Published:Updated:

தாமிரபரணிக்குப் பிறந்த நாள் !

இ.கார்த்திகேயன் படங்கள்: ஏ.சிதம்பரம்

தாமிரபரணிக்குப் பிறந்த நாள் !

இ.கார்த்திகேயன் படங்கள்: ஏ.சிதம்பரம்

Published:Updated:
##~##

மனிதர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடுவோம். அதிகபட்சம் செல்லப் பிராணிகளுக்கு கொண்டாடுவார்கள். ஓர் ஆற்றுக்குப் பிறந்த நாள் கொண்டாடி பார்த்திருக்கிறீர்களா?  தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள கருங்குளம் கிராமத்தில்  தாமிரபரணி ஆற்றுக்குப் பிறந்த நாள் கொண்டாடினார் கள், செய்துங்கநல்லூர் தாமிரபரணி நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள். இவர்களுடன் ஊர் மக்களும் வெகுவாகத் திரண்டு இருந்தார்கள். சரியாகக் காலை 6 மணிக்கு எல்லாம் ஆற்றங்கரையில் நீராடிவிட்டு, குழந்தைகளையும் ஆற்றில் மூன்று முறை மூழ்கவைத்து, நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு ஈரத் துணியுடன் ஆற்றை நோக்கி கைகூப்பி நின்றார்கள் அனைவரும்.

ஆற்றங்கரையில் மணலைக் குவித்துவைத்து, அதன் மேல் வாழை இலை விரித்து, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, அவல், பொரி, கல்கண்டுவைத்துப் படைத்து, பின்பு தேங்காய் உடைத்து ஆற்றுக்குக் காண்பித்தார்கள். பிறகு, ஒவ்வொருவராக ஆற்றுக்குள் இறங்கி, உள்ளங்கையில் வெற்றிலை வைத்து, அதன் மேல் கற்பூரம் ஏற்றி, ஆற்றில்விட்டு, பூக்களைத் தூவி ''தாமிரபரணித் தாயே வாழ்க... தாமிரபரணிக்கு ஜே... என்றும் வற்றாமல் தண்ணீர்ப் பெருக்கி எங்களை வாழவை தாயே...'' என்று  கோஷமிட்டு, கரைக்கு வந்து ''தாமிரபரணிக்குப் பிறந்த நாள்'' என்று சொல்லி எல்லாருக்கும் சாக்லேட் கொடுத்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாமிரபரணிக்குப் பிறந்த நாள் !

ஆற்றுக்குப் பிறந்த நாள் கொண்டாடுவது பற்றி ஊர்க்காரரான காளிமுத்து திருப்பதியிடம் பேசினோம். ''புராணக் கதைப்படி சிவன், பார்வதி திருமணத்தைக் காண உலகில் உள்ள அத்தனை ரிஷிகளும், முனிவர்களும், தேவர்களும் வடக்குப் பக்கம் சென்றுவிட்டார்கள் அதனால், வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்துவிட்டது. இதனால், அகத்திய முனிவரை தென் பகுதிக்குப் போகச் சொல்லி உத்தரவிட்டார் சிவன். அப்போது பார்வதி அகத்தியருக்கு ஒரு மாலையைக் கொடுத்தார். அது தாமிரத்தால் ஆன மாலை. அதைக் கமண்டலத்தில் போட்டுக்கொண்டு அகத்தியர் பொதிகை மலை உச்சிக்கு வந்து,கமண்டலத்தைக் கவிழ்த்துவிட்டார்.

அது ஆறாக மாறி ஓடி தாமிரபரணி ஆயிற்று. அகத்தியர் அப்படிக் கமண்டலத்தைக் கவிழ்த்த நாள்தான் வைகாசி விசாகம். அதனால், தாமிரபரணிக்கு வைகாசி விசாகம் அன்று பிறந்த நாள். நம் தாகம் தீர்க்கும் இந்தத் தாமிரபரணித் தாயை அந்த நாளில் வணங்குவது மிக நல்லது. வைகாசி விசாகம்னா இந்துக்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கும்கிறிஸ்து வர்கள் புளியம்பட்டி அந்தோணியார் கோயிலுக்கும் இஸ்லாமியர்கள் காயல்பட்டினம் தர்காவுக்கும் போவாங்க...  தாமிரபரணிக்கு மதம் இல்லை, சாதி இல்லை. தாகம் தீர்க்கும் குணம் மட்டும்தான் இருக்கு. கடந்த மூணு வருஷங்களா நிறைய கிறிஸ்துவர்களும், முஸ்லிம் சகோதரர்களும் பூஜையில் கலந்துக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு'' என்றார்.

தாமிரபரணிக்குப் பிறந்த நாள் !

தாமிரபரணி ஆறுகுறித்து அங்கு வாழும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசும்போது ''தாமிரபரணிக்குப் பிறந்த நாள் கொண்டாடுவது நல்ல விஷயம். ஆனால், அதே சமயம் அதைப் பாதுகாக்கவும் வேண்டும். தாமிரபரணி முழுவதும் அமலைச் செடிகள் சூழ்ந்து காணப்படுகின்றன. இந்த அமலைச் செடி,  சராசரியாக நாள் ஒன்றுக்கு இரண்டு லிட்டர் தண்ணீரை உறிந்துகொள்ளும். இதனாலும், ஆற்றில் மணலை அள்ளுவதாலும்  ஆற்றின் அடிப் பகுதியில் உள்ள களிமண் மேலே வந்து, கலங்கல் ஆகிவிடும். நீரின் அளவு நாளுக்கு நாள் குறையும். இந்த நிலை நீடித்தால் இன்னும் சில வருடங்களில் தாமிரபரணி கூவமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது.

தாமிரபரணிக்குப் பிறந்த நாள் !

இப்போது அபூர்வ மீன் வகைகளானக் கெண்டை, கெலுத்தி, அயிரை ஆகிய மீன் வகைகள் ஆற்றில் எங்கும் பார்க்க முடிவது இல்லை. தாமிரபரணி ஆற்றின் அழகு கெட்டு, தண்ணீரின் சுவையும் குறைந்துவருகிறது. ஒரு காலத்தில் தாமிரபரணித்  தண்ணீரை நம்பி கார், முன்கார், பிசானம் என்று முப்போக நெல் விளைச்சல் நடந்தன. ஆனால், இன்று வருடத்துக்கு ஒரு போக நெல்கூட விளைய வைக்க முடியவில்லை. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், காரியாபட்டி வரை உள்ள மக்கள்  தாமிரபரணியை நம்பித்தான் வாழ்கிறார்கள்.  எல்லா அடிப்படைத் தேவைக்குமே நாங்கள் தாமிரபரணியையே நம்பி இருக்கிறோம்.  வாருங்கள் நம்முடைய தாமிரபரணியை நாம் அனைவரும் கைகோத்து காப்போம்!'' என்றார்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism