Published:Updated:

கம்பிக்குப் பின்னால் கல்வி!

கம்பிக்குப் பின்னால் கல்வி!

கம்பிக்குப் பின்னால் கல்வி!

கம்பிக்குப் பின்னால் கல்வி!

Published:Updated:
##~##

'அந்த ஜெயில் வாத்தியாரா? ஓ... அந்த தி.க-காரரா?’ என்று ராஜேந்திரனை விதவிதமாக அழைத்து, அவரின் வீட்டுக்கு வழி சொல்கிறார்கள் செங்குன்றம், சோலைஅம்மன் நகர் மக்கள். வாசல் வந்து வரவேற்கும் ராஜேந்திரன், ''சொல்லிக்க என்னங்க இருக்கு? அரியலூர் மாவட்டம் நின்னியூர் கிராமம் என் சொந்த ஊர். குடும்பத்துல மூத்தவன் நான். எனக்கு அப்புறம் அஞ்சு தம்பிங்க. ஒரு தங்கை. ஒரு சமூகத் தவறைதான் என் குடும்பம் தொழிலா பண்ணிட்டு இருந்துச்சு. ஆமாம்... சாராயம் காய்ச்சிட்டு இருந்தாங்க'' என்று அதிர்ச்சி அளிப்பவர் இன்று புழல் சிறைக் கைதிகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியராக இருக்கிறார்.

''அப்பா சாராயம் காய்ச்சுவார். அதை வித்துக் கிடைக்கிற பணத்துலதான் நான் படிச் சேன். நான் பள்ளியில் படிக்கிறப்ப கிருபானந்த வாரியார், பெரியார் பேச்சைக் கேட்கிற வாய்ப்புக் கிடைச்சது. அதுதான் என்னை சாராய வியாபாரத்தில் இருந்து சமூகத்தின் பக்கம் திருப்புச்சு. இந்தச் சமூகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் உதவணும்னு முடிவு எடுத்தேன். வருமானத்துக்காக விவசாயத்தில் இறங்கினேன். என்னோடத் தம்பிகள் எல்லோரையும் நல்லா படிக்கவெச்சேன். அப்படியே எங்கத் தலைமுறை நல்ல விஷயங்கள் பக்கம் திரும்ப ஆரம்பிச்சது. விவசாயம் நொடிச்சதும், சென்னைக்கு பஸ் ஏறிட்டேன். இங்க வந்து 20 வருஷமாச்சு. கொஞ்ச வருஷத்துக்கு முன்னால் தாம்பரத்துல மகளிர் சுய உதவிக் குழு நிகழ்ச்சியில தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத் தலைவரா இருக்கிற முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ் சாரின் அறிமுகம் கிடைச்சுது. அப்ப நான் அறிவொளி இயக்கத்துல இருந்தேன். என் அனுபவங்களை அவரிடம் சொல்லிட்டு இருந்தப்ப, 'சிறைக் கைதிகளுக்குப் பாடம் எடுங்களேன்’னார்.  2007-ல் இருந்து புழல் சிறைக் கைதிகளுக்குப் பாடம் நடத்திட்டு இருக்கேன்.

கம்பிக்குப் பின்னால் கல்வி!

எழுதப் படிக்கத் தெரியாதவங்க யாராவது ஒருத்தர் கைதியா உள்ளே வந்தா வெளியே போகும்போது, கையெழுத்துப் போடுகிற அளவுக்குச் சொல்லிக் கொடுத்திருவேன். சிறைக்கு உள்ளே பெரிய படிப்பு படிச்சவங்க எல்லாரும் இருக்காங்க. அந்தக் கைதிகளையே ஆசிரியர்களாக்கி மற்றவர்களுக்குப் பாடம் சொல்லித் தரச் செய்வேன். பள்ளிக் கல்வித் துறையும் சிறைக் கைதிகள் தேர்வு எழுதுறதுக்கு ஒத்துழைப்புத் தர்றாங்க. அதனால, இப்போ பல கைதிகள் எட்டாவது, பத்தாவது, பன்னிரண்டாவது தேர்ச்சிப் பெற்று இருக்காங்க. 2007-ல் இருந்து இந்த வருஷம் வரை மேல்நிலைத் தேர்வில் 100 சதவிகிதத் தேர்ச்சி அடைஞ்சிருக்காங்க.

கம்பிக்குப் பின்னால் கல்வி!

சிறைக் கைதிகளை நாங்க 'கைதிகள்’னு சொல்றது இல்லை. 'இல்லவாசிகள்’னுதான் சொல்வோம். சிறைக் கண்காணிப்பாளரை 'இல்லத் தந்தை’னுதான் சொல்வோம். இங்க ஒவ்வொரு இல்லவாசிக்கு உள்ளேயும் கவிஞன், ஓவியன், எழுத்தாளன் இருக்கான். புழல் சிறையைச் சுற்றி இருக்கும் சுற்றுச் சுவர்கள்ல வரைஞ்சி இருக்குற ஓவியங்கள் எல்லாம் அவங்களோட கைவண்ணம்தான்.

இவங்களோட தேர்வுக் கட்டணத்தை மட்டும்தான் சிறைத் துறை செலுத்தும். மத்தபடி நோட்டு, புத்தகம், பேனானு எல்லாத்தையும் வெளியில் இருந்து  நன்கொடை வசூல் பண்ணி வாங்கித் தருவேன். மத்தபடி தனிப்பட்ட முறையில் நான் ஒரு கருவிதான்!'' என்றவரிடம், ''கைதிகளுடனான மறக்க முடியாத அனுபவம் ஏதாவது உண்டா?'' என்றதும் சிரித்தபடி,  ''பொதுவா நான் திருக்குறளை மையமா வெச்சுத்தான் பாடம் நடத்துவேன். அப்படி ஒரு முறை, 'திருக்குறளை பள்ளிகள்ல ஊதியத்துக்காகவோ, மதிப்பெண்ணுக்காகவோ சொல்லித் தராம வாழ்க்கைக்கான பாடமா சொல்லித் தந்து இருந்தா சிறைச்சாலைகளே இருந்திருக்காது’ன்னேன். அப்ப ஒருத்தர் எழுந்து, 'நீங்க சொல்றது நூறு சதவிகிதம் உண்மைதான்’னு சொன்னார். 'எப்படி?’னு கேட்டேன். 'நான் ஓரு ஓய்வு பெற்ற ஆசிரியர்’னு சொன்னார். அவர் சொல்லி முடிச்சதும் இன்னொருத்தர் எழுந்து, 'நீங்க சொன்னது இருநூறு சதவிகிதம் உண்மை’னார். ஆச்சர்யத்தோட 'எப்படி?’னு கேட்டேன். 'நான் அவரோட மாணவன்’னு சொன்னார்!''

கட்டுரை, படங்கள்:

ந.வினோத்குமார்

>>>தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் 'வாழ்வியலுக்கு வள்ளுவர், ஆன்மிகத்துக்கு வள்ளலார், தத்துவத்துக்குப் பெரியார், அரசியலுக்குக் காமராஜர். இப்படித்தான் இவர்களைப் பின்பற்ற வேண்டும்’ என்று சொல்லுவார்!

>>>இவர் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டவர். மனைவி சரோஜா. வீரவேங்கை, புலியரசி என இரண்டு மகள்கள் உள்ளனர்!

 >>>சென்னைக்கு வருவதற்கு முன்பு அரியலூரில் 'உழவர் ஆய்வு மன்றம்’, 'திருச்சி வானொலி வேளாண்மைப் பள்ளி’ போன்றவற்றில் விவசாயம் தொடர்பானச் செய்திகளை வழங்கி இருக்கிறார்!

>>>தமிழகச் சிறைகளில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதத் தயாராகும் இல்லவாசிகளுக்கு புழல் மட்டுமே ஒரே தேர்வு மையம். புழல் சிறையைத் தேர்வு மையமாக மாற்றியதில் இவரின் பங்கும் அதிகம்!