Published:Updated:

மிஸ்டர் நம்பிக்கை!

மிஸ்டர் நம்பிக்கை!

மிஸ்டர் நம்பிக்கை!

மிஸ்டர் நம்பிக்கை!

Published:Updated:
##~##

ருடம் முழுவதும் வகுப்பு, டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ் என்று படிப்பவர்களே ப்ளஸ் டூ-வில் மதிப்பெண் எடுக்கத் தடுமாறிக்கொண்டு இருக்கும் சூழலில் மருத்துவமனையே கதி எனக் கிடக்கும் மாணவன் ஃபெரோஸ்கான் ப்ளஸ் டூ-வில் 1200-க்கு 902 மார்க் எடுத்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறான். ''இதெல்லாம் பெரிய மார்க்கா?'' என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், ஃபெரோஸ்கானின் வாழ்க்கையை அறிந்தால் அதிர்ந்துவிடு வீர்கள். டயாலிசிஸின்போது மெஷின் வழியாக ஓடிக்கொண்டு இருக்கும்  தன் ரத்தத்தை பார்த்தபடி பேசத் தொடங்குகிறான் ஃபெரோஸ்கான்.    

 ''எங்களுக்குச் சொந்த ஊர் ராமநாதபுரம். அங்க எட்டாவது படிச்சுட்டு இருக்குறப்ப எஸ்.எல்.ஈ-ங்கிற (Systemic lupus erythematosus)  நோய் என்னைத் தாக்குச்சு. இந்த நோய் வந்தா உடம்புல இருக்குற வெள்ளை அணுக்கள் உடல் உறுப்புகளைத் தாக்கி அழிக்க ஆரம்பிக்கும். சென்னையில் மட்டும்தான் இதுக்கு சிகிச்சை பண்ண முடியும்னு சொல்லிட்டாங்க. அதனால பத்து நாளைக்கு ஒரு முறை இங்க வந்து சிகிச்சை எடுத்துட்டு இருந்தேன். இருக்குற பிரச்னை பத்தாதுன்னு 'ஆட்டோ இம்மியூன் டிஸீஸ்’னு(autoimmune disease) வேறொரு நோய் வந்துடுச்சு. இது வந்தா உடலுக்குள் இருக்கும் திசுக்களே, உடம்புக்கு ஒவ்வாமல் ஆகிரும். நோய் இருந்தாலும் ரெகுலரா ஸ்கூலுக்குப் போனேன். ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்துட்டு இருந்தேன். ஒவ்வொரு வேளை உணவு சாப்பிட்டதும் 10, 15 மாத்திரைகள் சாப்பிடணும். எல்லாமே காஸ்ட்லி மாத்திரைங்க. சிகிச்சைக்காகப் படகு, கடை, வீடு, நிலம் எல்லாத்தையும் அப்பா வித்துட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் நம்பிக்கை!

அடிக்கடி காய்ச்சல், வயித்துவலி வந்திரும். இதனால, எட்டாவது, ஒன்பதாவது வகுப்புகளுக் கானப் பரீட்சையை எழுதலை. ஆனா, நான் நல்லா படிச்சதால டபுள் புரமோஷன் கொடுத்துப் பத்தாம் வகுப்புக்கு அனுப்பிட்டாங்க.  காலாண்டுத் தேர்வு நடந்துட்டு இருந்த சமயம் ரொம்ப மூச்சு வாங்க ஆரம்பிச்சது. அவசர அவசரமா ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. ஏகப்பட்ட டெஸ்டுகள். 'அளவுக்கு அதிகமா மாத்திரைகள் சாப்பிட்டதால  ரெண்டு கிட்னியும் செயல் இழந்திருச்சு. கிட்னியை மாத்தினாத்தான் உயிர் பிழைக்கலாம்’னு டாக்டர்கள் சொன்னாங்க. வீட்ல இடிஞ்சு போயிட்டாங்க. எங்க குடும்பத்துல அப்பாவோட கிட்னி மட்டும்தான் எனக்குப் பொருந்துச்சு. 'ஓ.கே. ஆபரேஷன் பண்ணலாம்’னு  ரெடியானா எனக்கு மஞ்சக்காமாலை வந்திருச்சு. அந்த சமயத் துலதான் 'உங்க அப்பாவுக்கு ஷ§கர் இருக்கு. அவர் கிட்னி உங்களுக்குப் பொருந்தாது’னு சொல்லிட்டாங்க. இது எல்லாத்தையும் மீறி பத்தாவதுப் பரீட்சையில 500-க்கு 428 மார்க் எடுத்து ஸ்கூல்ல ரெண்டாவதா வந்தேன்.

ப்ளஸ் ஒன்ல ஃபர்ஸ்ட் குரூப் எடுத்துப் படிச்சுட்டு இருந்தேன். ஆஸ்பத்திரிக்கும் கிளாஸுக்குமா அலைஞ்சதுல மரண அவஸ்தைப் பட்டேன். அந்த ரெண்டு வருஷமும் என்னைக்கு வேணும்னாலும் சாகலாம்கிற நிலைமையிலேயே இருந்தேன்.  என் கூடப் படிச்ச எல்லோரும் ப்ளஸ் டூ முடிச்சுட்டாங்க. நான் மட்டும் வீவுலயே இருந்தேன். ஸ்கூல்ல பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு, 'இனி நீ இங்க படிக்க முடியாது’னு சொல்லிட்டாங்க. விஞ்ஞானி ஆகணும்கிற என்னுடைய ஆசை கனவாப் போச்சு. மாசம் நாலஞ்சு தடவையாவது சீரியஸாகி ஐ.சி.யூ-வுல அட்மிட் ஆவேன். அதிகமா மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கிட்டதால 20 வயசாகியும் எனக்கு உடல்ரீதியா 13 வயசுக்கு உண்டான வளர்ச்சிதான் இருக்கு.

கிட்னி மாத்த முடியாததால, வாரத்துக்கு ரெண்டு முறை டயாலிசிஸ் பண்ணணும். ஒரு முறை பண்ணாட்டியும் உயிருக்கு உத்திரவாதம் இல்லைனு சொல்லிட்டாங்க. வாரத்துக்கு ரெண்டு தடவை டயாலிசிஸ் பண்ண 4,000 ரூபாய் வரைக்கும் செலவாகும். விக்கிறதுக்கு ஒண்ணும் இல்லைங்கிறதால அப்பா கடன் வாங்க ஆரம்பிச்சார். ஒரு கட்டத்துல வெறுத்துப்போய், வீட்ல எல்லாரும் தற்கொலை செஞ்சுக்கலாம்கிற முடிவுக்கு வந்துட்டோம்.  

அந்தச் சமயத்துலதான், லதா மேடம் பத்தி கேள்விப்பட்டோம். அவங்க நடத்தி வர்ற 'டேங்கர்’ அமைப்பு மூலமா பணம் இல்லாதவங்களுக்குக் குறைஞ்ச செலவில் டயாலிசிஸ் பண்ணித் தர்றாங்க. நாங்க போய் நின்னதும், சிரிச்ச முகத்தோட டயாலிசிஸுக்கு ஏற்பாடு பண்ணினாங்க. செலவை மிச்சப்படுத்துறதுக்காக சென்னைக்கு வந்து செட்டில் ஆகிட்டோம். போன டிசம்பர் மாசம்தான் உடம்பு கொஞ்சம் சரியாச்சு. டுடோரியல்ல சேரலாம்னு போனா, 'ஃபர்ஸ்ட் குரூப் படிக்க முடியாது’னு சொல்லிட்டாங்க. எக்ஸாமுக்கு ரெண்டே மாசம்தான் இருந்துச்சு. காமர்ஸ்தான் எடுக்கமுடியும்னு சொன்னாங்க. எனக்கு அதைப் பத்தி எதுவுமே தெரியாது. ஆனா, வெறி வந்த மாதிரி படிச்சேன். டயாலிசிஸ் பண்றப்பக் கூடப் படிச்சுட்டே இருந்தேன். நான் 1000-க்கு மேல மார்க்கை எதிர்பார்த்தேன். ஆனா, 902 மார்க்தான் கிடைச்சுது. என்னை விடக் குறைவா மார்க் எடுத்தவங்களுக்கு எல்லாம் காலேஜ்ல சீட் கிடைச்சிருக்கு. ஆனா, எனக்குக் கிடைக்கல. இருந்தாலும், நான் கண்டிப்பா சாதிப்பேன். இன்னும் நிறையப் படிப்பேன்'' என்று எந்தச் சலனமும் இல்லாமல் பேசுகிறான்.

''உடம்பு முடியாதப்பப் படிக்க வேணாம்னு தான் சொல்வோம். ஆனா, இந்த நிலைமையிலும்  படிச்சுகிட்டே இருக்கிறான். படிப்புக்காக அவன் வாங்குன பரிசு மட்டும் ஒரு பீரோ நிறைய இருக்கு. இப்போ கூட மாசத்துக்கு எட்டு

தடவை டயாலிசிஸ் பண்ணணும். ஆறு வருஷமா பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலதான் இருக்கான். அவன் நல்ல மனசுக்குப் பிழைச்சு இருந்தா ஊர்ல நிறையப் பேருக்கு உதவி பண்ணுவான். அதுக்குக் கடவுள்தான் மனசு வெக்கணும்!'' - பேசிக்கொண்டு இருக்கும்போதே தன்னை அறியாமல் கண் கலங்குகிறார் ஃபெரோஸ்கானின் அம்மா மும்தாஜ்.

- நா.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்