Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

லகத்தின் இப்போதைய மக்கள் தொகை 700 கோடிக்குச் சற்றே அதிகம்.

• இவர்களில் எத்தனை பேருக்கு இணைய வசதி இருக்கிறது தெரியுமா?

•  உலகம் முழுவதும் எத்தனை அலைபேசி இணைப்புகள் இருக்கின்றன தெரியுமா?

•  எத்தனை பேரிடம் 3ஜி அலைபேசி இணைப்பு இருக்கிறது தெரியுமா?

•  அலைபேசிப் பயனீட்டாளர்களில் எத்தனை பேர் அலைபேசியைப் பயன்படுத்தி இணையம் செல்கிறார்கள் தெரியுமா?

பதில்கள் கட்டுரையின் இறுதியில்...

குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளைப் பதிவுசெய்யலாம்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

முதல் சங்கதி ஐபிவி6 (IPV6).  சென்ற வாரத்தில் உலகெங்கும்  இருக்கும் இணைய சாதனங்களை நான்கு எண்கள் கொண்ட ஐபிவி4 முறையில் இருந்து ஆறு எண்கள் கொண்ட ஐபிவி6 முறைக்கு மாற்றும் 'ஐபிவி6 துவக்க நாள்’ குறிக்கப்பட்டது. அது என்ன ஐபிவி6..?

இணையத்தில் உங்கள் கணினி, குளிகை, அலைபேசி போன்ற இன்ன பிற சாதனங்களை இணைக்கும்போது, அதற்கு ஐபி விலாசம் ஒன்று அளிக்கப்படும். வீட்டில் இருக்கும் அம்மி, ஆட்டுக்கல் தவிர, மற்ற சாதனங்கள் அனைத்தும் இணையத்தில் இணைக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

என்பதால், நான்கு எண்கொண்ட முகவரி முறை போதுமானதாக இருக்காது. மாறாக, ஆறு எண்கள்கொண்ட முகவரியைப் பயன்படுத்தினால், பல்லாயிரம் மடங்கு அதிகமான சாதனங்களுக்கு ஐபி முகவரி கொடுக்க முடியும் என்பதால், உலக நாடுகளில் இணைய இணைப்புக்குப் பொறுப்பாக இருக்கும் துறைகளிடம் ஐபிவி6-க்கு மாறும்படி சென்ற ஒரு வருடமாக விண்ணப்பம் எழுப்பப்பட்டது. பல நாடுகள் மாறிவிட்டன. சோம்பலாகத் தூங்கி வழியும் சில நாடுகளில் ஒன்று, நம் பெருமைக்குரிய பாரதம்.

இரண்டாவது சங்கதி... சென்ற மாதம் இந்தியா சார்ந்த மிகப் பெரிய மைல்கல் நிகழ்வு... மேசை மற்றும் மடிக்கணினிகளில் இருந்து இணையம் செல்லும் போக்குவரத் தின் அளவுக்குச் சமமாக, அலைபேசி, குளிகை போன்ற மொபைல் சாதனங்களில் இருந்தும் போக்குவரத்து நடந்திருக்கிறது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இது நிகழவில்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லிஆக வேண்டும். நான்கு வருடங்களுக்கு முன்னால் மொபைல் சாதனங்களில் இருந்து இணையத்துக்கு வரும் போக்குவரத்து புறக் கணிக்கத் தக்க அளவில் மிகவும் சிறியதாக இருந்தது. போகும் போக்கைப் பார்க்கையில், இன்னும் நான்கு வருடங்களில் மொபைல் சாதனங்களே இணையம் செல்ல பிரதான மாகப் பயன்படப்போவதைத் தெளிவாக யூகிக்க முடிகிறது.

பயன்படுத்த வசதி என்பதால் மொபைல் சாதனங்களை இணையம் செல்லப் பயன்படுத்தினாலும், விளம்பரதாரர்கள் இந்தப் போக்குவரத்துக்கு அதிகமான விளம்பர வருவாய் கொடுக்கத் தயாராக இல்லை. இதில் பெரிய ஆச்சர்யம் இல்லை. எளிதாகப் பார்த்தால், திரையின் அளவுக்கு ஏற்ற வருவாய் எனச் சொல்லலாம். தொலைக்காட்சிப் பெட்டி பெரிய அளவில் இருக்கிறது; அதில் வெளியாகும் விளம்பரங்களுக்கு அதிக அளவில் விளம்பரத் தொகை வசூலிக்கப்படுகிறது. அதைவிட கணினியின் திரை சிறியதாக இருக்கிறது. அதற்கும் சிறியதாக உங்களது அலைபேசி. ஆக, விளம்பரதாரர்கள் திரையின் அளவுக்குத்தக்க பணம் கொடுக் கத் தயாராக இருப்பதாகப் புரிந்துகொள்ளலாம்.

இது அலைபேசித் தொழில்நுட்பத்துக்கு எதிரானதாக இருப்பதாக மேலெழுந்தவாரியாகத் தோன்றினாலும், உண்மை அல்ல. ஐ.டி. இண்டஸ்ட்ரியில் இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் இப்போதைக்கு மொபைல் சாதனங்களின் மீதும், அவற்றை இயக்கும் இயங்கு மென்பொருள் மற்றும் பயனீட்டாளர் மென்பொருள் மீதும்தான் பெரும்பான்மையான கவனத்தை வைத்து இருக்கின்றன.

நாம் எந்தக் காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை இன்னொரு விதத்தில் பார்க்கலாம்.

இணையதளங்களுக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக இருந்த யாஹூவினால், தேடல் இயந்திரப் பிரிவில் நிலைத்து நிற்க முடியவில்லை. தேடல் இயந்திர ஜாம்பவானான கூகுளால், சமூக ஊடகத் துறையில் கரை காண முடியவில்லை. சமூக ஊடக அரசனாக இருக்கும் ஃபேஸ்புக்கினால், அலைபேசி உலகில் கோலோச்ச முடியவில்லை.

இதன் விளைவு தொழில்முனைவு ஆர்வல ராக இருந்தால், இதனால் எண்ணிக்கையில் அடங்காத வாய்ப்புகள் உங்களுக்கு.

எப்படி? அடுத்த வாரத்தில் பார்க்கலாம்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

இப்போது முதல் பத்தி கேள்விகளுக்கான பதில்கள்:

உலக மக்கள் தொகையில் 230 கோடி பேருக்கு இணைய வசதி இருக்கிறது. சீனாவுக்கு அடுத்து வேகமாக இணைய இணைப்புகள் வாங்கப்படுவது இந்தியாவில் தான். இணைய இணைப்பு  சராசரியாக வருடத்துக்கு எட்டு சதவிகிதம் என்ற அளவில் வளர்கிறது.

100 கோடிக்கும் அதிகமானவர்களிடம் 3ஜி இணைப்பு இருக்கிறது.

600 கோடிக்கும் அதிகமான அலைபேசி இணைப்புகள் இருக்கின்றன. இதில் கிட்டத்தட்ட 100 கோடி ஸ்மார்ட் அலை பேசிகள்.

சராசரியாக 10 சதவிகித இணையப் பயனீட்டாளர்கள் அலைபேசிகளில் இருந்து இணையத்துக்குச் செல்கிறார்கள்!

LOG OFF

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு