Published:Updated:

மலைகளின் ராஜா !

ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

மலைகளின் ராஜா !

ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

Published:Updated:
##~##

சின்னக் கவுண்டர்’ படத்தில் வரும் முதல் காட்சியில் விஜயகாந்த் சொல்லும் தீர்ப்பைக் கேட்டு, 'இந்த வழக்கு கோர்ட்டுக்கு வந்திருந்தா ஆயுசுக்கும் முடிஞ்சிருக்காதே... ஆனா, இங்க அஞ்சே நிமிசத்துல தீர்ப்பு சொல்லி முடிச்சுட்டாரே’னு ஆச்சர்யப்படுவார் ஒரு நீதிபதி. கிட்டத்தட்ட அதேபோல் ஓர் ஊர் இருக்கிறது. அந்த ஊரைச் சுற்றிலும் உள்ள 36 கிராமத்துக்கும் ஒருவர்தான் நீதிபதி என்ற ஆச்சர்யத் தகவலைக் கேள்விப்பட்டதும் அங்கே கிளம்பிச் சென்றேன்.

கொடைக்கானலில் மலைகளுக்கு நடுவில் இருக்கிறது தாண்டிக்குடி. செல்போன், இன்டர்நெட், அதற்கான கோபுரங்கள், லேட்டஸ்ட் வாகனங்கள் என நவீன வசதிகளுக்குக் குறைவு இல்லாத அழகிய மலைக் கிராமத்தில் வசிக்கும் அந்த நீதிபதியைச் சந்தித்தேன்.  ''என் பேர் மங்களம் காந்தி. எங்க மலைக் கிராமத்துல இன்னும் பழைய சாஸ்திர, சம்பிரதாயங்களை விடாமத் தொடர்ந்துக்கிட்டு இருக்கோம். இந்த இடத்தைச் சுத்தி இருக்கிற 51 கிராமங்கள்லேயும் தலைவர், மந்திரி, பூசாரினு சாதிக்கு ஒரு பதவி இருக்கும். அது எல்லாத்துக்கும் தலைவர் பட்டக்காரர். அந்தப் பட்டக்காரர் நான்தான். கோயில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட முக்கிய பிரச்னைகள்ல தீர்ப்பு சொல்றது, முக்கியமான முடிவுகளை எடுக்குறதுதான் பட்டக்காரரோட வேலை. பட்டக்காரர் ஒரு கிராமத்துக்கு நினைச்சவுடனே போக முடியாது. அதுக்குன்னு சில சம்பிரதாயங்கள் இருக்கு. சம்பந்தப்பட்ட கிராம நிர்வாகத்துக்குத் தகவல் கொடுத்துட்டுத்தான் போகணும். அவங்க பட்டக்காரருக்கு பாத பூஜை செஞ்சு, பாரம்பரிய இசைக் கருவிகளை இசைச்சு உரிய மரியாதையோட வரவேற்பாங்க. இதுதான் நடைமுறை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மலைகளின் ராஜா !

வழக்கமா எங்க பரம்பரையிலேயேதான் பட்டக்காரரைத் தேர்ந்தெடுப்பாங்க. பதவியில் இருக்கிற பட்டக்காரர் இறந்தா, அவர் உடலை எடுக்குறதுக்குள்ளயே அடுத்த பட்டக்காரரைத் தேர்ந்தெடுத்துடுவாங்க. அதுக்காக அந்தக் குடும்பத்துல இருக்கிற ஆண் வாரிசுகள் அத்தனை பேரையும் எங்க குலதெய்வம் கரிமால் கோயில்ல வரிசையா நிக்க வெப்பாங்க. அப்போ கோயில் பூசாரி மேல அருள்வந்து அவர் யார் மேல மாலையைப் போடுறாரோ, அவர்தான் அடுத்தப் பட்டக்காரர். பட்டக்காரராத் தேர்வான நபருக்கு பல கடுமையானக் கட்டுப்பாடுகள் உண்டு. அதில் முக்கியமானது எந்தப் பிணத்தின் முகத்தையும் பட்டக்காரர் பார்க்கக்கூடாது. இறந்தது அவருடைய தாயாக இருந்தாலும் கூட. சாவு நடந்து 30 நாள் வரைக்கும் வீட்டுப் பக்கமே போகக்கூடாது. அந்த ஆன்மாவுக்காக இறுதிச் சடங்குகள் முடியிற வரைக்கும் தெய்வத்தை வணங்கிக்கிட்டு இருக்கணும். மழை பெய்யும்போது குடை பிடிக்கக்கூடாது. கால்ல செருப்பு போடக் கூடாது. நிமிந்து வானத்தைப் பாக்கக் கூடாது. இப்படி கடுமையானக் கட்டுப்பாடுகள் இருக்கு. நான் பட்டக்காரரா வந்த பிறகு, என் மனைவி இறந்துட்டாங்க. இறுதிக் காரியத்துக்கு நான் போகலை. அதுக்காக நான் வருத்தப்படலை... எங்களுக்கு ஐதீகம்தான் முக்கியம்'' என்கிறார் பட்டக்காரர்.

மலைகளின் ராஜா !

இது தொடர்பாக, காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருக்கும் பழனிவேல் ராஜனிடம் பேசினேன். ''தாண்டிக்குடி மலையில பல இனக் குழுக்கள் வசிக்கிறாங்க. பட்டக்காரர் பரம்பரை, பழநிமலை குன்னுவர் மன்னாடி இனத்தைச் சேர்ந்தவங்க. பட்டக்காரர்னா 'மலைகளின் ராஜா’னு அர்த்தம். இங்க இன்னும் பல ஆச்சர்யமான விஷயங்கள் இருக்கு. பளியர் இனத்தைச் சேர்ந்த ஒருத்தரை 'மழைக்கட்டு’ங்கிற பதவிக்குத் தேர்ந்தெடுப்பாங்க. இந்த மழைக்கட்டு சொன்னா சொன்ன தேதியில மழை பெய்யும்னு ஐதீகம்.

மலைகளின் ராஜா !

கரியமால் தாளம், தெய்வதாளம், ராஜா தாளம், நெல்லுக் குத்து தாளம், மழை வருவதற்கான தாளம்னு பாரம்பரிய இசைக் கருவிகளைக்கொண்டு விதவிதமான தாளங்களை இசைப்பாங்க. 'கோக்கல்’ங்கிற ஆதிவாசிகளோட இசைக் கருவியை இப்பவும் இவங்க வாசிக்கிறாங்க. பொதுவா இவங்க உறவுக்குள்ளதான் பெண் எடுத்துக்குவாங்க. தாய் மாமன் விரதம் இருந்து காட்டுக்குள்ளப் போய் 'பொரைப் பூ’னு ஒரு வகையானப் பூவைத் தேடிப் பிடிச்சு பறிச்சுட்டு வரணும். அப்படிப் பூவைப் பறிக்காம வந்தா பொண்ணு கொடுக்க மாட்டாங்க. இது போல் இன்னும் பாரம்பரியமா பல விஷயங்களை இப்பவும் கடைபிடிச்சுட்டு வர்றாங்க'' என்று ஆச்சர்யப்படுத்தினார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism