Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், தலைவர் த.மு.எ.க.சபடம் : வீ.நாகமணி

நானும் விகடனும்!

இந்த வாரம் : எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், தலைவர் த.மு.எ.க.சபடம் : வீ.நாகமணி

Published:Updated:

பிரபலங்கள்   விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை,   விருப்பத்தைப்  பகிர்ந்துகொள்ளும்   பக்கம்!

##~##

''விருதுநகர் நென்மேனி மேட்டுப்பட்டி ஆரம்பப் பாடசாலைக்கு எதிரில் இருக்கும் அந்த வாசக சாலை. சாணி மெழுகிய திண்ணையில் ஓலைப் பாய் விரித்து, பத்திரிகைகளைப் பரப்பி வைத்திருப்பார்கள். ஐந்தாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது, பள்ளிக்கூட இடைவேளைகளில் அந்தப் பத்திரிகைகளைப் படிக்கப் பழகிக்கொண்டேன். அப்படி விகடன் எனக்குப் பழக்கமானது 1965-ல். அது முதல் விகடனை இத்தனை வருடங்களாக ரசித்துக்கொண்டு இருக்கிறேன். அட்டையில் சிரித்தபடியே வரவேற்கும் 'விகடன் தாத்தா’, எனது பால்யத்தின் நினைவு மீட்டல்களில் ஒருவர். ஸ்ரீதர், கோபுலுவின் ஓவியங்கள் என அப்போது மனிதர்களிடம் பேசிச் சிரிப்பதை விட விகடனைக் கையில் வைத்துக்கொண்டுதான் அதிகம் சிரித்துக்கொண்டு திரிவேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்லூரிப் பருவத்தில் விகடனில் நா.பா., ஜெயகாந்தன் என்று சீரியஸ் விஷயங்களுக்குத் தாவிவிட்டேன். தொடர்ந்து கம்யூனிச சிந்தனைகள், சார்புகள், அது தொடர்பான செயல்பாடுகள் என்று இயங்கத் தொடங்கியதில், வெகுஜனப் பத்திரிகைகளின் கதைகளும் அதற்கான அழகு ததும்பும் பெண்களின் படங்களும்கூட என்னை ஈர்க்கவில்லை. ஒருவிதமானக் கடின மன நிலையிலேயே இயங்கிய காலம் அது. சில வருட இடைவேளையிலேயே வெகுஜன ரசனையின் தேவையை நான் புரிந்துகொள்ளும் அழுத்தமான சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அப்போதுதான் விகடன் எத்தகைய நிலையில் தனது நகைச்சுவை அங்கதம் மூலம் மக்கள் மனதில் புத்துணர்ச்சி ஏற்றி வந்திருக்கிறது என்று எனக்குப் புரிந்தது.

நானும் விகடனும்!

தமிழ்ச் சமூகத்தின் முக்கிய முகமாக விகடன் தலையங்கம் அன்றும் இன்றும் விளங்கிவருகிறது. 'மாஸ் மேகசின்’ என்ற அளவில் விகடனின் நிலைப்பாடுகள் நேர்மறையானதாக, வாசகருக்குத் தெளிவும் புரிதலும் ஊட்டக்கூடியதாக இருக்கும். தமிழர்களின் மத்திய தர வர்க்க மனங்களைத் தகவமைக்கும் இடத்தில், கருத்தை உருவாக்கும் தளமாக, களமாக விகடன் எப்போதுமே இருந்துவந்திருக்கிறது. 'ஒப்பீனியன் மேக்கர்’களை தலைமுறை தலைமுறையாக விகடன் உருவாக்கி வந்திருக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் என்பதற்கு விகடன் பொருத்தமான ஓர் உதாரணம்.

தற்போது வார இதழ்களில் சிறுகதைகளே அரிதாகிவிட்ட சூழலில், என்னை விகட னின் சிறுகதைகள்தான் பெரிதும் வசீகரிக் கின்றன. கதை என்பது வெறும் கதை அல்ல... அது ஒரு வாழ்க்கை... ஓர் அனுபவம். ஒவ்வொரு மனிதனிடமும் நிச்சயம் ஒரு உன்னதமான கதை இருக்கும். அதைத் தேர்ந்த வார்த்தைகளில் வெளிப் படுத்த நிச்சயம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதைசொல்லி ஒளிந்திருப்பான். அந்தக் கதைசொல்லிக்கு இப்போது விகடனில் மட்டுமே களம் இருக்கிறது. சில பத்திரிகை கள் முற்போக்கு எழுத்தாளர்களைப் புறக் கணிக்கின்றன. ஆனால், விகடன் எப்போ தும் அப்படி எந்தப் புறக்கணிப்பையும் காட்டியது இல்லை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து வளர்ந்தவர்களின் படைப்புகளை விகடன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

மேலாண்மை.பொன்னுச்சாமியின் கதைகள் எங்கள் பத்திரிகைகளில் வருவதற்குக் குறைவில்லாமல் விகடனிலும் பிரசுரமாகின்றன. என் சகோதரன் போலப் பழகும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மிகப் பெரிய இடம் தந்தது விகடன்தான். வண்ணதாசன், காமுத்துரையின் ஒவ்வொரு கதையும், பாஸ்கர் சக்தியின் 'தக்ளி’, வெண்ணிலா எழுதிய 'வெளிக்கி’, பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய சிறுகதை என விகடனில் வெளியான சிறுகதைகள் அனைத்தும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன.      

பக்கம் பக்கமாக விரியும் சிறுகதை களை ருசிக்க ருசிக்கப் பரிமாறும் அதே விகடன்தான், வலைப்பதிவர்களின் இரு வரி சுவாரஸ்ய கமென்ட்களையும் ரசனையாகத் தேர்ந்தெடுத்து ரசிக்கும் விதத்தில் பிரசுரிக்கிறது. இரண்டே பக்கங்களில் நடப்பு நிகழ்வுகளை மிகக் கூர்மையாகப் பதிவு செய்யும் 'வலைபாயுதே’ பக்கத்தை நான் எந்த வாரமும் தவறவிட்டது இல்லை. இப்படி முந்தைய தலைமுறை வாசக னையும் 'இன்றைய ஸ்பெஷல் மெனு’ சுவாரஸ்யத்தை உறுத்தாமல் ரசிக்கவைக்க விகடனால் மட்டுமே முடியும்.

வரலாற்றுக்கும் நிகழ்காலத்துக்குமான ஊஞ்சல் பயணம் விகடன் வாசகர்களுக்குக் கிடைத்த வரம். மார்க்ஸ், சார்லி சாப்ளின், அம்பேத்கர் போன்ற வரலாற்று ஆளுமைகளை 'நாயகன்’ தொடர் மூலம் போற்றுவார்கள். 'மூங்கில் மூச்சு’, 'வட்டியும் முதலும்’ தொடர்கள் மூலம் நிகழ்கால நிதர்சனங்களைப் பளிச்செனப் புரியவைப்பார்கள். வாச்சாத்தி வலியை எந்த வார இதழும் பதிவு செய்யாதபோது, விகடன்தான் அழுத்தமாகப் பதிவுசெய்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி சம்பத், வாச்சாத்தி சண்முகம், பாலபாரதி போன்றோரைப் போற்றிக் கொண்டாடியது விகடன் மட்டுமே!

வருடத்தின் இறுதியில் அறிவிக்கப்படும் விகடன் விருதுகளில் குறைந்தபட்சம் மூன்று பேரேனும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த தோழர்களாக இருக்கிறார்கள். 'பூ’ படத்துக்காக எனக்குச் சிறந்த கதாசிரியர் விருது அளித்த விகடன், கீரனூர் ஜாகீர்ராஜா, சு.வெங்கடேசன், காமுத்துரை ஆகிய தோழர்களின் எழுத்துக்களுக்கும் விருது அங்கீகாரம் அளித்திருக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கருத்துச் சுதந்திரத்துக்காகப் பிறந்த அமைப்பு. விகடனுக்கும் கருத்துச் சுதந்திரத்தின் மதிப்பு இருப்பதைச் சக பயணியாகப் பார்த்து மதிக்கிறோம்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் என் பேட்டிகள் விகடனில் ஆறு முறை வந்திருக்கின்றன. 'காதலர் தினம்’ குறித்தெல்லாம் என்னிடம் கட்டுரை கேட்டு வெளியிட்டது விகடன். என்னை நான் கொஞ்சமே கொஞ்சம் அழகாக உணர்ந்த சமயங்கள் விகடனில் என் புகைப்படங்கள் வெளிவரும் தருணத்தில்தான்!

எந்த ஒரு வார இதழுக்கும் பக்கங்களை நிரப்பச் செய்திகளும் கட்டுரைகளும் ஏகமாகத் தேவைப்படும். ஆனால், வெறுமனே வாசிப்பு சுவாரஸ்யத்துக்காகத் தேடாமல், உண்மையான படைப்பாளிகளைத் தேடிப் பிடித்து விகடன் எழுதச் சொல்லும். விகடனின் 'குட் புக்’கில் இடம் பெற்றிருப்பது ஒரு படைப்பாளிக்கான கௌரவ அங்கீகாரம்!

'சொல்வனம்’ பகுதியில் இடம்பெறும் ஒவ்வொரு கவிதையும் பிரபல கவிஞர்களின் கவிதைகளுக்குச் சவால் விடுபவையாக இருக்கின்றன. தமிழில் அர்ச்சனை செய்யப் பயிற்சி பெற்றவர்கள் புறக்கணிக்கப்பட்ட செய்தியை விகடன்தான் முதன்முதலில் உலகுக்கு எடுத்துச் சொன்னது.

தற்போது விகடன் ஆசிரியர் குழுவில் உள்ள இளைஞர்கள் வலுவான சமூக அக்கறைகொண்டவர்களாக இருக்கிறார் கள். தமிழின் எந்த வார இதழுக்கும் இப்படி ஒரு குழு அமையவே இல்லை.

புதுப் புது யோசனைகளின் என்சைக்ளோபீடியா என்று விகடனைச் சொல்லலாம். 'என் விகடன்’ அதற்கான சாட்சி. கிராமப்புற மக்களை எப்போதும் மீடியா வெளிச்சம் நனைத்ததே இல்லை. மாநிலம் தழுவிய சாதனையாளர்கள் மட்டுமே பாஸ்போர்ட் சைஸ் போட்டோவாக நாளிதழ்களில் இடம் பிடிப்பார்கள். ஆனால், என் விகடன் அதையும் தளர்த்தி வாரம்தோறும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் முகங்களை அச்சில் ஏற்றுகிறது.  

நானும் விகடனும்!

தொலைக்காட்சி சேனல்களில் எட்டிப் பார்க்க முடியும். ஆனால், எளிய கிராமப்புற மக்கள் மீது வெளிச்சம் பாய்ச்சும் இதழாக 'என் விகடன்’ இணைப்பு பிரகாசிக்கிறது. சினிமா செய்திகள் மீது ஆர்வம் இல்லாத நான், விகடன் சினிமா விமர்சனத்தை மட்டும் கவனத்தில்கொள்வேன்.  

சிறு பத்திரிகை வாசகர்கள், விகடனை வாசிக்கிறார்கள். விகடன் வாசகர்களில் ஒரு பகுதியினர், சிறு பத்திரிகைகளை வாசிக்கிறார்கள். இந்த ஊடாட்டம் நன்றா கவே இருக்கிறது!  

நம் சமூகத்தை அரிக்கும் மிகப் பெரிய பிரச்னையான சாதிய ஒடுக்குமுறைக்கு விகடன் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும் என்பது என் ஆவல். கல்வி அறிவு பெருகிய பிறகும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறை பல்வேறு வடிவங்களில் தொடரும் கொடுமையை இன்னும் அதிகமாகக் கவனித்துப் பதிவு செய்ய வேண்டியது விகடனின் கடமை ஆகும்.

எழுத்தாளர்களுக்கான சந்தோஷமே மக்களுக்கான இலக்கியம் நோக்கி இயங்குவதுதான். அந்த இலக்கியத்தை தன் பாணியில் வாரம்தோறும் படைக்கிறது விகடன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism