Published:Updated:

கோவை நேரம்

கோவை நேரம்

கோவை நேரம்

கோவை நேரம்

Published:Updated:
கோவை நேரம்
கோவை நேரம்

மட்டை ஊறுகாய்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற அண்ணாச்சிக் கடைக்குப் போனேன். 'பாண்டியன் மட்டை ஊறுகாய் வாங்கித் தொட்டு நக்கினேன். அதே சுவை... அதே மணம். ஆனால், கொஞ்சம் விலை ஏற்றம். ரெண்டு ரூபாய். காய்ந்து போன இலை மட்டையில் எத்தனை நாள் வைத்திருந்தாலும் கெட்டு போகாமல் இருப்பது இதன் தனிச் சிறப்பு. சில வருடங்களுக்கு முன்பெல்லாம் நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடிய தருணங்களில் இது இல்லாமல் இருந்தது இல்லை. 'குடி’ மகன் களுக்கு மட்டும் அல்ல; பழைய சாதத்தையே தன்னுடைய தினப்படி உணவாகக்கொண்டு இருக்கும் எளியவனுக்கும்  இது செம தொடுகறிதான். இதை வாங்க ரொம்ப அலைய வேணாம். கோவையில் உள்ள சந்துபொந்தில் இருக்கும் எந்தக் கடையிலும் இது கிடைக்கும்!

கோவை நேரம்

குரங்கு அருவி!

எங்கேயாச்சும் வெளியில போகலாம்னு முடிவு பண்ணிட்டு, வீட்டுல இருந்து இட்லி, கெட்டிச் சட்னி எடுத்துக்கிட்டு பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைப் போகிற வழியில் இருக் கிற குரங்கு அருவிக்குப் போனோம். நாங்க போன நேரம் அருவியில் தண்ணீர்வரத்து ரொம்பக் கம்மி. பாறைகள் எல்லாம் பல் இளித்துக்கொண்டு இருந்தன. வந்ததுதான் வந்தோம்  சாப்பிட்டுடலாம்னு ஒரு பாறை மேல உட்கார்ந்து, ஆளுக்கு ரெண்டு இட்லிகளை உள்ளே தள்ளினோம். மேலே இருந்து பாக்குறப்ப ஆழியாறு அணையும், அதன் சுற்று வட்டாரமும் அத்தனை அழகு.

பிறகு, ஏதோ பேருக்குக் கொஞ்சம் தண்ணீர் விழுந்து கொண்டு இருந்த அருவியில், பாறையோடு பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டுக்  குளிக்க ஆரம்பிச்சோம்.  சும்மா சொல்லக் கூடாது; தண்ணீர்வரத்து குறைச்சலா இருந்தாலும் செம குளிர்ச்சி. கோடையில்தான் அருவி இப்படி இளைத்து இருக் கும். மழை காலத்தில் மனிதனுக்குத் தடை போடும் அளவுக்கு தண்ணீர் கொட்டோ கொட்டெனக்  கொட்டித் தீர்த்துடும்!

கோவை வனத் துறைக்கு சபாஷ்!    

கோவை நேரம்

கோவை மாவட்ட வனத் துறை நல்ல காரியம் ஒன்றைச் செய்துள்ளது.  யானை நடமாடும் வனப் பகுதிகளில், யானை பற்றிய எச்சரிக்கை அறிவிப்புகளை வைத்து இருக்கிறார்கள். யானைகளைப் பயங்கர விலங்குகளாகச் சித்திரிக்காமல் யானைகள் எவ்வளவு அபூர்வமான, அவசியமான உயிர் என்பதை விளக்கும் வகையிலும் அவற் றைக் காண நேர்ந்தால் எப்படி  நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளையும் தருவதுதான் அறிவிப்பின் ஹைலைட். உதாரணத்துக்கு, ஆனைகட்டி செல்லும் சாலையில் உள்ளடங்கி இருக்கும் அனுவாவி சுப்ரமணியர் கோயில் பகுதியில் வைக்கப்பட்டு இருக்கும் எச்சரிக்கைப் பலகையில் உள்ள சில வரிகள் உங்கள் கவனத்துக்காக...

>>> அனுவாவி சுப்ரமணியர் கோயில் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கோயிலுக்குத் தனியாகச் செல்வதைத் தவிர்க்கவும். மாலை 6 மணிக்கு மேல் செல்லக் கூடாது.

>>> யானைகளைக் கண்டால் சத்தம் போடுவதோ, துரத்த முயல்வதோ ஆபத்தை விளைவிக்கும்.

>>> யானைகளுக்கு வாழைப் பழம், தேங்காய், கரும்பு போன்ற எந்த உணவுப் பொருளையும் வழங்குவது ஆபத்தை விளைவிக்கும். அது சட்டப்படி குற்றம்.

>>> உணவு அளித்துப் பழக்குவது யானைகள் ஊருக்குள் வர வழிவகுக்கும். இது உள்ளூர் மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.

>>> யானைகள் நம் காட்டின் உயிர்ச் சூழலைக் காப்பதில் பெரும் பங்காற்று கின்றன. அவற்றைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும்.

கோவையில் சப்புக்கொட்டவைக்கும் சில உணவகங்கள்:

கொக்கரக்கோ: சேவக்கோழி கூவுற பாஷையில ஒரு ஹோட்டல். கவுண்டம்பாளையத்துல இருக்கிற இந்த ஹோட்டல், தந்தூரி சிக்கனுக்கு செம ஃபேமஸ்.

ஸ்ரீ ஜெய்கிருஷ்ணா ஸ்வீட் ஸ்டால்: கணபதி டு கவுண்டம்பாளையம் சாலையில் இருக்கிறது இந்தக் கடை. கைச்சுற்று முறுக்கு, ஓமப் பொடி, சீடை இவை எல்லாம் இங்கு ஃபேமஸ்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ்: கோவையை மைசூர்பா ரூபத்தில் பிரசித்தி பெறச் செய்த நிறுவனம். நாக்குல வெச்சாலே கரையுறதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி. சுத்தமான பசு நெய்யில தயாரிக்கிறாங்க. மைசூர்பா தவிர ரசமலாய், தாம்பூலம் செட் மாதிரியான ஸ்வீட்களும் ஃபேமஸ் இங்கே.

தென்றல் ஹோட்டல்: துடியலூர் பகுதியில் உள்ள இந்த ஹோட்டல் படு விஸ்தாரமாக கார் பார்க்கிங், ஏசி மற்றும் கார்டன் ரெஸ்டாரென்டாக இருக்கிறது. பெரிய சைஸ்  திரை உள்ள டி.வி. இருப்பதால் கிரிக்கெட் மேட்ச் சமயங்களில் கூட்டம் பிச்சுக்கும்!

கோவை நேரம்