Published:Updated:

ஸ்பேசஸ்!

கலைஞர்கள் கனவுலகம்

ஸ்பேசஸ்!

கலைஞர்கள் கனவுலகம்

Published:Updated:
##~##

மிழ் நாடகக் குழுக்களின் தாய்வீடு எது? என்று கேட்டால் தயங்காமல் 'ஸ்பேசஸ்’ என்று சொல்லலாம். 'ஸ்பேசஸ்’ - சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் சுகமான காற்றை உள்வாங்கியபடி வீற்றிருக்கிறது. நாடகக் குழு வைத்திருப்பவர்களுக்கு முக்கியமானப் பிரச்னையாக இருப்பது ஒத்திகைக்கான இடம்தான். அப்படியே ஏதோ ஓர் இடம் கிடைத்து, அதை ஒத்திகைக்குப் பயன்படுத்திக் கொண்டாலும்கூட நாடகத்தை அரங்கேற்றுவதற்கு ஆகும் செலவுகளைப் பார்த்தால் விழி பிதுங்கிவிடும். இந்த இரண்டு பிரச்னைகளுக்குமே தீர்வாக இருப்பது ஸ்பேசஸ். நாட்டியக் கலைஞர் சந்திரலேகாவின் வீடுதான் இன்றைய ஸ்பேசஸ்.

 ஸ்பேசஸுக்குள் நுழைந்தவுடன் நம் கண்முன் விரிவது அதன் பசுமைதான். கடல் அலைகள் தாலாட்டும் தொலைவில், நகரின் போக்குவரத்துச் சத்தங்கள் எல்லாம் காற்றில் தோற்றுப்போய் வீழ்ந்த நிலையில், அழகான பச்சைப் பசேல் மரங்களோடு கம்பீரமாக நிற்கிறது ஸ்பேசஸ். கட்டடங்கள் எழில்மிகு கலைநயத்தோடு கேரள சாயலில் இருக்கின்றன. இங்கு 'சந்திர மண்டலா’, 'சந்திர மண்டபா’ என்ற இரண்டு அரங்கங்கள் உள்ளன. சந்திரலேகா நாட்டியப் பயிற்சி செய்த இடம்தான் 'சந்திர மண்டலா’. இங்கேதான் நாடக ஒத்திகைகள் நடக்கின்றன. நாடகங்கள் மட்டுமல்லாமல் நூல் வெளியீடு, சிறிய அமைப்புகளின் கூட்டங்கள், ஆடல் - பாடல் போன்ற நிகழ்த்து கலைகள், பாலியல் சிறுபான்மையினர் ஆண்டுதோறும் நடத்தும் 'நிறங்கள்’ நிகழ்வு, ஓவியக் கண்காட்சிகள், குறும்படங்கள் திரையிடுவது எனப் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இவற்றுக்கு இங்கு இருக்கும் அரங்கங்களைக் கட்டணம் இல்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்பேசஸ்!

ஸ்பேசஸை நிர்வகித்துவரும் சதானந்த் மேனன், தஸ்ரத் படேல் இருவரையும் சந்தித்தேன். சந்திரலேகாவின் நீண்ட நாளைய நண்பரான சதானந்த், ''1960-ல் இந்த இடத்தை சந்திரலேகா வாங்கியபோது இங்கே ஒரு புல் கூடக் கிடையாது. வெறும் மணல்தான். அதில் ஒரு கொட்டகை போட்டு இருந்தோம். இங்கு நிறைய செடி கொடிகளை வைக்கவேண்டும் என்பது சந்திரலேகாவின் ஆசை. ஆனால், கடலுக்கு அருகில் உள்ள இடம் என்பதால் உப்பு மண்ணில் ஒரு செடி கூட வளரவில்லை. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணைப் பதப்படுத்தி, இந்த மரங்களை உருவாக்கினோம்'' என்கிறார். ஸ்பேசஸுக்கு வருபவர்களுக்கு அதன் மரங்கள்தான் அந்த இடத்தை மிக நெருக்கமாக உணரவைப்பவை. ஸ்பேசஸைப் பராமரிக்கும் மூன்று ஊழியர்களுக்கும் சதானந்த் தன் சொந்தச் செலவில்தான் ஊதியம் அளிக்கிறார். அந்த செலவுக்காகக்கூட ஸ்பேசஸைப் பயன்படுத்துபவர்களிடம் அவர் பணம் பெறுவது இல்லை. ''பெரும்பாலும் சமூக அக்கறை உள்ளவர்களே ஸ்பேசஸைப் பயன்படுத்துகிறார்கள். சில சமயங்களில் நீண்ட காலம் இடத்தைப் பயன்படுத்தும் குழுக்கள், அவர்களாகவே இந்த இடத்துக்கு மேலும் அழகூட்டும் வகையிலோ அல்லது உபயோகப்படும்படியாகவோ ஏதேனும் பொருட்களை அளிப்பார்கள். அவர்களின் அன்பைக் கருதி அதை மட்டும் ஏற்றுக்கொள்வோம்'' என்பவர், இந்த இடத்தை உருவாக்கும் எண்ணம் எப்படி வந்தது என்பதைப் பற்றிச் சொல்கிறார்.

ஸ்பேசஸ்!

''எங்கள் குழு ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றுக்காக மூன்று நாட்கள் முன்னதாகவே டென்மார்க் சென்றுவிட்டோம். 'ஒத்திகைக்கான இடம் வேண்டும்!’ என்று கேட்டபோது, எங்களை ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். நகரின் மையப் பகுதியில் 27 அறைகளைக்கொண்ட கட்டடம் அது. வசதிக்கு ஏற்றபடி அளவில் சிறிய மற்றும் பெரிய அறைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கலைக்காகவே ஒதுக்கப்பட்ட அந்த இடத்தைப் பார்த்தபோது 'இப்படியான ஒரு வாய்ப்பு சென்னையில் நம் கலைஞர்களுக்கும் கிடைக்க வேண்டும்’ என்று சந்திரலேகா ஆசையாகச் சொன்னார். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் இன்றைக்கு ஓரளவுக்கு அது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 'இன்னும் நிறைய வசதிகளை ஸ்பேசஸில் செய்ய வேண்டும். பின்னணியில் கடல் தெரிகிற மாதிரி உயரமான மேடை அமைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்’ என்று சந்திரலேகா ஆசைப்பட்டார். இந்த அரங்கை இரவில் பயன்படுத்திக்கொள்ள முடியாது. அதற்கான தங்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஆசை எனக்கும் உண்டு'' என்கிறார் சதானந்த்.

ஸ்பேசஸ்!

1980 வரை இதன் பெயர் 'ஸ்கில்ஸ்’ என்று இருந்தது. அதன் பின்னே சந்திரலேகா இதற்கு 'ஸ்பேசஸ்’ என்று பெயரை மாற்றினார். கலைஞர்களுக்கான வெளி இது என்கிற பொருளில் இந்தப் பெயரை சந்திரலேகா வைத்திருக்கிறார்.  பரதம் போன்ற செவ்வியல் கலைகளுக்கு மட்டுமல்லாது எல்லா விதமான கலைகளையும் ஸ்பேசஸ் வளர்ப்பது சிறப்பு. நாடக ஒத்திகைகள் தவிர வாரத்தில் ஐந்து நாட்கள் களரி வகுப்புகள் நடக்கின்றன. நாடக இயக்குநர் அ.மங்கை, ''இன்றைக்கு ஸ்பேசஸில் கிளாசிக்கல் நடனங்கள் மட்டுமல்லாது ராப், பாப், நாட்டுப்புற இசை நிகழ்ச்சி என எல்லா விதமான இசையும் ஒலிக்கும். சந்திரலேகா மறைந்தவுடன் அவருக்கு அங்கே நடந்த இரங்கல் நிகழ்ச்சி இன்னமும் நினைவில் நிற்கிறது. அங்கு இருக்கும் ஒவ்வொரு செடிக்கு அருகில் சென்றாலும் அவருடைய குரல் ஒலிப்பது போலச் செய்திருந்தார்கள். ரொம்ப லைவ்வாக அவர் அங்கே இருப்பது போன்ற உணர்வு இருந்தது. இந்த உணர்வை ஸ்பேசஸ் தவிர வேறு ஒரு இடத்தில் பெற முடியாது'' என்கிறார்.

''கலாக்ஷேத்ரா போல் இருந்த ஸ்பேசஸ் இன்று மாற்றுக் கலைகளுக்கான இடமாக மாறியிருக்கிறது. இந்த இடத்தை நவீன

நாடகம் நடத்துபவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தது முக்கியமான விஷயம். சில இடங்களில் நாடக ஒத்திகைக்கான மூடு செட் ஆகாது. ஆனால், ஸ்பேசஸில் ஒரு அதிர்வினை உணர முடிகிறது'' என்கிறார் நாடக இயக்குநர் கருணா பிரசாத்.

''இது எங்களுடைய வீடு போலவே ஆகிவிட்டது. எத்தனை பிரச்னைகள் நடுவில் இருந்தாலும் இங்கே நுழைந்துவிட்டால் கிடைக் கும் நிம்மதி வேறு எங்கும் கிடைக்காது. சில இடங்களில் வாடகைக்கு இடம்பிடித்து ஒத்திகை நடத்தினாலும், அங்கே கெடுபிடிகள் அதிகமாக இருக்கும். ஆனால், இங்கே அப்படி எதுவும் கிடையாது. இந்த சுதந்திர உணர்வே வேலை செய்வதற்கான உணர்வையும் உற்சாகத்தையும் அதிகப்படுத்துகிறது'' என்கிறார் நாடக இயக்குநர் ஸ்ரீஜித் சுந்தரம்.

கலைஞர்களின் மனம் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியது. அந்தத் தன்மையை உள்வாங்கிக்கொண்டு ஸ்பேசஸ் இயங்குகிறது. ஸ்பேசஸ் இருக்கும்வரை மென்மேலும் பல கலைஞர்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்!

- கவின் மலர், படங்கள்: என்.விவேக்

சந்திரலேகா: ஒரு பார்வை!

ஸ்பேசஸ்!

 உலகம் முழுவதும் அறியப்பட்ட ஓர் இந்திய ஆளுமைதான் சந்திரலேகா. பாலசரஸ்வதி, ருக்மிணிதேவி அருண்டேல் ஆகியோரின் மாணவி. அறிவுலக மேதையாக இருந்தாலும் அதிகார வர்க்கத்தை எதிர்ப்பதில் முன்னணியில் நின்றவர். எமர்ஜென்சி அமலுக்கு வந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தார். பரதத்தோடு மேற்கத்திய நடனத்தையும் களரி போன்ற போர்க் கலையினையும் இணைத்து அவர் மேற்கொண்ட பரிசோதனை முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இவர் சென்னையிலேயே தங்கித் தனது பணிகளை மேற்கொண்டார்.

''போஸ்டர்கள் உருவாக்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். அது குறித்து பயிற்சிப் பட்டறைகளை நடத்தினார். பெண்கள் இயக்கங்கள் பலவற்றோடு இணைந்து பணியாற்றியவர். நாட்டியக் கலைஞர்களோடு நிற்காமல் அவருடைய நட்பு எல்லை கடந்து பரந்து விரிந்ததாய் இருந்தது'' என்கிறார் அ.மங்கை.

''சந்திரலேகா அரசியல்மயப்பட்டவராக இருந்தார். ரவீந்திரநாத் சட்டோபாத்யா போன்ற இடதுசாரி அறிஞர்களுடன் நட்பு கொண்டு இருந்தார்'' என்கிறார் நாடகவியலாளர் பிரளயன். அங்கிகா, லீலாவதி, பிராணா, ஸ்ரீ, யந்திரா, ராகா, ஸ்லோகா, ஷரிரா ஆகியவை கலை உலகத்தினர் மத்தியில் நினைவில் நிற்கும் இவருடைய புகழ்பெற்ற படைப்புகள். இவ்வளவு புகழ்பெற்ற சந்திரலேகா 2006 டிசம்பர் 30 அன்று மறைந்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism