Published:Updated:

தெற்கே வந்த ரயில்!

தெற்கே வந்த ரயில்!

தெற்கே வந்த ரயில்!

தெற்கே வந்த ரயில்!

Published:Updated:
##~##

'இளைஞர்கள், வயதானவர்கள் என்று யாரையும் விட்டுவைக்காமல் அவர்களுடைய தவறான உடலுறவுப் பழக்கங் கள் மற்றும் வழங்கப்படும் சுத்திகரிக்கப்படாத ரத்தம் போன்றவற்றால் எய்ட்ஸ் பரவுகிறது. இன்னொரு பக்கம் தாய்க்கு எய்ட்ஸ் நோய் இருந்தால்,  பிறக்கும் அப்பாவிக் குழந்தைக்கும் நோய் வந்துவிடுகிறது.  இன்றைய அறிவியல் வளர்ச்சி மூலம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றுவதைத் தடுக்க புதிய வழிமுறை கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. எனினும், விழிப்பு உணர்வு இல்லாமையால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டப் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதைப் பரிசாகக் கொடுத்து வருகிறார்கள்.

 மக்களுக்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்புதான் 'செஞ்சுருள் இயக்கம்’. அப்போதே பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள்தோறும் இந்த இயக்கத்தில் மாணவர்கள் இணைந்தார்கள். தெருக்கூத்து, பேரணி, கலாசாரப் போட்டிகள் எனப் பல வழிகளில் மக்களுக்கு எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்பு உணர்வுத்  தகவல்களை எடுத்துச் சொன்னார்கள்.  இந்த இயக்கத்தின் அடுத்தகட்டமாக வந்திருப்பதுதான் 'ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ்’ எனப்படும் செஞ்சுருள் ரெயில்!

தெற்கே வந்த ரயில்!
தெற்கே வந்த ரயில்!

2007-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செஞ்சுருள் ரயில் இந்தியா முழுக்கச் சுற்றி வருகிறது. இந்த வருடம் ஜனவரி 12 அன்று டெல்லியில் தன் பயணத்தைத் தொடங்கி அனைத்து மாநிலங்களையும் தொட்டு, இறுதியாகத் தமிழ்நாடு வந்து சேர்ந்தது. இந்த ரயிலில் எட்டு பெட்டிகள் இருக்கின்றன. முதல் நான்கு பெட்டிகளில் எய்ட்ஸ் நோய் தொடர்பானத் தகவல்கள். அதைப் பார்வையாளர்களுக்கு விளக்க, அந்தத் துறையைச் சேர்ந்த  நிபுணர்கள் இருக்கிறார்கள். சுகாதாரப் பணியாளர்கள், செயற்பாட்டாளர்கள், பஞ்சா யத்து உறுப்பினர்கள் ஆகியோருக்குப் பயிற்சி அளிப்பதற்கான சந்திப்புக் கூடம்தான் ஐந்தாவது கோச்.  ஆறாவது கோச்சில், எய்ட்ஸ் நோய் தொடர்பான ஆலோசனைகள், நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கான மருத்துவ வசதிகள் உள்ளன.      

அந்த ரயிலின் பணியாளர்களுக்கான ஓய்வு அறையாக ஏழாவது பெட்டியும் எட்டாவது பெட்டி அலுவலகப் பணிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

புகைப்படங்கள், ஓவியங்கள், வீடியோ காட்சிகள் எனப் பல்வேறு விதங்களில் விழிப்பு உணர்வுத் தகவல்களைக் கொண்டு இருந்த இந்த ரயில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சுற்றிவிட்டு, இறுதியாகச் சென்னை வந்தது. இரு தினங்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த இந்த ரயிலைப் பல தரப்பினரும் பார்வையிட்டார்கள்.

தெற்கே வந்த ரயில்!

ரயில் நின்று இருந்த நடைமேடையில் எய்ட்ஸ் நோய் விழிப்பு உணர்வு தொடர்பாகப் பணியாற் றும் பல இயக்கங்கள் கையேடுகள், போஸ்டர்கள், ஆணுறைகள் போன்றவற்றை விநியோகித்தும், பொம்மலாட்டம், ஆர்கெஸ்ட்ரா ஆகியவற்றின் மூலம் எய்ட்ஸ் பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்தபடி இருந்தன. ரயிலுக்குள், 'போதைப் பழக்கத்தில் ஈடுபட மாட்டேன்’ என்று ஒரு தகவல் பலகை இருந்தது. அதில் உங்கள் வலது உள்ளங்கையை வைக்கவேண்டும். அப்படி வைப்பதன் மூலம் நீங்கள் போதைப் பழக்கத்துக்கு எதிராக சபதம் எடுத்துக்கொண்டதாக அர்த்தம். நாம் சென்று இருந்த நேரத்தில் அதுவரை சுமார் ஒன்றே கால் கோடி மக்கள் சபதம் எடுத்திருந்தார்கள்.

ஏற்றுக்கொண்ட சபதத்துடன் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தது அந்த 'தெற்கே வந்த ரயில்!’

- கட்டுரை, படங்கள்:

ந.வினோத்குமார்

 >>>'உலக எய்ட்ஸ் தின’மான டிசம்பர் 1, 2007-ல் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது!

>>>சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளை அனுசரிக்கும் விதமாக, 'தேசிய இளைஞர் தின’மான ஜனவரி 12 அன்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்தால் இந்த ஆண்டு ரயில் சேவை தொடங்கிவைக்கப்பட்டது!