுகிறார் வானொலிக் கலைஞரும் கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளரும் ஆன 73 வயது அப்துல் ஜப்பார்.

'அப்போது ஊரில் உள்ள குளங்களைக் குறிப்பிடும் பெயர்களையே ஊர்களுக்கும் பெயராக வைத்து அழைத்தார்கள். அந்த வகையில் 'சாஸ்தா’ குளம் என்பது சாத்தான்குளமாக மாறிவிட்டது.

என் ஊர் - சாத்தான்குளமாக மாறிய 'சாஸ்தா குளம் !

கமாலியா பள்ளிதான் எங்கள் ஊரில் 1930-ல் தொடங்கப்பட்ட முதல் பள்ளிக்கூடம். இன்று புலமாடன் செட்டியார் அரசு மேல் நிலைப் பள்ளி, புளியடி மாரியம்மன் இந்து பள்ளி, ஆர்.சி. ஆண்கள்-பெண்கள் பள்ளி, இப்ராஹீம் பள்ளி, ஹென்றி மெட்ரிகுலேஷன் ஆங்கிலப் பள்ளி என்று பல கல்விக்கூடங்கள் பெருகி, எங்கள் மக்களைக் கல்வியில் சிறந்தவர்களாக்கி வருகின்றன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட, பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எங்கள் ஊரின் சமீபத்திய வரவாகும். இப்படி பெருமிதம்கொள்ளும் அதே நேரத்தில், எங்கள் ஊரில் முதன்முதலில் தொடங்கப்பட்ட கமா லியா பள்ளிக்கூடம் இன்று சிதிலம் அடைந்து, தன்னுடைய அடையாளத்தை இழந்து நிற்பது வருத்தம் அளிக்கிறது. என் குரல்வளம்தான் என்னை ஊடகங்கள் மூலமாக உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதற்குக் காரணம் வாசிப்பது மட்டுமே என்னுடைய பலமாக இருப்பதுதான். சர்க்கரை மடித்துத் தரும் பேப்பரில் இருக்கும் விஷயத்தைக் கூட விடாமல் படிப்பேன். இந்த ஆர்வத்தை எனக்குக் கொடுத்ததில் முக்கியப் பங்கு, சாத்தான்குளம் ஆர்.எம்.கோபாலகிருஷ் ணன் பிள்ளை இலவச வாசக சாலைக்கே சேரும். திறந்த வெளியில், காற்றோட்டமான சூழ்நிலை யில் புத்தகம் படிப்பதில் மனம் நிறைந்ததுஇங்கு தான்.

என் ஊர் - சாத்தான்குளமாக மாறிய 'சாஸ்தா குளம் !

சாத்தான்குளத்தில் உலகத்திலேயே முதல் தரமான சுண்ணாம்புக் கல் கிடைக்கிறது. இதில்இருந்துத் தரமான சிமென்ட் தயாரிக்கலாம். ஆனால், ஒரு தொழிற்சாலைக்குத் தேவையான அளவுக்குப் பெருமளவில் இந்தப் படிமம் இங்கு இல்லை என்பது பெரும்குறை. சாத்தான் குளத்தில் எந்தவிதத்  தொழிற்சாலையும்இல்லை. அரசாங்கமும் இதுபற்றி எந்த முயற்சியும்எடுக்க வில்லை. எங்கள் ஊரில் பெரும்பாலோர் தங்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்று பொருளீட்டத் தொடங்கிவிட்டனர். இப்படி வெளியூர் சென்று சம்பாதிப்பவர்கள் உள்ளூரில் தங்களின் பழைய வீடுகளை இடித்துவிட்டு  நவீன வடிவத்தில் பல கட்டடங்களைக் கட்டினாலும், இங்கேயே தங்கி இருப்பவர்களின் எண்ணிக்கைக் குறைவுதான்.

என் ஊர் - சாத்தான்குளமாக மாறிய 'சாஸ்தா குளம் !

சாத்தான்குளம் அப்பளத்துக்குப் பெயர் போன ஊர் என்பது இன்றைய தலைமுறையினருக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை. ஒரு காலத்தில் கொழும்பு வரைக்கும் இந்த அப்பளம் ஏற்றுமதியாகி இருக்கிறது. ஆனால், இன்று அதே தரத்துடன் அப்பளம் தயாரிக்கப்படுவது இல்லை. கருப்பட்டிப் பாகில் ஊறவைத்த முந்திரிப் பழம், மாங்காய்களை வெட்டிப் போட்டுச் செய்யப்படும் மாலைப் பதநீர், தேன்குழல் என்கிற முறுக்கு வகை போன்ற சாத்தான்குளத்துக்கே உரிய ஸ்பெஷல் உணவுப் பொருட்கள் இன்று கிடைப்பது அரிதாகிவிட்டது. எங்கள் மக்களின் பொழுதுபோக்கு அம்சம் என்றால், அது சினிமா தியேட்டர்  மட்டும்தான். லட்சுமி தியேட்டர், நாராயணசாமி தியேட்டர் என்று இரண்டு தியேட்டர்கள் இருந்த இடத்தில், இப்போது லட்சுமி தியேட்டர் மட்டும்தான் இயங்கிவருகிறது.

என் ஊர் - சாத்தான்குளமாக மாறிய 'சாஸ்தா குளம் !

கந்தக பூமி, குடி தண்ணீர்ப் பற்றாக்குறை, தனிநபர் வருமானம்குறைவு, எனப் பல குறைகள் இருந்தாலும் உள்ளூர்வாசிகளுக்கு சாத்தான்குளம் எப்போதும் ஒரு சொர்க்கம்தான்!'' அழகாகச் சிரிக்கிறார் அப்துல் ஜப்பார்.