Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : வழக்கறிஞர் அருள்மொழிபடம் : என்.விவேக்

நானும் விகடனும்!

இந்த வாரம் : வழக்கறிஞர் அருள்மொழிபடம் : என்.விவேக்

Published:Updated:

பிரபலங்கள்  விகடனுடனான தங்களின்  இறுக்கத்தை, நெருக்கத்தை,  விருப்பத்தைப்  பகிர்ந்துகொள்ளும்   பக்கம்!

##~##

''என் அப்பா ஒரு தமிழாசிரியர். தீவிரமான திராவிடர் கழகத்துக்காரர். செய்தித்தாள்கள், புத்தகங்களுக்குத்தான் அதிகம் செலவு செய்வார். 'புத்தகங் கள், அறிவுக்கான முதலீடு’ என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர். பெரியாரின் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்ட ஒருவருடைய வீட்டில் 'விடுதலை’ நாளிதழ் இருப்பதில் எந்த ஆச்சயமும் இல்லை. ஆனால், விகடனும் வாராவாரம் வந்துவிடும். எங்கள் வீட்டில் விகடன் வாங்கிப் படிப்பது குறித்து எப்போது விவாதம் வந்தாலும் அப்பா விகடனை வாசிப்பதற்கான நியாயங்களை அடுக்குவார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறு வயதிலேயே அரசியல்மயப்படுத்தப்பட்ட எனக்கு, விகடன் அதன் சமூக அரசியலோடுதான் அறிமுகமானது. விகடனின் கார்ட்டூன்கள் எப்போதும் சிரிப்பு மூட்டும்... சிந்திக்கத் தூண்டும். அப்போது 'பொன்மகள் பூமா’ என்கிற கார்ட்டூன் தொடர் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அது போலவே விகடனின் வருகைக்காக ஏங்கவைத்த பகுதிகளான விகடன் தொடர்கதைகள், சிறுகதைகள் எப்போதுமே எனக்கு ஏக இஷ்டம். எழுத்தாளர்கள் சிவசங்கரி, இந்துமதி, சுஜாதா போன்றவர்களின் தொடர்கதைகளை விகடனில் ருசித்து, ரசித்து வாசித்த நாட்கள் இப்போதும் மனதில் பசுமையாகப் பதிந்திருக்கின்றன. மணியம் செல்வத்தின் ஓவியங்கள் கதைகளுக்கு அவ்வளவு அழகு சேர்ப் பவை!  

சிறு வயது முதலே மேடைகளில் பெரியார் கருத்துகளைப் பேசத் தொடங்கிவிட்டேன். கூட்ட உரைகளுக்கான முன் தயாரிப்பில் விகடன் எனக்கு உதவியிருக்கிறது. அதன் தலையங்கங்களே

நானும் விகடனும்!

எனக்குள் பல சிந்தனைகளை உருவாக்கும். அட்டைப் படத் துணுக்குக்காக விகடன் ஆசிரியர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்துக்குப் பின், சமூகப் பிரச்னைகளில் விகடனின் கவனம் முன்னைக் காட்டிலும் அழுத்தமாகப் பதிந்தது. ஒரு பொழுதுபோக்கு வார இதழ் என்பதைத் தாண்டி, ஒரு தீவிரத்தன்மையை விகடன் அதன் பிறகு எட்டியது என்று எனக்குத் தோன்றுகிறது.

எம்.ஜி.ஆர். இறந்தபோது விகடனில் வெளியான கட்டுரைகள் அவருடைய மரணத்தில் நேரடியாகப் பங்கேற்கவைத்தன. ரசிகர்கள் அவர் மீது எத்தனை அபிமானம் வைத்திருந்தார்கள் என்பதை ஒவ்வொரு வரியும் ஆணித்தரமாக உணர்த்தின.

விகடன் செய்திக் கட்டுரைகளில் எப்போதும் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. அதிலும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த விறுவிறுப்பு மும்மடங்காக எகிறியது. அந்தச் சமயம் நானும் படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கியிருந்தேன். அந்தக் காலகட்டத்தில் வெளியாகும் செய்திக் கட்டுரைகளுக்கு நிறைய முறை என்னிடம் கருத்து கேட்டு வெளியிட்டது விகடன்.

விகடனில் நான் இடம் பெற்ற முதல் செய்திகூட எனக்கு நினைவில் இருக்கிறது. 1991-ல் ஜெயலலிதா ஆட்சியில் ஆடம்பரம் கொடி கட்டிப் பறந்தது. இரண்டு டாக்டர் பட்டங்கள், மேடைகளில் அனைவரும் காலில் விழுவது, முதல்வர் பயணிக்கும் பாதையின் போக்குவரத்து பல மணி நேரங்களுக்கு நிறுத்தப்படுவது என அது வரை தமிழகம் காணாத காட்சிகள் அரங்கேறிக்கொண்டு இருந்தன. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் அவருடைய ஆட்சியை விமர்சிப்பவர்கள்குறித்து கருத்து தெரிவித்த ஜெயலலிதா, 'பெண் என்பதால் என்னை விமர்சிக்கிறார்கள்!’ என்று கூறினார். முதல்வரின் அந்தக் கருத்து சரிதானா என்று என்னிடம் விகடனில் இருந்து கருத்து கேட்டார்கள். நான் ஜெயலலிதாவின் கருத்தை ஆணித்தரமாக மறுத்திருந்தேன். அதை வாசித்த பலர் என்னிடம், 'இவ்வளவு தைரியமாகக் கருத்து சொல்லியிருக்கிறீர்களே... பயமாக இல்லையா உங்களுக்கு?’ என்று கேட்டனர். அதன் பிறகுதான் பல்வேறு ஊடகங்களில் பிரபலங்களின் விமர்சனங்களுக்கு என்னிடம் கருத்து கேட்கத் தொடங்கினார்கள். தொடர்ந்து அவள் விகடனில் பெண்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய சட்டங்கள் தொடர்பான கட்டுரைகளில் என் பங்களிப்பைச் செய்தேன்.

ஜூனியர் விகடனின் 'காதல் படிக்கட்டுகள்’ தொடரில் நானும் தடம் பதித் தேன். சமூகப் பிரபலங்கள் வரிசையில் சமூக, அரசியல், பகுத்தறிவுப் பாதையில் பணியாற்றும் பெண்களை இணைத்ததில் விகடனுக்கு முக்கியப் பங்கு உண்டு. 'நியூ’ படம் வெளிவந்த சமயம்... அந்தப் படம் பெண்களை இழிவுபடுத்துகிறது என்று கடும் எதிர்ப்பு வந்தது. அந்தப் படத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நான் வாதாடிய செய்தியை விகடன் பளிச் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. உலக நாடுகளில் இருந்து இது தொடர்பாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் என்னைத் தொடர்புகொண்டு அந்த முயற்சிக்கு வாழ்த்தினார்கள். விகடனின் வீச்சு கடல் தாண்டியது என்பதை எனக்கு உணரவைத்தன அவர்களின் விசாரிப்புகள். இந்த இடத்தில் மறக்காமல் நான் பதிவு செய்ய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், என்னை அழகாகக் காட்டுபவர்கள் விகடனின் புகைப்படக்காரர்கள் என்பது.

தமிழ்ப் பத்திரிகையுலக வரலாற்றில் ஒரு முன்னோடியாக, விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தை அமல்படுத்தி, அதைச் செம்மையாக நடைமுறைப்படுத்திவருகிறது விகடன். தமிழகத்தில் குக்கிராமங்களில் இருந்துகூட பேனா பிடிக்கும் விகடனின் மாணவர் படைதான், ஆர்வமாகப் பல சமூகப் பிரச்னைகளை வெகுஜன இதழ்களில் வெளிவரச் செய்வதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. எழுத்தாளர் பாலகுமாரன் இந்த மாணவ நிருபர் படையை வைத்து 'நிலாவே வா’ என்று ஒரு நாவல் எழுதினார் என்றால், இந்தத் திட்டம் எந்த அளவுக்கு மற்றவர்களைக் கவர்ந்திருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

தமிழ் ஈழம் குறித்து 85-ல் இருந்தே விகடனின் பதிவுகளைத் தொடர்ச்சியாகக் கவனித்துவருகிறேன். விடுதலைப் புலிகள்குறித்த செய்திகளை வெளியிடுவதிலும் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பேட்டிகளை வெளியிடுவதிலும் விகடனுக்கு நிகர் விகடன்தான். ஒரு போராளித் தலைவனுக்கு உரிய மிடுக்கோடு இருக்கும் படங்களில் அவருடைய வசீகரிக்கும் எளிமையும் என்னை ஆச்சர்யமூட்டும். அவற்றை ஒன்றுவிடாமல் நான் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறேன். கிட்டு பயணித்த கப்பல், அவருடைய மரணம் குறித்த செய்திகளையெல்லாம் விரிவாக நெகிழும்படி எழுதியது விகடன்தான். நெகிழ்வான செய்திகளைத் தந்து மனதைக் கனக்கச் செய்கிற அதே இதழின் அடுத்தடுத்த பக்கங்களில் 'லைட் ரீடிங்’ விஷயங்களும் இடம் பிடிக்கும். சுஜாதா, பாலகுமாரன் போன்றவர் களைத்தான் அப்போது பலருக்குத் தெரிந்து இருந்தது. எங்கள் காலத்தில் ஸ்டெல்லா புரூஸ் வந்தார். அவரின் 'ஒருமுறைதான் பூக்கும்’, 'அது ஒரு நிலாக் காலம்’ போன்ற கதைகளைப் படித்து, அதை கல்லூரித் தோழிகளுடன் பகிர்வது நாங்கள் ரசித்துச் செய்கிற பொழுதுபோக்காக இருந்தது. இதோ இந்தத் தலைமுறைக்கு, 'லைட் ரீடிங்’ விஷயமாக செழியன் எழுத்துகளில் உலக சினிமாவை அறிமுகம் செய்துவைக்கிறது... அஜயன் பாலாவின் கைவண்ணத்தில் உலக நாயகர்களைப் பந்திவைக்கிறது.

பார்வதியம்மாளை தமிழ்நாட்டு மண்ணுக் குள் சிகிச்சைக்காக அனுமதிக்காததையட்டி கவிஞர் வாலி எழுதிய உணர்வுபூர்வமான கவிதையை விகடனில் கண்டபோது நெகிழ்ந்துபோனேன்.

மனித உரிமைப் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தாத பத்திரிகைகளில் விகடனுக்கு முதன்மையான இடம் உண்டு. கூடங்குளம் அணு உலை தொடர்பான போராட்டங்களுக்கு ஓர் அடித்தளமாக இருந்தது சுப.உதயகுமாரன் எழுதிய 'அணு ஆட்டம்’ தொடர். அதுதான் சாமான்ய மக்களுக்கும்கூட அணு உலை அபாயங்கள்குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது. போராட்டக்காரர்களின் உணர்வுகளை ஒருங்கிணைத்தது. பிரபலங்களை வெளிச்சமிட்டுக் காட்டினாலும் சாமான்ய மக்களோடு நின்று அவர்களுக்காகக் குரல் கொடுப்பதே விகடனின் அரசியல்.

அநீதிகளைத் தட்டிக்கேட்பதற்கு விகடன் தயங்கியது இல்லை. ஜெயேந்திரர் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்த ஜூனியர் விகடனின் கட்டுரைகள் கடுமையானதாக இருந்ததே இதற்குச் சான்று. விகடனை நடுநிலை பத்திரிகையாக அரசியல் பார்வை யாளர்களைப் பார்க்கவைத்தவை அந்தக் கட்டுரைகள்.

வெறும் எழுத்தில் மட்டுமல்ல, செயலிலும் தன்னை விகடன் நிரூபித்துக்கொண்டே வந்திருக்கிறது. அதற்குச் சமீபச் சான்று விகடனின் 'தானே’ துயர் துடைப்புப் பணி கள். விகடன் என்றும் என் மனதுக்கு விருப்பமான, நெருக்கமான நண்பன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism