Published:Updated:

நடமாடும் செல்போன் சார்ஜர் !

இரா.மோகன், படங்கள் : உ.பாண்டி

##~##

வாழ்க்கையின் தவிர்க்க முடியாத தேவையாகிவிட்ட மின்சாரம் இப் போது அரிதாகிக் கொண்டேவருகிறது. ஆனால், அதன் அவசியமோ அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தச் சூழலில்தான் 'காற்றில் இருந்து மின்சாரம் பெறும் மொபைல் சார்ஜரை எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த பீட்டர் ஜான் என்பவர் கண்டுபிடித்து இருக்கிறார்.’  என்று வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் சொல்லி இருந்தார் 'என் விகடன்’ வாசகரான ராஜராஜன்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்த பீட்டர் ஜானைச் சந்தித்தேன். எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்துவரும் இவர், மின்சாரம் தொடர்பான புதிய கருவிகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவர். அதன் பலனாக இவர் கண்டுபிடித்ததுதான் 'செல்போன் மொபைல் சார்ஜர்’.

பேருந்து மற்றும் ரயில் பயணங்களின்போது பயன்படக்கூடிய  செல்போன் மொபைல்சார்ஜர் குறித்து விளக்குகிறார் பீட்டர் ஜான். 'காற்றில் எளிதாக சுழலக் கூடிய தகரத்தினாலோ, பிளாஸ்டிக்கினாலோ ஆன சிறிய றெக்கைகள்கொண்ட விசிறி ஒன்றை, சைக்கிளில் பொருத்தக்கூடிய டைனமோவுடன் இணைக்கவேண்டும். காற்றில் விசிறி சுழலச் சுழல இந்த டைனமோவில் இருந்து ஏ.சி. மின்சாரம் உற்பத்தியாகும். இதனை டி.சி. மின்சாரமாக மாற்ற டையோடு ஒன்றைப் பொருத்தவேண்டும். இதன் மூலம் உருவாகும் மின்சாரத்தை நம்முடைய செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றப் பயன்படுத்தலாம்.

நடமாடும் செல்போன் சார்ஜர் !

 200 கிராமுக்கும் குறைவான எடை கொண்ட இந்த செல்போன் மொபைல் சார்ஜர் பயணங்களின்போது பெரிதும் பயன்படும். ரயிலிலோ, பேருந்திலோ உள்ள ஜன்னலில் இந்தக் கருவியை கிளிப் மூலம் பொருத்திவிடவேண்டும். ஜன்னல் வழியாக வரும் காற்றின் வேகத்தில் இதில் உள்ள விசிறி சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அதை நம் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றப் பயன்படுத்திக்கொள்ளலாம். கார், ஆட்டோ, டூவீலர் என எல்லா வாகனங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். 300 ரூபாய் செலவில் கையடக்கக் கருவியாக இதனை உருவாக்க முடியும். எவ்வளவு காஸ்ட்லியான செல்போனாக இருந்தாலும்,  கரன்ட் இருந்தால்தான் சார்ஜ் ஏற்ற முடியும். அந்த நிலையை இந்த கருவியின் மூலம் மாற்றலாம்!'' என நம்பிக்கையுடன் பேசினார்.

இது மட்டும் இல்லாமல் அடிபம்ப்பை இயக்கக் கூடிய மின் இயந்திரம் ஒன்றையும் கண்டுபிடித்து உள்ளார் பீட்டர்ஜான். 12 வோல்ட் டி.சி. மோட்டார், 12 வோல்ட் பேட்டரி, 12 வோல்ட் டிரான்ஸ்ஃபார்மர் ஆகியவற்றின் துணைகொண்டு உருவாக்கப்பட்ட இந்த மின் இயந்திரம் அடிபம்ப்பின் ஹேண்டிலை இயக்க, குழாயில் இருந்து தண்ணீர் சீராகக் கொட்டுகிறது. இந்த இயந்திரம் நாள்தோறும் தண்ணீருக்காக அடிபம்புடன் மல்லுக்கட்டும் பெண்களுக்கு உபயோகமாக இருக்கும்.

நடமாடும் செல்போன் சார்ஜர் !

தேவையான வழிகாட்டுதலோ, போதுமான பொருளாதார வசதியோ இல்லாத நிலையில் பீட்டர் ஜானின் சுய முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்தக் கருவிகளை அறிவியலாளர்கள் அங்கீகரிக்க வேண்டும். அதற்கான காப்பு உரிமையையும் பீட்டர் ஜானுக்கு வழங்க வேண் டும். அதன் மூலம் இந்தச் சாதனையை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே பரமக்குடி பொன்னையாபுரம் மக்களின் ஆசை!

அடுத்த கட்டுரைக்கு