Published:Updated:

வேட்டைப் பானைத் திருவிழா !

இ.கார்த்திகேயன் படங்கள்: ஏ.சிதம்பரம்

வேட்டைப் பானைத் திருவிழா !

இ.கார்த்திகேயன் படங்கள்: ஏ.சிதம்பரம்

Published:Updated:
##~##

ராமாயணத்தில் வானரக் கூட்டத்தின் தலைவனான வாலியைப் பெருமாள் வதம் செய்த இடம் தாமிரபரணிக் கரையான மணக்கரை என்னும் கிராமம் என்று நம்பப் படுகிறது. தன்னைத் தாக்கிய ராமனைப் பார்த்த வாலி, 'என்னை நீ மறைந்திருந்து தாக்கிவிட்டாயே’ என்று சொல்ல, ராமன் கள்ளன் (திருடன்) ஆகி விட்டார். எனவே 'கள்ளவாண்டன்’ என்று இந்த இடத்தில் ராமன் அழைக்கப்படுகிறார். தமிழகத்திலேயே ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் மட்டுமே இந்தக் கள்ளவாண்டப் பெருமாள் சுவாமி கோயில் உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடை பெறும் இந்தக் கள்ளவாண்டப் பெருமாள் சுவாமி கோயில்குறித்து வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் சொல்லி இருந்தார் என் விகடன் வாசகர் விஜயகுமார். இந்தக் கொடை விழாவின் ஹைலைட்... 'வேட்டைப்பானை போடுதல்’.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேட்டைப் பானைத் திருவிழா !

வேட்டைப்பானை நிகழ்ச்சியைப் பார்க்க தாதன்குளம், இலங்குளம், கிளார்குளம், அரசர் குளம், உல்லக்குளம், தீராத்திகுளம், ஆதிச்ச நல்லூர், ஆழ்வார் திருநகரி, நத்தம், செய்துங்க நல்லூர், ஸ்ரீவைகுண்டம் எனச் சுமார் நூறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள்  முத்தாலங் குறிச்சியில் திரண்டு இருந்தார்கள். நள்ளிரவு சரியாக 12 மணிக்கு கள்ளவாண்ட சாமியாடியின் கையில் உயரமான இரண்டு தீப்பந்தங்கள் ஏந்தி ஊரைச் சுற்றி வந்து கோயிலுக்குள் நுழைந்ததும் நள்ளிரவு பூஜை செய்யப்பட்டது. பூஜை முடிந்ததும், நீளமான அடுப்பின் மேல் 15 பானைகளையும் நீள் வரிசையில்வைத்துப் பனை ஓலையால் தீ மூட்டி, பானைகளில் பச்சரிசி போட்டுக் கஞ்சி காய்ச்சினார்கள். மடமடவெனக் கொதித்துப் பொங்கியது கஞ்சி. கொஞ்ச நேரத்தில் ''வேட்டைப் பானை தயாராகிருச்சு.. கள்ளவாண்ட சாமியாடிகள் எங்கிருந்தாலும் உடனே கோயிலுக்கு வரும்படி கேட்டுக்கொள்கிறோம்'' என்று அறிவித்தார்கள். அதைக் கேட்டதும் வரிசையாகப் பானை முன் வந்து நின்றனர் பத்து சாமியாடிகள். 'ரண்டக்க ரண்டக்க..’ நையாண்டி மேளமும், 'வ்ர்ரூம் வ்ர்ரூம்’ உருமியும், 'டன்டக்கு டன்டக்கு’ செண்டை மேளச் சத்தமும் காதைக் கிழிக்க அத்தனை சாமியாடிகளும் சாமி வந்து ஆடினார்கள். கொதிக்கின்ற கஞ்சிப் பானைக்குள் தென்னை மரத்துப் பாளையை (தென்னம்பாளையை) முக்கி எடுத்து, கஞ்சியை உடம்பின் மேல் ஊற்றுவதுதான் வேட்டைப் பானை நிகழ்ச்சி.

வேட்டைப் பானைத் திருவிழா !
வேட்டைப் பானைத் திருவிழா !

முதலில் சாமியாடி ஒருவர் எல்லாப் பானை களிலும் திருநீறு போட்டு, பாளையைப் பானைக் குள் விட்டுப் பின்பு கஞ்சியைத் தலையில் ஊற்றி சடங்கினை ஆரம்பித்துவைத்ததும் அப்படியே பின் தொடர்ந்தார்கள் மற்ற சாமியாடிகள். மேளச் சத்தத்தை விடவும் விண்ணை முட்டியது சாமியாடிகளின் குலவைச் சத்தம். சில சாமி யாடிகள் அருள் முற்றியதும் தென்னைப் பாளையைக் கீழே போட்டுவிட்டுக் கையை பானைக்குள் விட்டு கை நிறையக் கஞ்சியை அள்ளி முகத்தில்  பூசிக்கொள்ள, பரவசமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் மக்கள்.

''நான் கடந்த 12 வருஷமா கள்ள வாண்ட சாமியாடுறேன். மற்ற கோயில் களில் தீ மிதித்தல், ஆணிச் செருப்பு, காவடி, பால் குடம்னு இருக்கு. ஆனா, இங்க வேட்டைப் பானை ரொம்ப விசேஷம்... கொதிக்கிற பானைக்     கஞ்சியை உடம்பு முழுக்க ஊத்து றதுன்னா சாதாரண விஷயம் இல்ல, சரியான விரதம் கடைபிடிக்கலேன்னா உடம்பு வெந்துடும்!'' என்றார் ஊர் பெரியவர் பாலகிருஷ்ணன்.

வேட்டைப் பானைத் திருவிழா !

வேட்டைப் பானை நிகழ்ச்சியைப் பார்க்க புல்லுக்கட்டு மேலும், மண் சுவர்கள் மேலும் அமர்ந்து இருக்கும் இளைஞர்கள், அஞ்சு ரூபாய் அச்சு மரு தாணியை கையில் அப்பிக்கொண்டு இருக்கும் இளம் பெண்கள், பலூன் கேட்டு அழும் சுட்டிகள், வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தேடும் பெரிசுகள், புது மனைவிகளுக்கு வேட்டைப் பானை பற்றி எடுத்துச் சொல்லும் புதுமாப் பிள்ளைகள், ஆற்று மணலில் அமர்ந்த படி பழையக் கதையைப் பேசுபவர்கள் எனக் களைகட்டியது கோயில் கொடைத் திருவிழா!