Published:Updated:

ரெண்டே ரூபாயில் ட்ரீட்மென்ட்!

Triplicane Syma Hospital

வழிகாட்டும் திருவல்லிக்கேணி சைமா

ரெண்டே ரூபாயில் ட்ரீட்மென்ட்!

வழிகாட்டும் திருவல்லிக்கேணி சைமா

Published:Updated:
Triplicane Syma Hospital
##~##

'திவ்யப்பிரபந்தம் ஒலிக்க, மேள தாளங்கள் முழங்க, பெருமாள் கோலாகலமாக வீதி உலா வரும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலும் அதைச் சுற்றி உள்ள வீதிகளிலும் ஒழுங்குடன் கூடிய தூய்மையைக் காண முடியும். இதற்கான காரணங்களில் ஒன்று 'சைமா’. - இது திருவல்லிக்கேணி வாசகர் ஸ்ரீநிவாசன் வாய்ஸ் ஸ்நாப்பில் சொன்ன தகவல். 

அவர் குறிப்பிட்டது உண்மைதான் என் பதை நமக்கு முதலில் உறுதிப்படுத்தியது, 'சைமா மருத்துவமனை, சிகிச்சைக் கட்ட ணம் ரூ.2’ என்று எழுதப்பட்டு இருந்த அந்த அறிவிப்புப் பலகை. சைமா பற்றி அதன் அமைப்பாளர்களிடம் பேசியபோது, 'குறிப் பிட்டு யார் பெயரையும் போட வேண்டாம்’ என்றபடிப் பேசத்தொடங்கினார்கள். ''ஸ்ரீநிவாசா இளைஞர் நற்பணி மன்றம் என்பதன் சுருக்கமே சைமா. இளைஞர் மன்றத்தில் 50 வய தைக் கடந்தவர்களுக்கு என்ன வேலை என்று பார்க்கிறீர்களா? சைமா தொடங்கப்பட்டது 1977-ல். நாங்கள் சைமாவைத் தொடங்கிய நேரத்தில், திருவல்லிக்கேணிக்குப் பெருமை சேர்க்கும் பார்த்தசாரதி கோயிலின் சுற்றுப்புறமும் கோயில் குளமும் மிக மோசமாக இருந்தன. கோயிலின் சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தி, குளத்தைத் தூர் வாரினோம். ஐஸ் ஹவுஸ் பகுதி முனையில் இருந்து, கோயில் குளம் வரைக்கும் எங்களுடைய சொந்த செலவில் குழாய்கள் அமைத்து, வீணாகும் மழை நீரைக் குளத்துக்குத் திருப்பிவிட்டோம். எங்களுடைய இந்த முயற்சியைப் பார்த்ததும், மாநகராட்சியே மேலும் மூன்றுஇடங்களில் இருந்து மழை நீரைக் குளத்துக்குக்கொண்டு வரக் குழாய்கள் அமைத்துத் தந்தது. எங்களுடைய முதல் காரியம் வெற்றி அடைந்ததால் உற்சாகமான நாங்கள் கல்விப் பணியில் கவனம் செலுத்தத் தொடங்கினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரெண்டே ரூபாயில் ட்ரீட்மென்ட்!

தொடக்கத்தில் இந்தப் பகுதியில் உள்ள ஏழை மாணவர்களில் அதிக மதிப்பெண்கள் பெறும் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்துப் பரிசுத் தொகை வழங்கிவந்தோம். பிறகு அவர்களின் மேல் படிப்புச் செலவுக்கான ஒரு பகுதியை நாங்களே ஏற்றுக்கொண்டோம். அந்த உதவித் தொகையில் படித்துப் பயன் அடைந்தோர் இன்று ஏராளம். பிறகு தேர்வில் தோல்வி அடைந்து படிப்பைப் பாதியில் விடும் ஏழை மாணவர்களுக்கும் உதவ வேண்டும் என்று யோசித்தோம். அதன் விளைவே இலவச டியூ ஷன் சென்டர். கடமைக்கு நடத்தினால் போதும் என்று நினைக்காமல் தகுதியான ஆசிரியர்களை நியமித்தோம். கடந்த ஆண்டு இங்கு படித்த மாணவர்களில், நான்கு பேர் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில், 1,000 மதிப் பெண்களுக்கு மேல் பெற்று உள்ளனர். இந்தப் பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்குக் குறைந்த செலவில் மருத்துவ வசதி செய்து தர ஆரம்பிக்கப்பட்டதுதான் சைமா மருத்துவமனை. பொது மருத்துவ சிகிச்சை, மருந்து மாத்திரைகள் என அனைத்துக்கும்  2 ரூபாய்தான் கட்டணம். நீரிழிவு, ரத்தப் பரிசோ தனைகள் செய்ய வேண்டும் என்றால் அதற்கு மட்டும் 20 ரூபாய் வசூலிக் கிறோம்.

வெளியூர்களில் இருந்து கோயி லுக்கு வரும் பக்தர்கள் குளிக்கவும் துவைக்கவும் இந்தப் பகுதி வணிகர் களின் வசதிக்காகவும் 24 மணி நேரமும் செயல்படும் இலவசக் கழிப் பறை, குளியல் அறை அமைத்தோம். இப்போது தெரு சுத்தமாக உள்ளது. வெளியூர் பயணிகளுக்கும் மிகுந்த சௌகரியம். எங்களுடைய இத்தனை ஆண்டு காலப் பணியில், மிக முக்கியமானது மழை நீர் சேகரிப்புத் திட்டம். அதுவும், தமிழக அரசு இந்தத் திட்டத்தை அறிவிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, எங்கள் அமைப்பின் முயற்சியால் இந்தப் பகுதி முழுவதி லும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்திவிட்டோம். அது பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த 'நம்மால் முடியும்’ என்று குறும்படத்தைத் தயாரித்து சி.டி.யாக வெளி யிட்டோம். இதைக் கேள்விப்பட்ட முதல்வர் ஜெயலலிதா எங்களைப் பாராட்டி, அவரே அந்த சி.டி-யையும் வெளியிட்டார்.

இதேபோல் இந்தப் பகுதிக்கு தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி-க்களை வைத்து ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்துகிறோம். மேலும் மெடிக்கல் கேம்ப், ரத்ததான முகாம்களை நடத்திவருகி றோம். 'சைமா’ என்ற பெயரிலேயே வெப்-சைட் ஒன்றையும் நடத்திவருகிறோம். ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள், ரத்தம் தேவைப்படு பவர்கள் அந்த வெப்-சைட்டில் தங்களின் பெயர்களைப் பதிவுசெய்தால் உரிய ஏற்பாடு கள் செய்கிறோம். சைமாவின் பணிகளை அனைவரும் அறியும் வகையில், 'பிளிஸ்’ என்ற மாத இதழையும் நடத்திவருகிறோம்'' என்று ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.

நடிகர்களின் கட்-அவுட்களுக்குப் பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்யும் ரசிகக் கண்மணிகள், தங்கள் அபிமான நடிகரின் பெயரில் நடத்தும் நற்பணி மன்றங்களை இது போன்ற செயல்களில் ஈடுபடுத்தலாமே!

- ஜோ.ஸ்டாலின்

படம்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism