Published:Updated:

அன்புள்ள அப்பாக்கள்!

அன்புள்ள அப்பாக்கள்!

அன்புள்ள அப்பாக்கள்!

அன்புள்ள அப்பாக்கள்!

Published:Updated:
அன்புள்ள அப்பாக்கள்!

மக்கள் மத்தியில் புகழ்பெற்ற தங்கள் தந்தையைப் பற்றி வாரிசுகள் கூறும் சில சுவையான விஷயங்கள்...  

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினகரி சொக்கலிங்கம்

''தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளரான புதுமைப்பித்தன் மகள் என்பதில் பெருமைதான். அதே சமயம், அவருடைய அன்பு வார்த்தைகளை நான் கேட்கக் கொடுத்து வைக்கவில்லை.

அப்பா இறக்கும்போது எனக்கு இரண்டரை வயசு... இறப்பதற்கு முன்புகூட அப்பா, அம்மாவிடம் 'கமலா, கவலைப்படாதே... தைரியத்தைக் கைவிடாதே... மனதைத் தளரவிடாதே... தினகரியை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள். உன் கவலைக்கு அவள்தான் மாற்று மருந்து...'' என்று என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

சின்ன வயசில் எனக்கு யாருமே தோழிகள் கிடையாது. புத்தகங்கள்தான் எனக்கு நண்பர்கள். அந்த வயதில் எனக்கு அப்பாவின் கதைகள் புரியவில்லை. இப்போது புரிகின்றன.

அன்புள்ள அப்பாக்கள்!

ஒரு கதைக்கு ஐம்பது ரூபாய் சன்மானம் கிடைத்தால், அதில் நாற்பது ரூபாய்க்கு அப்பா புத்தகம் வாங்கிவிடுவார். அப்பாவின் மறைவுக்குப் பிறகு, அவர் சேகரித்த புத்தகங்களை வைத்து எங்கள் வீட்டிலேயே 'புதுமைப்பித்தன் நூல் நிலையம்’ என்று ஒரு நூலகத்தை அம்மா தொடங்கினார்.

அப்பா நள்ளிரவில்தான் கதைகள் எழுதுவார். பத்திரிகைக்கு அதைக் கொடுப்பதற்கு முன்னால், அம்மாவிடம் படித்துக் காட்டிவிட்டுத்தான் கொடுப்பது வழக்கமாம். அம்மா எந்த இடமாவது புரியவில்லை என்று சொன்னால், அப்பா விளக்கிச் சொல்வாராம்.

அம்மாவும் அப்பாவும் ரிக்ஷாவில் ஏறி ஹோட்டலுக்குப் போவார்களாம். சாப்பிட்ட பிறகு, தாங்கள் சாப்பிட்ட மாதிரி இன்னும் ஒரு பார்சல் அப்பா கட்டச் சொல்வாராம். தங்களை ஏற்றிக்கொண்டு வந்த ரிக்ஷாக்காரரிடம் அந்தப் பார்சலைக் கொடுத்து, 'ராசா! முதல்ல நீ சாப்பிடு... அப்புறம் வண்டி எடு’ என்பாராம்.

மிச்சமாகும் நாலணா நாணயங்களைக் கூஜாவில் போட்டுச் சேர்த்துவைப்பாராம் அப்பா. அதேபோல, பழைய சட்டைகளைப் பாத்திரக்காரனுக்குப் போட விட மாட்டார். அம்மாவிடம் 'உன் துணியை என்ன வேணும்னாலும் செய்துக்கோ... என் வஸ்திரத்தில் கை வைக்காதே...’ என்று தன் பழைய ஜிப்பா - வேட்டிகளை எல்லாம் டிரங்குப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைப்பார். தீபாவளி வந்தால், அந்தப் பேட்டையில் இருக்கும் ரிக்ஷாக்காரர்கள் எல்லாம் வீடு தேடி வந்துவிடுவார்கள். ஒவ்வொருவருக்கும் தலைக்கு நாலணாவும் ஒரு வேட்டியோ அல்லது ஜிப்பாவோ கொடுப்பார் அப்பா. அதனால் அப்பா ரோட்டில் நடந்துபோவதைக் கண்டால், உடனே அவரை ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டுத்தான் அடுத்த சவாரி தேடுவார்கள் ரிக்ஷாக்காரர்கள்.''

அகிலன் கண்ணன்

''நான் எட்டாவது படித்துக்கொண்டு இருந்த சமயம்... ஒருநாள் மாலை... ஒரு நடன நிகழ்ச்சியைப் பார்க்கக் கிளம்பினேன். புறப்படுவதற்கு முன், நான் வளர்த்து வந்த கிளியைப் பத்திரமாக வீட்டு ஹாலில் கூண்டுக்குள் அடைத்துவைத்தேன். கிளி மூச்சுவிட வசதியாக, அந்த ஹாலின் ஒரு ஜன்னலை மட்டும் நான் திறந்து வைத்துவிட்டு நிகழ்ச்சிக்குக் கிளம்பினேன்.

அன்புள்ள அப்பாக்கள்!

நடன நிகழ்ச்சி முடிந்து இரவு ஒன்பது மணி அளவில் வீடு திரும்பினோம். வாசல் கதவைத் திறந்த அதே விநாடியில், 'கீச்... கீச்...’ என்ற கிளியின் அலறல் சத்தம். கூண்டு தரையில் விழுந்து சிதறிய ஒலி... பூனையன்று அந்த பச்சைப் பசுங்கிளியை வாயில் கவ்விக்கொண்டு ஓடும் காட்சியைக் கண்டு திடுக்கிட்டேன்.

என் தந்தை (அகிலன்) பாய்ந்து, என் காலரைப் பிடித்திழுத்து - 'கிளியை வளர்த்து பூனை கையில் குடுத்திட்டியேடா பாவி...’ என்று கோபாவேசத்துடன் என் கன்னத்தில் மாறி மாறி அறைந்ததை இன்றும் மறக்கவே முடியாது.

அப்பா எழுத்தில் ஆழ்ந்துவிட்டால், பூகம்பமே நிகழ்ந்தாலும் அவருக்குத் தெரியாது. பள்ளிக்குத் தேவையான பென்சில், பேனா, நோட்டுப் புத்தகங்களாக இருந்தாலும் சரி, வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்களாக இருந்தாலும் சரி... அவற்றைப் பட்டியலாக எழுதி அப்பாவின் டேபிளில் வைப்போம்... அந்தப் பட்டியல் சீட்டைப் பார்த்து அதற்குத் தேவையான பணத்தை அந்தச் சீட்டின் மேல் வைத்துவிடுவார் அப்பா. நாங்கள் பிறகு எடுத்துக்கொள்வோம். மாதா மாதம் ஒரு முறை 'வீட்டுக் கூட்டம்’ நடத்துவார். 'பாய்ஸ்... கேர்ள்ஸ்... இன்றைக்குச் சாயங்காலம் மீட்டிங்...’ என்று காலையிலேயே நோட்டீஸ் கொடுத்துவிட்டு, வானொலி நிலை யத்துக்குச் சென்றுவிடுவார். மாலை யில், பிரம்பு நாற்காலியில் சாய்ந்த வண்ணம் கூட்டத்தை ஆரம் பிப்பார்.

வெளியூர்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் சென்று திரும்பினால், பயண அனுபவத்தைச் சுவையாக ஒரு கதைபோல் கூறுவார்!''

லேனா தமிழ்வாணன்

''விடியலில் நான்கு மணிக்குஎல்லாம் எழுந்துவிடும் அப்பா (தமிழ்வாணன்) காலைக் கடன்களை முடித்துவிட்டு, ஏழு மணி வரை எழுதுவார். காபி நிறையக் குடிப்பார். கணக்கு வழக்கே கிடையாது. ஒரு

அன்புள்ள அப்பாக்கள்!

நாளைக்கு இருபது கப்கூடக் குடித்திருக்கிறார். காலையில் ஏழு மணிக்கு மேல் அநேகம் பேர் அவரைப் பார்க்க வந்துவிடுவார்கள். 'இந்த உலகம் ஏழு மணிக்குப் பிறகு மற்றவர்கள் உலகமாகிவிடுகிறது. நமக்குச் சொந்தமில்லை...’ என்று அப்பா சொல்வார்.

