Published:Updated:

உங்களுக்கு நான் பொறுப்பு !

ஜெ.பேச்சிமகன் படங்கள்: உதய்கார்த்தி

உங்களுக்கு நான் பொறுப்பு !

ஜெ.பேச்சிமகன் படங்கள்: உதய்கார்த்தி

Published:Updated:
##~##

கோடை வெயிலுக்குப் பயந்து கொடைக்கானல் போயிருந்த வேளையில், 'உலகத்துக்கே தெரியுற  கொடைக்கானலை விட மீடியா வெளிச்சமே படாத பழைய கொடைக்கானலில் ஒரு வித்தியாசமான பழக்கம் இருக்கு. போய் பார்ப்போமா?''  என்றார் நண்பர் சங்கர் கணேஷ். கொடைக்கானல் மலையில் சரிந்து நிற்கிற வட்ட கானல் எனும் கிராமம் வரை இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து, அங்கே இருந்து செங்குத்தான மலைப் பாதையில் உள்ள பாறைகளின் மீது படர்ந்த வேர்களைப் பிடித்து, மூச்சு இரைக்க ஏறினோம். தூரமாகத் தெரியும் பச்சை வனத்தைக் கடந்தால் மலைக்கு வைத்த மகுடமாகத் தெரிந்தது பழைய கொடைக்கானல் எனப்படும் மலைக் கிராமமான வெள்ளகவி கிராமம்.

இந்தக் கிராமத்தைப் பற்றிப் பேசும் சங்கர் கணேஷ், ''சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால எங்க முன்னோருங்க இங்க விவசாயம் செஞ்சு வாழ்ந்திருக்காங்க. அப்போதான் கொடைக் கானல்ங்கிற இடத்தைக் கண்டுபிடிச்சதா சொல்வாங்க. இன் னும் பழைய ஆவணங்கள்ல இந்த இடத்தை 'பழைய கொடைக் கானல்’னுதான் குறிப்பிட்டு இருக்காங்க. அப்புறமாத்தான் வெள்ளகவினு பேரு வெச்சிருக்காங்க. ஊருல ரேஷன் கடை, ஆஸ்பத்திரினு எதுவுமே கிடையாது. யாருக்காவது நோவு வந்திச்சுன்னா டோலிக் கட்டி பெரியகுளத்துக்குத்தான் தூக்கிட்டுப் போவாங்க. கொடைக்கானல்ல விளையுறப் பொருள்களை எல்லாம் தலைச் சுமையாத்தான் கொண்டுட்டு வருவாங்க. ஒரு சிலர் குதிரையிலே கொண்டுபோவாங்க. கரடு முரடானப் பாதையா இருந்தாலும் செருப்புப் போட மாட் டாங்க!'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களுக்கு நான் பொறுப்பு !

சுமார் எட்டு கிலோ மீட்டர் வரை கடந்து ஊரை நெருங்கும்போது மலைச் சரிவுகளில் காபி, ஏலம், ஆரஞ்சு, வாழை  போன்றவைகளைப் பயிர் செய்து இருந்ததைப் பார்க்க முடிந்தது. ஊருக்குள் நுழையும்போது மின்சாரக் கம்பத்தில் துரு ஏறிய தகர போர்டு ஒன்று 'காலணி அணிந்து ஊருக்குள் நடக்கத் தடைஉத்தரவு’ என்ற வாசகம் தாங்கி நிற்க, நாமும் காலணிகளைக் கழற்றிவிட்டு நடந்தோம். இந்த வித்தியாசமான பழக்கம் பற்றி ஊர்ப் பெரியவரான பூம்பாறையாண்டி என்பவரிடம் கேட்டோம்.

உங்களுக்கு நான் பொறுப்பு !

''எங்க ஊரைச் சுத்தி நாலு திசையிலேயும் வைரவன் சாமி, அம்மன் சாமி, பன்னிரண்டு சாமி, முருகன் சாமினு எல்லா சாமிகளும் இருக்குறாங்க. பல வருஷங்களுக்கு முன்னாடி யாரோ சிலர் மாட்டுத் தோலில் செருப்பு செஞ்சு போட்டு வந்திருக்காங்க. அது பிடிக்காத சாமி எங்க ஆளு மேல இறங்கி, 'உங்களுக்கு என்ன வந்தாலும் நான் பொறுப்பு. குறை இல்லாம பார்த்துக்கிறேன். ஆனா, எனக்காக ஊர்ல யாரும் செருப்பு போட்டு நடக்கக் கூடாது’னு சத்தியம் வாங்கிருச்சு. அதுல இருந்து யாரும் ஊருக்குள்ள செருப்புப் போடுறதுக் கிடையாது. வெளியூருல இருந்து யார் வந்தாலும் செருப்பு போட மாட்டாங்க. ஒரு தடவை ஊருக்கு வந்த காட்டு இலாகா அதிகாரி ஒருத்தர், ஊர் கட்டுப்பாட்டை மீறி செருப்பு போட்டு, எங்களைக் கிண்டல் பண்ணிட்டுப் போயிட்டாரு. ஆனா, மறுபடி ஊருக்கு வரும்போது காட்டு மாடு அவரைக் குத்தி குடலைச் சரிச்சிருச்சுனா பாத்துக்கோங்க!’ என்று திகிலூட்டினார். மேலும், ''எங்களை ஆதிவாசினு சொல்றதோட, ஆளாளுக்கு எங்க பழக்க வழங்கங்களைப் பத்திக் கட்டுக் கதை பேசுறாங்க!'' என்றார் சற்றே வருத்தத்துடன்.

உங்களுக்கு நான் பொறுப்பு !