என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : இயக்குநர் சமுத்திரக்கனிபடங்கள் : வீ.நாகமணி

பிரபலங்கள்  விகடனுடனான தங்களின்  இறுக்கத்தை, நெருக்கத்தை,  விருப்பத்தைப்  பகிர்ந்துகொள்ளும்   பக்கம்!

##~##

ங்க அக்கா வீட்டுக்காரர் வாரம் தவறாம விகடன் வாங்கிடுவார். அந்த ஊருக்கே அவர் வாங்கிட்டு வர்ற அந்த ஒரே புத்தகம் மட்டும்தான். 'வீட்ல அக்காகிட்ட போய்க் கொடுத் துட்டு வா’னு அவர் என் கையில் தரும்போதுதான் விகடன் எனக்கு அறிமுகம் ஆச்சு.

பத்தாவது முடிச்சிட்டு ஊர்ல ரெண்டு வருஷம் பேப்பர் போட்டுட்டு இருந்தேன். சேத்தூர், தளவாய்புரம், முகவூர்னு அஞ்சு கிலோ மீட்டர் சுற்றளவுப் பகுதிக்கு நான்தான் நியூஸ் பேப்பர், புக்ஸ் போடுவேன். அப்பதான் விகடனை முழுமையா வாசிக்க ஆரம்பிச்சேன். விகடனுக்கும் எனக்கும் ஒரு பந்தம் உருவாச்சு. அப்பல்லாம் என்னைக்காவது ஒருநாள் நானும் நடிகன் ஆவேன்னு நம்பிட்டுத் திரிஞ்ச காலம். நம்ம போட்டோவும் இந்தப் புத்தகத்துல ஒருநாள் வருமானு ஏங்கிக் கிடப்பேன்.

ராஜபாளையம் ராஜுஸ் காலேஜ்ல டிகிரி படிச்சுட்டு இருந்தப்போ, விகடனை ரெகுலரா காசு கொடுத்து வாங்க ஆரம்பிச்சேன். அப்ப சினிமா விமர்சனத்துல கதை, திரைக்கதை, இயக் கம்னு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியா மார்க் கொடுத்து நூத்துக்கு இவ்வளவுனு மொத்தமா கூட்டி மார்க் போடுவாங்க. அதுதான் சினிமாவில் இத்தனை துறைகள் இருக்குனு எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுச்சு. சினிமா பகுதிகளையும் தாண்டி விகடன்ல வர்ற இலக்கியப் பேட்டிகள் எனக்குப் பிடிக்கும்.

நானும் விகடனும்!

விகடனில் வரும் ஓர் எழுத்தாளரின் பேட்டி, சிறுகதை பிடிச்சுடுச்சுன்னா, அதுக்கு முன்ன அவர்கள் எழுதின நாவல் கள், சிறுகதைகள்னு தேடிப் பிடிச்சுப் படிச்சுடுவேன். இப்படி நிறையப் படிக்க விகடன்தான் தூண்டுகோல்.

'மடிசார் மாமி’னு தேவிபாலா எழுதின தொடர் அப்பவே கிரியேட்டிவ். ஸ்ரீவித்யாவை வெச்சு போட்டோ எடுத்து அதை ம.செ. ஓவியப் பின்னணியோட மேட்ச் பண்ணி... அதுல ரோட்ல ஸ்ரீவித்யா ஸ்கூட்டர் ஓட்டிட்டுப் போவாங்க. சுத்தி இருக்கிற கேரக்டர்லாம் ஓவியம். செம கலக்கலா இருக்கும். 'எப்படா வியாழக்கிழமை வரும்’னு ஒவ்வொரு வாரமும் காத்திருந்து படிச்ச 'இவன்தான் பாலா’ தொடர், விகடன் சினிமா விமர்சனத்தை மட்டும் படிக்காமவிட்டுட்டு, படத் தைப் பார்த்துட்டு வந்து ஆசை ஆசையா விமர்சனத்தின் ஒவ்வொரு வரியையும் படிச்சதுனு விகடன்தான் ஒவ்வொரு வாரத்தையும் முழுமையாக்கும். இப்போ விகடன்ல 'பொக்கிஷம்’ பகுதி பிரமாதம். பொக்கிஷம் ஆல்பத்தின் ஒவ்வொரு படமும் ஆயிரத்தெட்டு விஷயம் சொல்லும்.