அலுவலக வேலைகளை முடித்துவிட்டு, கன்னிமரா நூலகம் அல்லது லோக்கல் லைப்ரரிக்குச் சென்றுவிடுவார். கறுப்புக் கண்ணாடி அணிந்தபடியே, அவர் தன்னைப் பிரபலப்படுத்திக் கொண்டு இருந்தார். இதனால் அவருக்கு ஒரு சௌகரியம் இருந்தது. கண்ணாடியை அகற்றிவிட்டால் பொதுமக்களுக்கு அவரை அடையாளம் தெரியாது. எனவே, கண்ணாடியை எடுத்து விட்டு அவர் எந்தவிதத் தொல்லையும் இன்றி நூலகங்களில் சர்வ சுதந்திரத்துடன் வலம் வந்தார்.

'நேஷனல் ஜியாக்ரஃபிக்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு உண்மைச் சம்பவத்தைப் படித்தேன். அதைப் 'புலிக்கு ஆபரேஷன்’ என்று தமிழில் மொழிபெயர்த்து அப்பாவிடம் கொடுத்தேன்.

மூன்று வாரங்கள் கழித்து 'லேனா’ என்ற பெயரில், என் கட்டுரை 'கல்கண்டு’ பத்திரிகையில் வெளிவந்தது. லட்சுமணன் என்ற என் பெயரை, ராமநாதபுரம் மாவட்டம் பாணியில் 'லேனா’வாக்கியிருந்தார் அப்பா. பதினைந்து ரூபாய்க்கு எனக்கு ஒரு 'செக்’ வந்தது.

எனக்கு இருபத்திரண்டு வயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. கல்யாணம் ஆன கையோடு 'வெளிநாட்டுக்கு 'ஹனிமூன்’ போக வேண்டும் என்றேன். 'நீ சின்னப் பையன், வேண்டாம்’ என்று அப்பா மறுத்தார். மீண்டும் கேட்டபோது, 'பக்கத்தில் மகாபலிபுரத்துக்குச் சென்று வா’ என்று அனுப்பினர். நான் மகாபலிபுரம் சென்ற அடுத்த நாளே என்னைப் பார்க்கக் குடும்பத்துடன் அங்கு வந்துவிட்டார். எனக்குத் தெரிந்தவரை பிள்ளையை 'ஹனிமூனு’க்கு அனுப்பிவிட்டுப் பின்னாலேயே துரத்திக்கொண்டுவந்த ஒரே அப்பா அவராகத்தான் இருக்க வேண்டும்!''

டி.கே.எஸ்.கலைவாணன்

அன்புள்ள அப்பாக்கள்!

''என் அப்பாவுக்கு (டி.கே.சண்முகம்) கலைவாணரிடம் மிகுந்த ஈடுபாடு உண்டு. எனவே, அப்பா எனக்குக் 'கலைவாணன்’ என்று ஆசையுடன் பெயர் வைத்தார்.

அப்பாவுடன் நாடக ரிகர்சல்களுக்கு நானும் போவேன். குழுவில் உள்ள சக நடிகர்களை சொந்தப் பிள்ளைகள் போலப் பாசத்துடன் நடத்துவார். சக நடிகர்கள் யாரையும் நாங்கள் பெயர் சொல்லிக் கூப்பிடக் கூடாது. 'அண்ணன்’ என்றுதான் அழைக்க வேண்டும்.

'ஒளவையார்’ நாடகத்துக்காகக் குனிந்தபடியே 'ஒளவையார்’ வேடத்தைச் செய்துவிட்டு, வீட்டுக்கு வந்து இடுப்பு வலியால் அவதிப்படுவார். பார்க்க மனசுக்குக் கஷ்டமாக இருக்கும். இரவு அப்பா தூங்கும் அறையில்தான் எங்களுக் குப் படுக்கை. நாங்கள் எங்காவது வெளி யில் சென்றுவிட்டால், வீடு திரும்புகிற வரை விழித்துக்கொண்டு காத்திருப்பது அவர் வழக்கம். திருமணம் ஆகும் வரை யாரும் தனி அறையில் படுக்கக் கூடாது என்பது அவருடைய கட்டளை.

அப்பாவுடன் நாங்கள் கோயில்களுக்குப் போவோம். 'எங்கெல்லாமோ பாடுகிறோம்... தெய்வ சந்நிதியில் கூச்சப்படாமல் வாய்விட்டு மனமுருகிப் பாட வேண்டும்’ என்பார். நாங்கள் யாரேனும் பாடத் தயங்கினால், அவரே பாடத் தொடங்கிவிடுவார். அந்தப் பழக்கம் காரணமாக, நான் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் கூச்சமோ, தயக்கமோ இல்லாமல் பாடத் தொடங்கிவிடுவேன்.

ஒரு முறை அறத்துப்பால் முழுவதையும் ஒரே வாரத்தில் நான் மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டும் என்றார். என்னால் ஒப்புவிக்க முடியவில்லை. விளைவு, என் இரண்டு கைகளும் பிரம்படி பட்டுப் புண்ணாயின. இதனால், அம்மா ஒரு மாதம் வரை அப்பாவுடன் பேசவே இல்லை. அப்போது அம்மாவிடம் 'பிள்ளைகளை ஆசிரியர் ஸ்தானத்தில் இருந்து யார் கண்டித்தாலும் நீ குறுக்கே வரக் கூடாது. கண்டிப்பில் வருகிற ஒழுங்கு வேறெதிலும் வராது...’ என்று அப்பா சொன்னார்!''

ஜீவா மணிக்குமார்:

அன்புள்ள அப்பாக்கள்!

''அப்பாவும் (ஜீவானந்தம்) அம்மாவும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். இருவரும் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள். நான் நான்காம் வகுப்புப் படிக்கும்போது, வாத்தியார் ஒரு விண்ணப்பப் பாரத்தைக் கொடுத்து, 'என்ன சாதி என்று எழுதிக் கொண்டு வா!’ என்றார். அப்பாவிடம் கேட்டேன். 'மனித சாதி என்று சொல்’ என்றார் அப்பா.

ஆசிரியரிடம் இதைச் சொன்னதும் எனக்கு உதை விழுந்தது. அப்புறம் தான் ஆசிரியர் சுதாரித்துக்கொண்டு 'அம்மாவிடம் போய்க் கேள்’ என்று சொன்னார். அப்புறம் அம்மாவிடம் கேட்டு எழுதிக்கொண்டு போனேன்.

அப்போது நாங்கள் வண்ணாரப்பேட்டையில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம். அம்மாவுக்குச் செடி, கொடிகள் என்றால் கொள்ளை ஆசை. சின்னச் சின்னத் தொட்டிகளில் செடி வைத்திருந்தார். அப்பாகூட அம்மாவை 'செடிப் பைத்தியம்’ என்று கேலி செய்வார்.

குடும்ப நண்பர், வணிகர் தா.மு.கோவிந்தன் ஒரு நாள் அம்மாவிடம் 'சொந்தமாக வீடு இருந்தால் பெரிய மரமே வளர்க்கலாமே!’ என்று சொன்னார். கடைசியில் தாம்பரத்தில், தற்போதுள்ள இந்த இடத்தை வாங்கிப் போட்டு, குடிசை ஒன்றையும் அம்மா கட்டினார். இந்த வீடு ரொம்பக் காலம் குடிசையாகத்தான் இருந்தது. குடிசை வீட்டில் வாழ்ந்த அப்பாவைப் பார்த்துக் கண்கலங்கிய காமராஜர், 'என்ன ஜீவா... இந்த இடத்தில் இருந்துக்கிட்டு எங்களையெல்லாம் கேவலப்படுத்தறே. சொல்லு... அரசு சார்பில் ஒரு வீடு தரச்சொல்றேன்’ என்றார்.

'நீதான் சோஷலிசம் பேசறியே, நம்ம நாட்டில் சோஷலிசம் வந்துட்டா, எல்லாருக்கும் ஒரு வீடு கிடைக்குமில்லே? அப்போ எனக்கும் கிடைக்கட்டும்’ என்றார் அப்பா. 'உன்னுடன் பேசி ஜெயிக்க முடியாது’ என்று காமராஜர் போய்விட்டார்.

எடிட்டர் லெனின்

அன்புள்ள அப்பாக்கள்!

''எனக்கு அப்பாவிடம் (பீம்சிங்) மிகவும் பிடித்தது அவரது மிருதுத்தன்மை. அதிர்ந்தே பேச மாட்டார். சக ஊழியர்களை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு அருமையாக 'ஸ்க்ரீன் ப்ளே’ எழுதி வாங்கிக்கொள்வார் அப்பா. திரைக்கதைதான் அவரது பெரிய பலம். 'பாசமலர்’, 'பாவமன்னிப்பு’, 'பாலும் பழமும்’ போன்ற படங்களைப் பார்த்தவர்களுக்கு எத்தனை அருமையாக அந்தக் கதைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன என்பது புலனாகும்.

அப்பா சின்ன வயதில் பள்ளிக்கூட நாடகங்களில் எல்லாம் நடித்துப் பரிசு வாங்கியவர். அவர் படித்தது புரசைவாக்கம் முத்தையா செட்டியார் பள்ளியில். 'ஸ்த்ரீ பார்ட்’கூடப் போட்டிருக்கிறாராம். மேடை நாடகங்களை விடாமல் போய்ப் பார்ப்பார்.

ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலைப் படமாக்கியபோது மிகவும் பூரித்தார். 'இந்த எழுத்தாளரை இத்தனை காலம் கடந்து கண்டெடுத்தேனே’ என்று அங்கலாய்த்தார். ஜெயகாந்தனும் அப்பாவும் ஆத்மார்த்தமாகப் பேசிக்கொள்வார்கள். தொடர்ந்து ஜெயகாந்தனின் பல கதைகளைப் படமாக்க வேண்டும் என்று அப்பா ஆவல் கொண்டிருந்தார். ஆனால், 1978-ல் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படத்தை முடிக்காமலே மறைந்துவிட்டார். நாங்கள் எல்லாம் முயற்சி எடுத்து முடித்தோம்.

அப்பாவுக்குப் பாரிச வாயு வந்து படுத்துவிட்ட நேரம். நியூரோ சர்ஜன் ஒருவர் தினமும் வந்து ஊசி போடுவார். அதற்காக அன்றாடம் முந்நூற்றைம்பது ரூபாய் தேவைப்பட்டது. அப்போது எங்கள் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி... ஒரு பட விநியோகஸ்தரிடம் பணம் கடன் கேட்டு ஆள் அனுப்பினார்.

'பீம்சிங் தேற மாட்டார்... கடன் கொடுத்தால் திரும்பப் பெற முடியாது’ என்று எண்ணிய அந்தப் புண்ணியவான் கையை விரித்துவிட்டார். அதிர்ஷடவசமாக அப்பா பிழைத்துக்கொண்டார். தன் உதவியாளர்களான திருமலை, மகாலிங்கம் இருவருக்குமே ஒரு படத்தை இயக்க வாய்ப்பளித்தார். இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது பிரபல நட்சத்திரங்கள் பலர் மறுத்துவிட்டார்கள். சாதாரண நடிகர்களை வைத்துப் படம் முடிக்கப்பட்டது. படம் நன்றாக வந்திருக்கிறது என்று செய்தி பரவியதும் பல விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்க முன்வந்தார்கள். அப்பா நோயாளியாக அவதிப்பட்டபோது கடன் உதவி  செய்யாத 'புண்ணியவானும்’ அப்பாவைத் தேடி வந்தார். அப்பா மறுப்பேதும் சொல்லாமல் அவருக்கு விநியோக உரிமை வழங்கினார். 'என்னப்பா பகைவனுக்கும் அருள்வாய் என்கிற பாலிஸியா?’ என்று கேட்டேன்.

'பகைவன்னு இருந்தாத்தானே அருள் செய்ய... எனக்கு யாரும் பகைவர்கள் கிடையாது’ என்றார் பளிச்சென்று!''

- சந்திப்பு: எஸ்.குரு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism