Published:Updated:

என் ஊர்: சுகி சிவம் - மயிலாப்பூர்

Suki Sivam

வாட்ச்மேன் விநாயகர்... 60 ரூபாய் அரண்மனை!

என் ஊர்: சுகி சிவம் - மயிலாப்பூர்

வாட்ச்மேன் விநாயகர்... 60 ரூபாய் அரண்மனை!

Published:Updated:
Suki Sivam
##~##

''1950களில் சென்னை நகரமாக இருந்தது. மயிலாப்பூர் கிராமமாக இருந்தது. இப்படி நகரத்துக்குள்ளேயே அழகிய கிராமமாக இருந்த பெருமை மயிலாப்பூருக்கு மட்டுமே உண்டு. 60 வருடங்களுக்கு முன்பு இங்கு திண்ணை இல்லாத வீடுகளே கிடையாது. அழகியத் திண்ணை வீடுகள், கிராமத்து பாணி திருவிழாக்கள் என அப்போது இருந்த மயிலாப்பூர் சொர்க்க பூமி. இப்போது எல்லாம் மாறிவிட்டாலும் ஊரின் மதிப்பும் கோயிலின் சிறப்பும் மாறாமல் 

என் ஊர்: சுகி சிவம் - மயிலாப்பூர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இருப்பதே ஒரே ஆறுதல்!'' - தான்  வளர்ந்த மயிலாப்பூர் பற்றிப் பேசுகிறார் ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி சிவம்.

''கபாலீஸ்வரர் கோயில் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஸ்தலம். முன்பு எல்லாம் அடிக்கடி வருவேன். திருவிழாக்கள் ஒன்றுவிடாமல் கண்டு களித்திருக்கிறேன். அறுபத்து மூவர் விழா நடக்கும் நாட்களில் காலையில் கோயிலுக்கு வந்தால் வீடு திரும்ப நள்ளிரவு 12 மணி ஆகிவிடும். ஆனால், இப்போது கோயில் பக்கம் போனால், 'வந்ததுதான் வந்துட்டீங்க.. சின்னதா ஒரு சொற்பொழிவு ஆற்றிட்டு போங்களேன்’ எனச் சொல்வதுதான் கொஞ்சம் சங்கடமாக உள்ளது. மத்தாள நாராயணன் தெரு 'ஸ்ரீ கற்பகாம்பாள் - கபாலி இனிப்பகம்’ மறக்க முடியாத இடம். நான் சொற்பொழிவாளன் ஆனதற்கு அந்தக் கடையும் ஒரு காரணம். வருடா வருடம் மயிலாப்பூர் சம்ஸ்கிருதக் கல்லூரியில் கிருபானந்த வாரியாரின் தொடர் சொற்பொழிவு 40 நாட்கள் நடைபெறும். அந்தச் சொற்பொழிவுக்கு என்னை என் அப்பா நாள் தவறாமல் அழைத்துச் செல்வார். 'நான் வரலப்பா’ எனச் சொன்னால்கூட, அந்தக் கடையில் பக்கோடா பொட்டலம் வாங்கித் தந்து அழைத்துப்போவார். அன்று சுவைத்த அந்தக் கடையின் பக்கோடாவின் சுவையும் வாசனையும் இன்றும் நாவிலும் நாசியிலும் உள்ளது. நாளாக நாளாக நானும் வாரியாரின் பேச்சைப் பக்கோடா இன்றிக் கவனிக்க ஆரம்பித்தேன்.

என் பள்ளி நாட்களில் 'காலத்தி முதலியார் ஸ்டோர்ஸ்’ ரோஸ் மில்க் ரொம்பவே ஃபேமஸ். அந்தக் கடையில் நோட் புக் வாங்கும்போது இலவசமாகத் தரும் காலண்டருக்காகவே கடையில் வெவ்வேறு ஆட்கள் இருக்கும்போது, நோட் புக் வாங்கியது நினைவில் உள்ளது. தாச்சி அருணாச்சலம் தெருவில்தான் எங்கள் வீடு இருந்தது. தெரு தொடங்கும் இடத்தில் இருக்கும் சிவசக்தி விநாயகரை நாங்கள் 'வாட்ச்மேன் விநாயகர்’ என்போம். அந்தக் கோயில் எங்கள் தெரு மக்களுடன் சேர்ந்து நான் வசூல் செய்து கட்டிய கோயில். அன்று எங்கள் வீட்டுக்குப் பின்னால் ஏகப்பட்ட  மரம், செடி, கொடிகள். வீட்டுத் தோட்டத்தில் இருந்த வாழை மரம், வாழை இலையை விலைக்கு விற்போம். ஸ்கூல் விட்டு வந்ததும் செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, சுரைக்காய் பறிக்க வீட்டின் கூரை மேல்  ஏறுவது எனப் பரபரப்பாக இருப்பேன். சென்னையில் இருந்தாலும் ஒரு கிராமத்து வாழ்க்கை எங்களுக்கு அன்று வாய்த்து இருந்தது.  

என் ஊர்: சுகி சிவம் - மயிலாப்பூர்

ஒருநாள் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தபோது மண்ணுக்குள் இருந்து முருகன் சிலையைக் கண்டெடுத்தோம். அதைப் பக்கத்தில் உள்ள ஒரு மடத்தில் கொண்டுபோய் வைத்தோம். இன்றுவரை அந்த மடத்தில் அந்த முருகன்தான் கடவுள். வீட்டுக்குப் பக்கத் தில் உள்ள சாந்தோம் பள்ளியில்தான் படித்தேன். அன்று நான்  குண்டாக இருந்ததால்,  ஸ்கூலுக்கு நடந்து போகும்போது எல்லாம்  'எந்தக் கடையில அரிசி வாங்குன?’ என கிண்டல் செய்வார்கள். 'நான் காசு கொடுத்து அரிசி வாங்குறதால உடம்புல ஒட்டுது. அதனாலதான் குண்டா இருக்கேன்’ என்று பதில் சொல்வேன். 10-ம் வகுப்பு படித்தபோது ஐ.நா. நடத்திய பேச்சுப் போட்டியில் நான் வெற்றி பெற்றதற்காகப் பள்ளிக்கு விடுமுறை விட்ட தலைமை ஆசிரியர், என்னைத் தன் பைக்கில் அழைத்துச்சென்று ஹோட்டலில் விருந்து வைத்த தமிழாசிரியர் சிதம்பரம் சுவாமிநாதன் எனப் பள்ளி சார்ந்த நிறைய விஷயங்கள் இன்றும் மனதில் அலையடிக்கின்றன. நண்பர்கள் ரவி, அமிர்தலிங்கத்துடன் சேர்ந்து வாரத்துக்கு இரண்டு நாட்கள் கடற்கரையில் லைட் ஹவுஸ் அருகே அமர்ந்து இலக்கியம் பேசியதும், குண்டாக இருக்கும் என்னை சைக்கிளில் வைத்து அழைத்துச் சென்றதற்காக ரவியை அவன் வீட்டில் திட்டியதும் நினைவில் உள்ளன.

என் ஊர்: சுகி சிவம் - மயிலாப்பூர்

நாங்கள் அன்று வாடகை வீட்டில்தான் குடி இருந்தோம். வாடகை 60 ரூபாய். ஆனால், வீடோ அரண்மனை போன்று பிரமாண்டமாக இருக்கும். எங்கள் வீட்டை 'அறுபது ரூபாய்க்கு ஓர் அரண்மனை’ என்பேன். 'பொழைக்கத் தெரியாத ஆளுங்க. இவ்ளோ பெரிய வீட்டை இவ்வளவு குறைஞ்ச வாடகைக்கா விடுவீங்க?’ என தெருவில் பலர் வீட்டு ஓனரிடம் கேட்பார்கள். ஆனால், அவரோ, 'ஆறு பிள்ளைங்களை வெச்சிருக்காங்க. பாவம் இருந்துட்டுப் போகட் டும்’ என்பார். அந்த அளவுக்கு அன்று நல்ல மனம் உள்ளவர்கள் இருந்தனர். ஆனால், வசதி வாய்ப்புகள் பெருகப் பெருக மக்களின் மனம் குறுகிவிட்டது வருத்தமான விஷயம்!''

- சா.வடிவரசு

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்