Published:Updated:

வலையோசை

வலையோசை

வலையோசை

வலையோசை

Published:Updated:
வலையோசை

குருப்பெயர்ச்சி

வலையோசை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த பத்து நாட்களாக எங்கள் தெருவெங்கும் மஞ்சள் தாள்கள் விநியோகம். அதில் குருப்பெயர்ச்சி பரிகார பலன், அதற்கான கட்டண விவரம். இப்படி பல கோயில்கள், பல மஞ்சள் தாள்கள். நான் என் குருப்பெயர்ச்சிப் பரிகாரத்தைச் சற்றே மாறுதலாகச் செய்தேன். அதில் குறிப்பிட்டு இருந்தக் கட்டணத்தில் பென்சில், நோட்டு புத்தகங்கள் வாங்கி என் வீட்டில் வேலை பார்ப்பவரின் குழந்தைகளுக்குக் கொடுத்தேன். இந்த மாடர்ன் பரிகாரத்துக்கு ஆத்ம திருப்தி இலவசம்! அந்த மஞ்சள் தாள்களுக்கு மொய் எழுதியவர்களுக்கு சொல்லிக் கொள்வது இதுதான். காலம் மாறிவிட்டது. ஆன்மிக 'ஆதின’ போலி சாமியார்கள் பலர் கிளம்பிவிட்டனர். ஆனால், மாறாமல் இருப்பது கடவுளும் நம் பக்தியும்தான். நாம் உழைத்து சம்பாதித்த காசு இன்னோர் உழைப்பாளிக்குத்தான் போய்ச் சேர வேண்டும். இது, என் 'கனவு’ குருப்பெயர்ச்சி பரிகார பலன். ராசி வாரியாக அல்ல; காசு வர்க்க வாரியாக. முயற்சித்துப் பாருங்கள்...

பெரும் பணக்காரர்கள்: இலவசப் பள்ளி ஆரம்பிக்கலாம்.

பணக்காரர்கள்: நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களை தத்தெடுத்து படிக்கவைக்கலாம்.

நடுத்தர வர்க்கத்தினர்: ஏழை மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம்  வாங்கித் தரலாம்.

படித்தவர்கள்: ஒன்றிரண்டு பேருக்காவது இலவசமாகப் பாடம் சொல்லித்தரலாம்.

நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் உள்ளோர்: தங்களின் குழந்தைகளை அவசியம் படிக்கவைக்கவும்!

வலியின் சங்கீதம்

வலையோசை

பதினோராம் வகுப்பு தொடங்கிய நேரம் அது. என் வீட்டின் அருகில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருந்த டீச்சரிடம் நாங்கள் கெமிஸ்ட்ரி டியூஷன் படித்தோம். என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பக்கத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருத்தி மகரஜோதி. அமைதியான பெண். என்னைவிட நன்றாகப் படிக்கக்கூடியவள். காலப்போக்கில் இருவரும் தோழிகள் ஆனோம். அவள் தன் தாயை ஆறு மாதங்களுக்கு முன் பறி கொடுத்து இருந்ததையும், தான் டாக்டராகி தன் தம்பி தங்கைகளைப் படிக்க வைக்கும் கனவோடு இருக்கிறாள் என்பதையும் தெரிந்துகொண்டேன்.  நான்கு குழந்தைகளுக்குச் சாப்பாடு போடுவதற்காகவே அடுத்த இரண்டு மாதத்தில் ஜோதியின் அப்பாவுக்கு மறுமணம் நடந்தது.  இதில் கொடுமை என்னவென்றால் ஜோதியின் சித்தி, ஜோதியை விட இரண்டு வயதே மூத்தவள். இடிந்து போனாள் ஜோதி. இந்தப் பிரச்னைகள் அவளை ஊருக்கே திருப்பி அனுப்பியது. தாயின் இழப்பு, தந்தையின் மறுமணம், தன் வயதில் ஒரு தாய், தம்பி தங்கைகளின் எதிர்காலம்... உங்களால் தாங்க முடியுமா? சிறிது காலம் கழித்து அவள் என்ன ஆனாள் என்று தெரிந்துகொள்ள முயற்சித்த போது, அவள் தந்தை இறந்துவிட்டார் என்றும், அவளுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது என்றும், கடந்த சில வருடங்களுக்கு முன் அவளுடைய கணவரும் சாலை விபத்தில் இறந்துவிட்டார் என்றும் சோக தகவல்கள் எனக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தன. 'கஷ்டங்களே வாழ்க்கை’ என்று இன்றும் ஜோதிபோல் பலர் இந்த உலகில் வாழ்கிறார்கள். ஜோதியின் இத்தனை இழப்புகளும் வேறு ஒரு தளத்தின் வெற்றிகளாக மலரும் எதிர்நாளில். இழப்புகள் வெற்றிகளாகட்டும். காத்திருக்கிறேன் நான். மகிழவும்... வாழ்த்தவும்!

