Published:Updated:

ஆயுர்வேதம்... ஆன்மிகம்!

சோழனின் தீர்க்கதரிசனம்

ஆயுர்வேதம்... ஆன்மிகம்!

சோழனின் தீர்க்கதரிசனம்

Published:Updated:
##~##

பாரம்பரியச் சின்னங்களைப் பழுதுபடாமல்  பாதுகாப்பதே தொல்பொருள் ஆய்வுத் துறையின் பணி. ஆனால், அவற்றைப் பாதுகாப்பதோடு தங்கள் கடமை முடிந்தது எனக் கருதாமல் தொல்லியல் துறை மேற்கொண்ட ஒரு செயல் காஞ்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது.  

 காஞ்சி மாவட்டம், வாலாஜாபாத்துக்கு அடுத்து உள்ள திருமுக்கூடல் கிராமத்தில் இருக்கிறது   ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயில். கி.பி. 854-க்கும் 860-க்கும் இடைபட்ட காலத்தில் விஜயநிருபதுங்க விக்ரமவர்மன் என்ற பல்லவ மன்னரால் கட்டப்பட்டது இந்தக் கோயில். பின்னர் கி.பி.1063-1068க்கும் இடைபட்ட கால கட்டத்தில் இங்கு ஆட்சிபுரிந்த வீர ராஜேந்திர சோழன் இந்தக் கோயிலை ஆன்மிகப் பணிகளோடு முடக்கிவிடாமல் கல்வி, கலாசாரம், பண்பாடு, மற்றும் சுகாதாரக் கேந்திரமாக்கி இருக்கிறார். அவரின் ஆட்சிக் காலத்தில் கோயில் வளாகத்தில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதி, வேத பாடசாலை, 15 படுக்கைகள்கொண்ட இலவச மருத்துவமனை இயங்கிவந்ததாக கோயில் கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன.  

ஆயுர்வேதம்... ஆன்மிகம்!
ஆயுர்வேதம்... ஆன்மிகம்!

விசேஷ மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட 20 வகையான மருந்துகள் நோயாளிகளின் சிகிச்சைக்காகத் தரப்பட்ட தகவல் இதில் ஹைலைட். மூலிகைகள் தட்டுப்பாட்டினால் சிகிச்சைப் பாதிக்கக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் கோயில் வளாகத்தை ஒட்டி ஒரு மூலிகைப் பண்ணையையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். அங்கு 14 அரிய வகை மூலிகைகள் வளர்க்கப்பட்டு, மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளன. கோயில் கல்வெட்டுகள் மூலம் இதை அறிந்துகொண்ட தொல்லியல் துறையினர், சோழன் அமைத்த மூலிகைப் பண்ணை இருந்த இடத்திலேயே தற்போது புதிதாக ஒரு மூலிகைப் பண்ணையையும் அமைத்து இருக்கிறார்கள். இதில் வல்லாரை, திப்பிலி, கண்டங்கத்திரி, கொடிவேலி, அருகம்புல், பதரி, நிலதுத்தி உள்ளிட்ட பல அரியவகை மூலிகைச் செடிகள் உள்ளன. தொல்பொருள்துறை மூலிகைத் தோட்டம் அமைத்திருப்பது இந்தியாவிலேயே இங்குதான் முதன்முறையாகும். இந்த மூலிகைத் தோட்டம் உருவானதில் பெரும்பங்கு வகித்த தொல்லியல் துறையின் சென்னை சரகக் கண்காணிப்பாளர் சத்யபாமாவைச் சந்தித்தேன்.

ஆயுர்வேதம்... ஆன்மிகம்!

''இது எங்கள் கனவுத் திட்டம். பாலாறு, வேகவதியாறு, செய்யாறு என மூன்று ஆறுகள் இணையும் இடத்தில் அமைந்திருப்பதும் அழகிய சுவாமி சந்நிதியும் 55 வரிகளில் அரிய விஷயங்களைச் சொல்லும் கல்வெட்டும் திருமுக்கூடல் கோயிலின் சிறப்புகள். இதில் கல்வெட்டு முக்கியமானது. ஒரே வளாகத்தில் கல்லூரி, அதனுடன் இணைந்த மாணவ மாணவியர் விடுதி, மருத்துவமனை, மருந்தகம், உணவு விடுதி என்பதெல்லாம் இன்று சகஜமாக நாம் பார்க்கும் விஷயம். ஆனால், 11-ம் நூற்றாண்டிலேயே இந்த நிர்வாக முறை இருந்துவந்தது எங்களுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது.

இந்த அரிய விஷயத்தை இன்றைய சந்ததிகளுக்குத் தெரிவிக்க நினைத்தோம். கல்வெட்டுகளில் குறிப்பிட்டு இருப்பதைப் போல கல்லூரியையோ மருத்துவமனையையோப் புதுப்பிப்பது சாத்தியம் இல்லாத ஒன்று. ஆனால், மூலிகைத் தோட்டம் இருந்ததற்கு ஆதாரமாக இன்றும் கோயிலைச் சுற்றி சில அரிய மூலிகைகள் இருப்பதால் மூலிகைத் தோட்டம் அமைக்க முடிவு எடுத்தோம். ஆனால், கல்வெட்டில் கூறப்பட்டு இருந்த மூலிகைகளை அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது. மேலும், கல் வெட்டில் சில மருந்துகளின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. சித்த மருத்துவத் துறை, தோட்டக் கலைத் துறை உதவியுடன் அந்த மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளைக் கண்டறிந் தோம்.

இப்படிக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடினமான உழைப்புக்குப் பின் தோட்டத்தை அமைக்க முடிந்தது. சம்பிரதாயத்துக்கு மூலிகைகளைப் பயிரிடாமல் ஒவ்வொரு மூலிகையையும் தனித் தனிப் பகுதிகளில் பயிரிட்டு இருக்கிறோம். மேலும் பொது மக்களுக்குப் புரியும் வகையில் தனித் தனிப் பலகைகளில் மூலிகைகளின் பெயர், அவற்றில் இருந்து மருந்து தயாரிக்கும் முறை, அந்த மூலிகையால் தீரும் நோய்களைப்  பட்டியலிட்டு உள்ளோம். இத்துடன் எங்கள் வேலை முடியவில்லை. இந்தத் தோட்டத்தை மெருகூட்டும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறோம்!'' என்கிறார் கண்கள் மின்ன.  

பாராட்டப்பட வேண்டிய பணி!        

- எஸ்.கிருபாகரன்

படங்கள்: வீ.ஆனந்தஜோதி