Published:Updated:

என் ஊர் - பொதும்பு எருது கட்டு !

உ.அருண்குமார்படங்கள்: வீ.சக்தி அருணகிரிசங்கிலி முருகன்

என் ஊர் - பொதும்பு எருது கட்டு !

உ.அருண்குமார்படங்கள்: வீ.சக்தி அருணகிரிசங்கிலி முருகன்

Published:Updated:

பொதும்பு

##~##

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான சங்கிலி முருகன் தான் பிறந்து வளர்ந்த பொதும்பு கிராமத்தைப் பற்றி இங்கே நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

''பொதும்பு அழகான ஊர். மேலக் கண்மாய், கீழக் கண்மாய்னு ரெண்டு கண்மாய்கள் இருக்கும். அந்தக் கண்மாய்க் கரையோரத்தில் எங்க ஊர்க் குலதெய்வங்கள் நீலமேகமும் சங்கைய்யாவும் வீற்றிருப்பாங்க. நாற்பது வருஷங்களுக்கு முன்னாடி எங்க ஊருக்கு பஸ் வசதி கிடையாது. மதுரையில் இருந்து வந்தோம்னா 'ரூல் தோப்பு’ பஸ் ஸ்டாப்ல இறங்கி, நாலு கிலோ மீட்டர் நடந்து பொதும்புக்கு வரணும். அந்த வழிநெடுகத் தென்னந்தோப்புகளா இருக்கும். சிலுசிலுனு அடிக்கிற காத்துல நடந்து வந்தா அலுப்பே தெரியாது. இப்போ அந்தத் தோப்பை எல்லாம் ப்ளாட் போட்டு வித்துட்டாங்க.

எங்க அப்பா முத்துவீரன் சேர்வை, பிரசிடென்டா இருந்தாரு. அப்போ ஊர்ல எங்க வீட்டுல மட்டும்தான் குதிரை வண்டி இருக்கும். ஆனா, அந்தக் குதிரை வண்டியை எப்போதும் ஊருக்கு வெளியில்தான் நிறுத்திவெச்சிருப்போம். ஏன்னா,  எங்க குலசாமி சங்கைய்யா குதிரையை வாகனமா வெச்சிருக்கிறதால, ஊருக்குள்ளே யாரும் குதிரையில வரக் கூடாதுனு நடைமுறை இருந்துச்சு. ஊர் எல்லை வரைக்கும் நடந்துபோய் அதுக்கப்புறம் குதிரை வண்டியில ஏறிப்போவாரு என் அப்பா.

என் ஊர் - பொதும்பு எருது கட்டு !

எங்க ஊர்ல வருஷா வருஷம் கார்த்திகை மாசத் துல அன்னதானம் செய்வோம். அதுக்குத் தேவை யான பாத்திரங்கள் எல்லாமே ரொம்பப் பெருசு பெருசா இருக்கும். அந்தப் பாத்திரங்களை மத்த நாட்கள்ல பயன்படுத்த மாட்டோம். அதனால, சரியா கார்த்திகை மாசம் பிறந்ததும் பரண்ல இருந்து அந்தப் பாத்திரங்களை எடுத்துச் சுத்தம் செய்து அதுல சமைச்சு, சாமியார்களைக் கூட்டிட்டு வந்து சாப்பாடுப் போடுவோம்.

வழக்கமா எல்லா ஊர்கள்லயும் வருஷா வருஷம் திருவிழா நடக்கும். ஆனா, பொதும்பு கிராமத்துல மட்டும் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவைதான் திருவிழா நடக்கும். அதனால, மத்த ஊர்களை விட ரொம்ப விமர்சையா கொண்டாடுவாங்க.  திருவிழா நடக்குற அந்த அஞ்சு நாளுமே உறவினர்களின் கூட்டத்தால ஊரே களைகட்டி இருக்கும்.

என் ஊர் - பொதும்பு எருது கட்டு !

அந்தத் திருவிழாவுல ஒரு பகுதியா 'எருது கட்டு’னு ஒரு நிகழ்ச்சி நடக்கும். அது கொஞ்சம் வித்தியாசமான விளையாட்டு. ஒரு மாட்டை ஒரு பெரிய வடத்தால கட்டிவெச்சிடுவாங்க. கட்டிப் போட்ட அந்த மாட்டைத் தனி ஆளாப் போய் அவிழ்த்துவிடணும். இதான் போட்டி. முதல்ல கோயில் மாட்டையும் அப்புறம் ஊர்க் காரங்க மாட்டையும் அது மாதிரி கட்டிவைப் பாங்க. அந்த 'எருது கட்டு’ எப்ப  நடக்கும்னு நானும் என்னைப் போன்ற இளைஞர்களும் எதிர்பார்த்துக்கிட்டே இருந்து போட்டி நேரத் துலக் கலக்கிடுவோம்

சின்ன வயசுல தினமும் காலையில எங்க வீட்டுல கேழ்வரகுக் கூழ்தான் சாப்பாடு. பெரிய சைஸ் அண்டாவுல கேழ்வரகைக் கொட்டி கொதிக்க வெச்சிடுவாங்க. அடுத்து நீராகாரத்தை ஊத்தி வெங்காயத்தை வெட்டிப் போட்டுக் கூழ் தயாரிப்பாங்க. அப்படிச் செய்யும்போது நான் தினமும் என் உயரத்துக்கு எட்டாத அந்த அண்டாவை, ஸ்டூல் போட்டு ஏறி நின்னு வேடிக்கைப் பார்ப்பேன். அதுல ஒரு சந்தோஷம் எனக்கு.

என் ஊர் - பொதும்பு எருது கட்டு !

நான் சினிமாவுக்கு வந்ததுக்கு அப்புறம் என் ஊரை சினிமாவுலப் பதிவு செய்யணும்னு பிடி வாதமா இருந்தேன்.  'கரிமேடு கருவாயன்’, 'எங்க ஊரு காவல்காரன்’ போன்ற நான் தயாரிச்ச பல படங்கள்ல எங்க ஊரையும் எங்க ஊர்க் காரங்களையும் காட்டி இருப்பேன்.  

நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி நிறைய நாடகங்கள்ல நடிச்சுக்கிட்டிருந்தேன். அப்போ போஸ்டர்கள்ல என்னோடப் பேரை 'பொதும்பு’ முருகன் அப்படின்னுதான்போட்டி ருப்பாங்க. நான் சென்னைக்கு வாய்ப்புத் தேடி வந்த பிறகும் நான் அந்தப் பேரை மாத்தலை. என்னோட முதல் படமான 'சுவர் இல்லாத சித்திரங்கள்’ல நான் 'சங்கிலி’ங்கிற  கேரக்டர்ல நடிச்சதால சினிமாவில் என் பெயர் சங்கிலி முருகனா மாறிடுச்சு. ஆனா, இன்னமும் என் பெயர் நடிகர் சங்கத்துல 'பொதும்பு முருகன் (எ) சங்கிலி முருகன்’ அப்படின்னுதான்பதிவாகி இருக்கு,  'பொதும்பு’ என் பேர்ல மட்டுமில்ல, என்னைக்கும் என் மனசுலயும் இருக்கும்!''