மாற்றம்

வலையோசை

சமீபத்தில் கணவருடன் ஹோட்டலுக்குச் சென்று இருந்தேன். சனிக் கிழமை என்பதால் நிறையக் கூட்டம். ஒரு டேபிளில் அமர்ந்து மெனு கார்டை  பார்த்துக்கொண்டு இருந்தேன். எங்கள் டேபிளில் எதிரில்  வந்து அமர்ந்த அந்த மன வளர்ச்சிக் குன்றிய சிறுவனுக்கு 15 வயது இருக்கலாம். எங்களுக்கு வைத்திருந்த டம்ளரிலும் அவனுடைய டம்ளரிலும் தண்ணீர் ஊற்றினான். சர்வர்கள் வந்து அவனை வேறு டேபிளுக்கு மாற்றிவிட மாட்டார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. மாறாக, அவனிடம் சிரித்துப்  பேசினார்கள். என் கணவரிடம், 'நாம வேற டேபிள் போகலாமா’ என மெள்ளக் கேட்டேன். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

அந்தச் சிறுவன் எங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தான். 'வேற டேபிள் போகலாம்; இல்லை என்றால் வீட்டுக்குப் போகலாம்’ என்று நான் கோபமாகச் சொன்னதும்தான் பக்கத்துக்கு டேபிளுக்கு மாற என் கணவர் சம்மதித்தார். அந்தச் சிறுவனோ எங்களையே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி இருந்தான். நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் வந்து அமர்ந்தார் அவன் அப்பா. இட்லி, பூரி என்று அவன் சாப்பிட்டுக் கொண்டு இருந்ததை மாறாதப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டே இருந்தார். சாப்பிட்டு முடித்தவன், தான் சாப்பிட்ட தட்டுகளை எடுத்துக்கொண்டு ஓடிச்சென்று சர்வரிடம் கொடுத்தான். கை அலம்பிவிட்டு எங்களைப் பார்த்துச் சிரித்தபடிச் சென்றான். காரில் வரும்போது யோசித்தேன். அந்தச் சிறுவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? நான் சர்வரை சர்வராகப் பார்க்கிறேன். அவனோ வீட்டில் சாப்பிட்டுவிட்டுத் தட்டு எடுத்துக் கொடுப்பதுபோல் கொடுத்தான். வீட்டில் இருக்கும் மனிதர்களைப் போல் எங்களைப் பார்த்துச் சிரித்தான். தண்ணீர் ஊற்றினான்.

நான் ஹோட்டலுக்கு வரும் மனிதர்களை நாகரிக உடை, ஆபரணங்களை வைத்தே எடை போட்டேன். அவனோ, அனைவரையும் பார்த்துப் புன்னகைக்கிறான். நானோ, அந்தச் சிறுவனின் செய்கைகளை 15 நிமிடம் கூட பொறுக்க முடியாமல் வேறு டேபிள் மாறினேன். அவனுடைய அப்பாவோ, தன் மகனின்  ஒவ்வொரு செயலுக்கும் அவனை ரசிக்கிறார். குழம்பி விட்டேன். மனநிலை பாதிக்கப்பட்டது எனக்குதானோ? அந்தச் சிறுவனிடம் சிரித்துப் பழகிய சர்வர்கள் என்ன படித்து இருப்பார்கள்? அவர்களை விடப் பல மடங்கு படித்த எனக்கு அந்தப் பண்பு இல்லாமல் போனது ஏன்? வாழ்க்கையின் பகட்டை அகற்றி சக மனிதர்களை நேசிக்கக் கற்றுத் தந்த அந்த மாலை நேரம் என் மனதில் என்றென்றும் இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism