Published:Updated:

பெட்ரோல் போட பங்கு பங்கு... மக்கள் எல்லாம் லொங்கு லொங்கு !

கே.கே.மகேஷ், படங்கள்: பா.காளிமுத்து

##~##

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மதுரை மீனாட்சி பஜாரில் தி.மு.க., அ.தி.மு.க. எனப் பல்வேறு கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தாலும் அதை எல்லாம் மிஞ்சிவிட்டது அண்ணன் டி.ஆரின் 'லக... லக’ தி.மு.க-வின்... ஸாரி, ல.தி.மு.க-வின் போராட்டம். ஆர்ப்பாட்டத் தலைப்பே அசத்தல். 'பட்டை நாமம் போட்டு, திருவோடு ஏந்தி, மண்சோறு சாப்பிடும் போராட்டம்’. நிதிப் பற்றாக்குறை காரணமாக, ஷேர் ஆட்டோவில் ஆட்களை ஏற்றிவந்த கட்சியினர், ஆர்ப்பாட்ட மேடைக்காக மினி லாரியை வரவழைப்பதாகச் சொல்லிவிட்டு, கடைசி நேரத்தில் குட்டி யானை என்று அழைக்கப்படுகிற டாடா ஏஸ் வண்டியைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள்.

10 மணி ஆர்ப்பாட்டத்துக்கு குட்டி யானை ரெடி. ஆனால், 11.30 ஆகியும் அண்ணனைக் காணவில்லை.  ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற் கான அறிகுறியும் தென்படவில்லை. விமான நிலையத்தில் பெயர் அட்டையோடு நிற்கும் டிரைவர்களைப் போல அண்ணனின் கார் வேறெங்கோ போய்விடுமோ என்று பயந்து, கட்சிக் கொடியுடன் ரோட்டு ஓரத்தில் நின்று, ரோட்டையே எட்டிப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் இரண்டு தொண்டர்கள்.

பெட்ரோல் போட பங்கு பங்கு... மக்கள் எல்லாம் லொங்கு லொங்கு !

இடத்தைக் கண்டுபிடித்துக் காரில் இருந்து இறங்கிய விஜய டி.ஆரைக் கண்ட உற்சாகத்தில், தொண்டர் ஒருவர் பல்டி அடிக்க, அடித்த வேகத்தில் வேட்டி பறக்க, அவசர அவசரமாகச் சுருட்டி எடுத்து ஒதுங்கித் தன் மானம் காத்தார் அந்தத் தொண்டர். தொண்டர்களின் உதவியுடன் டிரக்கில் அண்ணன் ஏற, பின்னாடியே தொண்டர்களும் ஏறிவிட்டார்கள். ''யோவ்... எல்லாரும் மேடையேறினா எப்படி? கீழேயும் ஆள் வேணுமில்லை!'' என்று சொல்லி அவர்களை இறக்கிவிட்டார்கள். குட்டி யானை மீது நின்றபடி, தலையைச் சிலுப்பிக்கொண்டு அவ்வப்போது டண்டணக்கா மியூஸிக், டெரர் டான்ஸுடன் அண்ணன் ஆற்றிய எழுச்சி உரை இங்கே...

''ஏய்... ஏத்துனது ஏழரை...
ரெண்டைக் குறைச்சிப்புட்டு      
தூக்கலாமா காலரை...
ஆரம்பிச்சாச்சு காங்கிரஸ் கெட்ட காலம்...
நாட்டையே போட்டுவிடுவார்கள் ஏலம்...
எங்க கட்சிக் கொடியைப் பார்த்தால் நீலம்...
பேச்சிலே காட்ட மாட்டோம் வாய் ஜாலம்...
ஏன் ஆர்ப்பாட்டம் நடத்துறோம் மதுரையில...
மானத்தைக் காக்குமிடம் மதுரை...
இந்தக் காங்கிரஸோ மண்ணால் செய்த குதிரை...
நிறுத்தப்பட்ட வண்டியில ஒரு பெஞ்சைப்
போட்டு நின்னு பேசுறேன்...
நான் எங்க வேணுமின்னாலும் பேசுவேன்...
சட்டசபைக்கு அனுப்பினாலும் பேசுவேன்...
அரட்டை அரங்கத்திலும் பேசுவேன்...

பெட்ரோல் போட பங்கு பங்கு... மக்கள் எல்லாம் லொங்கு லொங்கு !


அரசியல் அரங்கத்திலும் பேசுவேன்...
என்னைப் போல ஒருத்தன் இல்ல கோட்டையில்...
இருந்தா மக்கள் விட்டிருப்பாங்களா கோட்டை...
விலையை ஏத்துறது மத்திய அரசு வேலை...
இவங்கள இறக்குறது மக்களோட வேலை...

பெட்ரோலு போடத்தான் பங்கு பங்கு பங்கு...
மக்கள் படும்பாடு லொங்கு லொங்கு லொங்கு...
ஏத்துனது நாலு பங்கு...
இறக்குனது ஒரு பங்கு...
ஊதுங்கடா டெல்லிக்கு சங்கு...
எடுங்கடா காங்கிரஸுக்கு நொங்கு...
அடிச்சது பட்டை...
போட்டது மொட்டை...
கிழிஞ்சிருச்சி சட்டை...

பெட்ரோல் போட பங்கு பங்கு... மக்கள் எல்லாம் லொங்கு லொங்கு !

காங்கிரஸு பிஞ்சு போன மட்டை...' என்று பேசி முடித்துவிட்டு இறங்கினார் டி.ஆர்.

ஆர்ப்பாட்டத்துக்கு வந்து இருந்தவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டுச் சொல்ல ஆசை தான். ஆனால், ஒரு உண்மைத் தமிழரை, சீறும் சிங்கத்தைச் சீண்டிவிட்டு, நாம் நிம்மதியாக இருந்துவிட முடியுமா?

அடுத்த கட்டுரைக்கு