தொண்ணூறுகள்ல சென்னை வந்து சினிமா வாய்ப்புக்காக அலைஞ்சுட்டு இருந்த காலகட்டம். அப்ப கையில காசு இருக்காது. வாய்ப்பு கேட்டுப் போற கம்பெனிகள்ல விகடன் இருந்தா, போட்டோ ஆல்பத்தைத் தந்துட்டு, ஒரு ஓரமா உட்கார்ந்து விகடனைப் புரட்ட ஆரம்பிச்சிடுவேன். எங்க டைரக்டர் சுந்தர் கே.விஜயன்ட்ட உதவி இயக்குநரா சேர்ந் ததும் கையில கொஞ்சம் காசு புரள ஆரம்பிச்சது. திரும்ப விகடன் வாங்க ஆரம்பிச்சேன்.

2000-ல 'அண்ணி’ சீரியல் மூலம் இயக்குநர் ஆனேன். அப்ப விகடன்ல 'சிறந்த மூன்று சீரியல்கள்’ பட்டியல்ல 'அண்ணி’க்கும் ஒரு இடம் கிடைச்சது. சிறந்த இயக்குநர் களா சுந்தர் கே.விஜயன், சி.ஜே.பாஸ்கரோட என் பேரை யும் குறிப்பிட்டு, குட்டியா என் போட்டோவும் விகடன்ல வந்திருந்தது. அதைப் பார்த்ததும் மனசு அப்படியே ஆகாயத்துல பறந்தது.  

அந்தச் சமயம், பல சீரியல் தயாரிப்பாளர்களிடம் இருந்து சீரியல் இயக்க வாய்ப்பு வந்தது. 'அவர்கள்’னு ஒரு சீரியல் பண்ணச்சொல்லி விகடன் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் சாரே என்னைக் கூப்பிட்டார். அவரைச் சந்திச்சது இன்னைக்கும் பசுமையா மனசுல இருக்கு. அவர் பேசப் பேச... 'அண்ணி’ சீரியலை முழுசாப் பார்த்திருக்கார்னு புரிஞ்சது. நான் பண்ணின நல்ல விஷயங்கள், சின்னச் சின்னத் தவறுகள்னு எல்லாத்தையும் அழகாக் குறிப்பிட்டார். ஆனா, எதிர்பாராதவிதமா அப்ப என்னால 'அவர்கள்’ பண்ண முடியலை. இப்பவும் சீனிவாசன் சார் எங்கே பார்த்தாலும், 'ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை எடுத்துட்டு வாங்க கனி. வந்து பண்ணுங்க’ம்பார். பண்ணணும்.

அப்புறம் 2003-ம் வருஷம். 'உன்னைச் சரணடைந்தேன்’ மூலம் சினிமா இயக்குநரா அறிமுகம். விகடன்தான் பிரமாதமான விமர்சனம் தந்துச்சு. 'இளைஞர்கள் கையில் சினிமா’னு செல்வராகவன் சார், என்னை எல்லாம் குறிப்பிட்டு எழுதப்பட்ட விகடன் கட்டுரை மறக்கவே முடியாதது. 'சுப்ரமணியபுரம்’ படத்தில் நடிகனா அறிமுகம். படத்தோட ஃபர்ஸ்ட் லுக் ஸ்டில்ஸ் விகடன்லதான் வந்துச்சு. அதுக்கப்புறம் அப்பப்ப விகடன்ல நானும் தலைகாட்ட ஆரம்பிச்சேன். புத்தகக் கண்காட்சி நடக்கிற சமயங்களில் 'நீங்க என்னென்ன புத்தகம் வாங்குனீங்க?’னு விகடன்ல இருந்து கேட்பாங்க. ஒரு

நானும் விகடனும்!

குறிப்பிடத்தக்க ஆளா நாமளும் வந்துட்டோம்டானு தோணும். விகடன்ல இருந்து போன் வந்தாலே, 'சரி, நாமளும் ஆட்டத்துல இருக்கோம். கரெக்ட்டாதான் ஓடிட்டு இருக்கோம்’கிற நம்பிக்கை வரும்.

'ஈசன்’ படத்துல நடிச்சிட்டு இருக்கும்போதுதான் ஒரு நடிகனா முதல் பேட்டி விகடன்ல வந்துச்சு. நான் ஏதாவது நல்ல விஷயங்கள் பண்ணினால் பாராட்டுறதுலயும் தவறுகள் செஞ்சா, அதைக் குறிப்பிட்டு சரிசெய்றதுலயும் விகடன் முன்னாடி நிக்கும்.

அப்புறம் 'நான் சமுத்திரக்கனி ஆனது எப்படி?’னு தன்னம்பிக்கை சார்ந்த விஷயங்கள் பேசி இருந்தேன். ரெண்டே ரெண்டு பக்கத்தில் அவ்வளவு சுருக்கமா அழகா வந்திருந்தது அந்தப் பகுதி. அந்தப் பேட்டிக்குப் பிறகு, வெளியில் மக்கள் என்னை எதிர்கொண்டதிலும் சக நண்பர்களின் பார்வையிலும் வித்தியாசம் இருந்தது. தன்னம்பிக்கை எப்பவுமே வலியை அழிச்சிடும். அப்ப அந்தக் கட்டுரை எனக்குள் ஏகப்பட்ட தன்னம்பிக்கையை விதைச்சது. 'இன்னும் இன்னும் நிறைய சாதிக்கணும்டா’னு என்னை நானே உற்சாகப்படுத்திக்க உதவுச்சு.

பிரபலங்களைவிட சாமான்யர்களை யும் சந்தோஷமா விகடன் மட்டுமே கொண்டாடும். சாதிச்ச பிறகு, ஒருத்தரை எல்லாரும் கொண்டாடுறது பெருசு இல்லை. ஆனா, 'இவன்/ள் நிச்சயம் சாதிப்பாள்’னு சம்பந்தப்பட்டவங்களுக்கே அவங்களைப் பத்தி தெரியாதப்ப அவங்களைத் தட்டிக்கொடுக்கும் விகடன். இப்ப பிரபலமா இருக்குற பலருக்கும் அவங்க ளோட ஆரம்ப காலத்தில் நிச்சயம் விகடனின் கம்பீரமான அங்கீகாரம் கிடைச்சு இருக்கும்.

எந்தவொரு விஷயத்தையும் சும்மா செய்தியாக்கணுமேனு கட்டுரை ஆக்காது விகடன். உதாரணம், ஈழப் பிரச்னை. அங்கே போர் உச்சத்துல இருந்த சமயத்துல இருந்து இன்னைய தேதி வரை அங்கே என்ன நடந்துட்டு இருக்குனு அழுத்தமா, ஆணித்தரமா பதிவு பண்ணது விகடன் மட்டும்தான். ஈழம் தொடர்பான ஒவ்வொரு கட்டுரையிலும் உருக்கமும் உக்கிரமும் சரிவிகிதமா கலந்திருக்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரா போராடுற மக்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை

நானும் விகடனும்!

பளிச்னு பொதுமக்கள் பார்வைக்கு வெச்சதும் விகடன்தான்.

மொத்தத்துல விகடன் சினிமா, அரசியல், சமூகம்னு எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த சரியான மிக்ஸ்.

நான் இயக்கிய 'போராளி’ பட விமர்சனத் தில், 'போகிறபோக்கில் தலையில் தட்டுகிற வசனங்கள்’னு எழுதியிருந்தாங்க. அதன் பிரதிபலிப்பா 'சிறந்த வசனகர்த்தா’ விருதை எனக்குத் தந்து கௌரவிச்சது விகடன். எப்பவும் என் உழைப்புக்கு உடனடி அங்கீகாரம் விகடன்ல இருந்துதான் வரும்!

நம்மளைப் பத்தின ஒரு நல்ல விஷயமோ, நம்ம படத்தைப் பத்தி ஒரு நல்ல ஸ்டில்லோ முதல்ல விகடன்லதான் வரணும்னு தோணும். அந்த அளவுக்குத் தகுதியோட நம்ம தயாரிப்பு இருக்கணும்னு மெனக்கெடத் தோணும். இப்ப 'ஜெயம்’ ரவி, நானி, அமலா பால் நடிக்க தமிழ், தெலுங்குனு ஒரே சமயத்தில் நான் பண்ற படத்தின் டைட்டிலையும் முதன்முதலில் விகடனில்தான் சொல்றேன்... 'நிமிர்ந்து நில்!’