Published:Updated:

வீராணம் குழாயில் வாழ்க்கை...

பிரசவக் குழாய்கூட உண்டு!

வீராணம் குழாயில் வாழ்க்கை...

பிரசவக் குழாய்கூட உண்டு!

Published:Updated:
##~##

மெட்ராஸில் இருந்து மாமல்லபுரம் நோக்கிப் புறப்பட்டால், 17-வது கிலோ மீட்டரில் கந்தன்சாவடி வருகிறது. அங்கே தொடங்கி, வரிசையாக வீராணம் திட்டத்துக்காக வாங்கிப் போடப்பட்ட சிமென்ட் குழாய்கள்! ஆனால், தற்போது அவை வீடுகளாக மாற்றப்பட்டுவிட்டன. அங்கே வசித்துவரும் ஜனங்களை அந்த வழியில் செல்லும் எல்லோருமே கொஞ்சம் ஏக்கத்தோடு பார்த்துவிட்டுச் செல்வார்கள்...

 அந்த ஏரியாவின் முன்னாள் எம்.எல்.ஏ-வான எல்ல.ராசமாணிக்கம்கூட, ''நமக்கும் ஏதாவது வீடு (குழாய்) இருந்தா சொல்லுப்பா... நிம்மதியான வாழ்க்கை... வாடகை, கரன்ட் பில், மழை ஒழுகல், குடித்தனக்காரர் சண்டை எதுவுமே கிடையாதே!'' என்று தமாஷாகச் சொல்வாராம்.

அம்மி கொத்துபவர்கள், கட்டட வேலை செய்பவர்கள், ஓலை வேய்பவர்கள், சும்மா கிடப்பவர்கள் என்று ஏறக்குறைய 300 குடும்பங் கள் இங்கே குழாய்களில் குடித்தனம் நடத்து கின்றன. ஐந்தடி விட்டம் உள்ள அந்தக் குழாய் களின் ஒரு பக்கத்தை மண் சுவர் எழுப்பிச் சுத்தமாக அடைத்துவிட்டு, இன்னொரு பக்கத் தில் ஓலைக் கதவு பொருத்தி, 'பக்கா’வாக வீடு மாதிரியே செட்டப் செய்திருக்கிறார்கள்.

வீராணம் குழாயில் வாழ்க்கை...

''எதிர்த்தாப்ல இருக்கிற புறம்போக்குல குடிசை போட்டு இருந்தோமுங்க. திடீர்னு ஒரு நாள் வந்து எல்லாக் குடிசைங்களையும் பிய்ச்சுப் போட்டுட்டாங்க. எங்களுக்கு உடனடியா ஒரு இடம் வேணுமே... பார்த்தோம்... ஆளுக்கொரு 'பைப்’பை 'கப்’புனு புடிச்சு, சட்டி - சாமானெல் லாம் கொண்டுவந்து குடித்தனம் தொடங்கிட்டோம்'' என்கிறார்கள். இது நடந்து நான்கு வருடங்கள் ஆகின்றன.

குடித்தனம் நடத்துகிறவர்களை விடுங்கள்... சில 'பைப்’புகளில் கசாப்புக் கடை, பெட்டிக் கடை, டெய்லர் கடை என்று அமோகமாக அமைக்கப்பட்டு இருப்பதுதான் ஆச்சர்யம். குழாயின் முகப்பில் ஓர் ஓலைக் கொட்டகை வேய்ந்து அங்கே துணி தைத்துக்கொண்டு இருந்த டெய்லர் ஒருவரை அணுகியபோது, ''வாங்க! வாங்க'' என்று அழைத்த அவர், தன் வீட்டுக்குள் (!) நம்மை அழைத்துச் சென்றார். குனிந்தபடியே போனோம். உள்ளே மண் நிரப்பி 'நம்ம’ வீட்டுத் தரை மாதிரியே சமதளமாக்கி இருந்தார் அவர். ஓர் ஓரத்தில் கயிறு கட்டப்பட்டுத் துணிகள் தொங்க, குழாயின் அடுத்த கோடியில் அடுப்புவைத்துச் சமையல் நடந்துகொண்டு இருந்தது. டிரான்சிஸ்டர் முதற் கொண்டு உள்ளே சகல வசதிகளும் அபாரம்.

இதுபோன்ற நிறைய வசதிகளுடன் அமைந்துஉள்ள பல வீடுகளைச் சுற்றிக் காண்பித்த ஒருவர், ''ஏன் சார்... நம்ம தோஸ்த் ஒருவர் 'பேட்டரியில் ஓடற ஃபேன்கூட இருக்கு’னு சொன்னாரு. வாங் கணும்னு ஆசை...'' என்றார்.

சில இடங்களில் ஒரே குழாயில் இரண்டு மூன்று குடும்பங்கள்! இத்தனை பேருக்குமாகச் சேர்த்து குளிப்பதற்கு மட்டும் ஒரு குழாயை பாத்ரூமாக மாற்றி இருக்கிறார்கள். மைதானத்தையே கழிப்பறையாக உபயோகிக்கிறார்கள். ''ஆம்ப ளைங்க பரவாயில்லை... பொம்பளைங்களுக்குத் தான் கஷ்டம்! 'வேற இடம் பாருங்க. குடிசை போட்டுக்கலாம்’னு வீட்டுலே உசிரை வாங்குறா...'' என்றார் ஒரு பெரியவர்.

ஒரு சிலர், ''இந்த 'பைப்’ வாழ்க்கையைவிட வசதியானது வேற கிடையாதுங்க. மழை, காத்து வந்தாலும் இது அசஞ்சு குடுக்காது. நாங்க இங்கேயே இருந்துட்டுப் போறோம். எங்களை இங்கிருந்து துரத்தாம இருந்தாலே போதும்!'' என்றார்கள்.

வீராணம் குழாயில் வாழ்க்கை...

இந்த 'பைப்’ வாழ் பெருமக்கள் தங்களுக்குள் ஒரு சங்கம் மாதிரி வைத்திருக்கிறார்கள். இந்த பைப் வீடுகள் அத்தனைக்கும் சேர்த்து 'வீராணம் நகர்’ என்று பெயரே வைத்துவிட்டார்கள். லெட்டர் போட்டால்கூட இந்த வீடுகளுக்கு வந்து சேரு கிறது. 'கேர் ஆஃப் வீராணம் குழாய்’ என்ற முகவரி கொடுத்து, சிலர் ரேஷன் கார்டும் வாங்கிவிட்டதாகத் தகவல்.

சங்கப் பிரமுகர்கள் சிலரையும் சந்தித்து பேசி னோம். ''நாங்க என்ன விருப்பப்பட்டா இந்தக் குழாய்லே இருக்கோம்? வேற வழி இல்லை... சமயங்கள்ல நாங்க படற அவஸ்தை இருக்குதே, அப்பப்பா... போன வருஷம் அந்த எட்டாவது குழாய்ல உள்ள ஒரு பொம்பளை பிரசவ வலி யிலே துடிச்சிடுச்சு... பக்கத்துலே டாக்டருங்க, ஆஸ்பத்திரி இல்லே... வேற வழி? இங்க இருக்க றவங்களே சேர்ந்து பிரசவம் பார்த்தாங்க. அதுல (குழாய்ல) நடந்த பிரசவம் சுகப் பிரசவம் ஆயிட்டதால, பிள்ளைத்தாச்சிங்களை அந்தக் குழாய்ல கூட்டிப் போய்ப் பிரசவம் பார்ப்போம்... அந்தக் குழாய்க்குப் 'பிரசவக் குழாய்’னு பேர் வெச்சிருக்கோம்...'' என்றார்கள்.

''கட்சிக்காரங்க அடிக்கடி வந்து எங்களைப் பார்த்துட்டுப் போறாங்க. உங்களை மாதிரி நிறையப் பேர் வந்து போட்டோவெல்லாம் புடிச்சிக்கினு போறாங்க. சமீபத்துல வைஜயந்திமாலா அம்மா வந்தாங்க. 'சீக்கிரம் வீட்டுக்கு ஏற்பாடு பண்றேன்’னு சொன்னாங்க. கடைசியா 'இங்கே மொத்தம் எத்தினி வோட்டு இருக்கு?’னுதான் கேக்கறாங்க. உங்ககிட்டே சொல்றதுக்கு இன்னா... இங்கே இருநூறு வோட்டுக்கு குறையாம இருக்கு. யாராச்சும் எங்களுக்கு நல்லது பண்ணா அவங்களுக்கே வோட்டைப் போட்டுறோம்... இதைப் பெரிசா போடுங்க... அதாவது 'வீராணம் நகருக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால், இந்த ஏரியா எம்.எல்.ஏ. ஆகலாம்’னு போடுங்க...'' என்று அப்பாவித்தனமாக - அதே சமயம் சீரியஸாகச் சொன்னார் ஒருவர்.

கூடவே, ''எங்களுக்கு இந்தக் குழாய்தான் நிரந்தர ஜாகை என்கிற பட்சத்தில் எங்கள் குழந்தைகளின் படிப்புக்குப் பள்ளி வசதி, மருத்துவ வசதிபோன்ற வற்றைக் கேட்டுப் போராடலாம்னு முடிவு எடுத்திருக்கோம்...'' என்றும் சொன்னார்கள்.

இந்த 'நகர்’வாசிகளின் மற்றொரு குறை - தண்ணீர்ப் பஞ்சம்... சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் போய்த்தான் தண்ணீர் கொண்டுவர வேண்டியிருக்கிறது. எதிரிலிருந்த ஃபேக்டரி ஒன்றில் பேசிக்கொண்டு இருந்தபோது, ''ஐயோ! இவங்களுக்காப் பரிதாபப்படறீங்க..? ராத்திரி டயத்துல வாங்க. எல்லாப் பயலுகளும் குடிச்சிட்டு அப்பன் பிள்ளை வித்தியாசம் தெரியாம அடிச்சுக்குவானுங்க. இந்த அழகுல 'கட்சிப் பற்று’ வேறே. பாருங்க, பைப்புக்குப் பைப்பு கொடி பறக்குது'' என்றார்கள்.

நிஜம்தான்! தி.மு.க. மற்றும் தமிழக முன்னேற்ற முன்னணிக் கட்சிக் கொடிகள் பறக்கின்றன.

மொத்தத்தில் -

மக்களின் வரிப் பணத்தை முழுக்க வீணாக்கவிடாமல், ஒரு புதிய நகரை நிர்மாணித்து, சங்கம் அமைத்து, 'எம்.எல்.ஏ.-வைத் தேர்ந்தெடுப்போம்...’ என்று கூறும் இந்த ஜனங்களை என்ன சொல்ல!

- கே.அசோகன்
படங்கள்: ஏ.ரவீந்திரன்