Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

ருடத்தின் பெரும் பகுதியை நான் செலவழிக்கும் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரம், கோடைக் காலத்திலும் சற்றே குளிர்ந்தபடியே இருக்கும். 'எந்தக் காலமானாலும், ஸ்வெட்டரைக் கையில் தூக்கிக்கொண்டே அலையும் சான்ஃப்ரான்சிஸ்கோ ஆசாமிகள்' என்று கிண்டல்அடிக்கும் வகையில் எப்போதும் தூங்கி வழியும் மந்தகாச தட்பவெப்பம். ஆனால், தகவல் தொழில்நுட்பத் தைப் பொறுத்தவரை இன்றைய நாளில் சான்ஃப்ரான்சிஸ்கோ செம ஹாட். ட்விட்டர், ஜிங்கா, சேல்ஸ்ஃபோர்ஸ்  என டெக் உலகைக் கலக்கி வரும் நிறுவனங்கள் இருப்பது இந்த ஊரில்தான்.

அதுவும் கோடைக் காலத்தில் வரிசைக்கிரமமாகப் பல டெக் மாநாடுகள் நடக்கும்போது, சான்ஃப்ரான்சிஸ்கோ கோலாகலமாகும். சென்ற வாரம் நடந்த ஆப்பிளின் மென்பொருள் உருவாக்குவோருக்கான மாநாட்டில் (Developer Conference ) கலந்துகொள்ள வந்தவர்களால் ஊர் நிரம்பி வழிந்தது. நியூயார்க்கில் இருந்து வந்திருந்த ப்ரையனுடன் பேசினேன்... ''நான் தயாரித்த மூன்று மென்பொருட்கள் ஆப்பிளின் மென்பொருள் கடையில் இருக்கின்றன. புதிதாக அவர்கள் என்ன வெளியிடுகிறார் கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே வந்தேன். நாளையே ஊர் திரும்ப வேண்டும். ஏனென்றால், பள்ளியில் இரண்டு நாள் மட்டுமே விடுமுறை எடுத்துக்கொண்டு வந்தேன்' என்ற ப்ரையனுக்கு 13 வயது. எட்டாவது படிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

மாநாட்டில் கலந்துகொள்ள 18 வயதாகி இருக்க வேண்டும் என்ற விதிமுறையை 13 - 17 வயதினரும் பங்கு பெறலாம் எனத் தளர்த்தியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். காரணம், ஆப்பிளுக்கு அலைபேசி மென்பொருள் என்பது மிகப் பெரிய வருவாய் ஈட்டும் பிரிவு.

ஆப்பிளின் 7 லட்சம் மென்பொருட்கள்; இவை 35 பில்லியன் தடவை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 4 லட்சம் மென் பொருள் தயாரிப்பாளர்கள். 155 நாடுகளில் மென் பொருட்களைப் பயன்படுத்தலாம். இதை எல்லாம்விட முக்கியமானது, ஆப்பிள் இதுவரை மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு 5 பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டிக் கொடுத்துள்ளது.

ஆப்பிள் என்பது பிரபலமான நிறுவனம் என்றாலும், உலக அலைபேசிப் பயனீட்டில் கொடி கட்டி இருப்பது ஆண்ட்ராயிட். நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 10 லட்சம் ஆண்ட் ராயிட் சாதனங்கள் புதிதாகச் செயல்படுத் தப்பட்டு இருப்பதாகச் சொல்கிறது கூகுள். ஆண்ட்ராயிடிலும் மென் பொருள் சந்தை கள் இருக்கின்றன. ஆப்பிள், ஆண்ட்ராயிட் இரண்டையும்விட, மிக முக்கியமாக இந்த வாரத்தில் பதிவுசெய்ய வேண்டிய முக்கிய நிகழ்வு... மைக்ரோசாஃப்ட், குளிகைக் கணினிப் பிரிவில் நுழைந்திருப்பது!

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

ஆப்பிளின் ஐ-பேட் ( iPad ), தொடர்ந்து வந்த ஆண்ட்ராயிடில் இயங்கும் குளிகைக் கணினிகள், மேசைக் கணினிப் பயன்பாட் டைக் குறிப்பிடத்தக்க வகையில் குறைத்த படியே இருக்கிறது என்பது மைக்ரோ சாஃப்ட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகப் பெரிய சவால். இதைச் சமாளிக்க என்ன செய்யப்போகிறது என்பது டெக் உலகின் பெரும் கேள்வியாக இருந்தது.

அந்தக் கேள்விக்குப் பதில், விண்டோஸ் 8 இயங்கு மென்பொருளில் இயங்கும் சர்ஃபேஸ் (Surface)... மைக்ரோசாஃப்ட்டின் புதிய, பளபள குளிகை. சர்ஃபேஸ் இந்த இணைய யுகத்தில் கணிசமான தாக்கத்தை உருவாக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

நம்பிக்கைக்குப் பல காரணங்கள்:

முதலில், அவர்கள் சர்ஃபேஸுக்குப் பயன்படுத்தும் வன்பொருள். மௌஸ், கீ-போர்டு போன்ற துக்கடா உதிரிச் சாதனங்களை மைக்ரோசாஃப்ட் தயாரித்து இருந்தாலும், கணினிகளைப் பொறுத்தவரை அவர்கள் இதுவரை பின்பற்றிய திட்டம் தங்களது விண்டோஸ் இயங்கு மென்பொருளை ஹெச்பி, டெல் போன்ற வன் பொருள் தயாரிப்பாளர்களுக்கு உரிமமாக அளிப்பதே. சர்ஃபேஸ்  குளிகையில் இந்தப் பாணியைக் கடைப்பிடிக்காமல் தாங்களே பொறுமையாக, தரமான வன்பொருளை வடிவமைத்து இருக்கிறார்கள்.

அடுத்து, இந்தக் குளிகையின் இயங்கு மென்பொருள். மேசைக் கணினிகளில் இயங்கும் அதே இயங்கு பொருளே சர்ஃபேஸ் குளிகையையும் இயக்குகிறது. இதனால், உங்களது மேசைக் கணினியில் இருக்கும் மென்பொருள்களை அப்படியே குளிகையிலும் இயக்கலாம். ஆப்பிளின் ஐ-பாட் அப்படி அல்ல. மேக் ஓஎஸ் எக்ஸ் (Mac OSX) எனப்படும் ஆப்பிளின் மேசைக் கணினி இயங்கு பொருள் வேறு. ஐஓஎஸ் (iOS) எனப்படும் மொபைல் சாதன இயங்கு பொருள் வேறு. இதில் இருக்கும் பயனீட்டுச் சவால்களைக் கண்ட றிந்து ஸ்மார்ட்டான முடிவு எடுத்திருக்கிறது மைக்ரோசாஃப்ட்.

கடைசியாக... ஆப்பிள், ஆண்ட்ராயிட் போலவே மென்பொருள் சந்தை திறக்கிறது மைக்ரோசாஃப்ட். மென்பொருள் தயாரிப்பவர்கள் இதில் தங்களது மென்பொருளைத் தரவேற்றி திரவியம் தேடலாம்.

பாட்டம்லைன்: மொபைல் சாதனங்களில் இயக்கப்படும் மென்பொருள் என்பது மிகப் பிரமாண்டமானதாக மாறியபடி இருக்கிறது. இதில் உற்சாகம் அளிக்கும் உண்மை என்னவென்றால், இந்த மொபைல் யுகத்தின் தொடக்கக் கட்டத்தில்தான் இப்போது இருக்கிறோம். இதில் நாம் இடைபட்டு என்ன பயன்பெறுவது என்ற கேள்வி எழுகிறதா? சில பரிந்துரைகளைப் பகிர்ந்துகொள் கிறேன் அடுத்த வாரத்தில்...

log off

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism