Published:Updated:

ஞாபகம் வருதே!

ஞாபகம் வருதே!

ஞாபகம் வருதே!
##~##
ன்னும் நான்கு ஆண்டுகளில் 150-வது ஆண்டைத் தொட இருக்கிறது தமிழகத்தின் முதல் நகராட்சியான வாலாஜாப்பேட்டை நகராட்சி. நூற்றாண்டைக் கடந்து கம்பீரமாக நிற்கிறது வாலாஜாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளிகுறித்த தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள் இங்கு 30 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் டி.ஆர்.சுந்தரமூர்த்தியும் பள்ளியின் பழைய மாணவரான டி.ஆர்.ஸ்ரீகண்டனும். ''1951 - முதல் 1984- வரைக்கும் 35 வருஷமா வாலாஜா ஹைஸ்கூல்ல தான் கணக்கு வாத்தியாரா வேலைப் பாத்தேன். நான் வாத்தியாரா வேலைக்குச் சேர்ந்தபோது என்னோட சம்பளம் 18 ரூபாய். 1949-ல 35 ரூபாயா ஆச்சு. அப்புறம் 65 ரூபாயாக மாறி ரொம்ப காலமா அதே சம்பளம்தான்.  

ஒருநாள் கிளாஸ்ல சரியாப் படிக்கலைனு எட்டாம் வகுப்பு மாணவன் ஒருத்தனை அடிச்சுட்டேன். அவன் மயங்கி விழுந்துட்டான். முகத்துல தண்ணி தெளிச்சு மயக்கம் தெளிவிச்சா, 'சாப்பிடலை சார்... பசி மயக்கம்’னு சொன்னான்'' என்று சொல்லும்போதே குலுங்கிக் குலுங்கி அழுதுவிட்டார்.

ஞாபகம் வருதே!

சிறிதுநேர மௌனத்துக்குப் பிறகுப் பேசியவர், ''என் வாழ்நாள்ல என்னைக்குமே அது மறக்க முடியாத சம்பவமா ஆயிடுச்சு. அப்புறம் அவனை என்னோட வீட்டுக்கு அனுப்பி சாப்பிட்டுட்டு வரச் சொன்னேன். அன்னைக்கு வகுப்புல வேற யாரெல்லாம் சாப்பிடலைனு கேட்டேன். மொத்தம் 17 பேர் எந்திரிச்சு நின்னாங்க. காலையில் சாப்பிடாம நடந்தே ஸ்கூலுக்கு வர்றவங்க மதியமும் சாப்பிடறது இல்லை. அவங்களுக்கு உதவி செய்றதுக்காக வாத்தியார்கள் எல்லாம் சேர்ந்து எங்க சம்பளப் பணத்துல ஆளுக்கு அஞ்சு ரூபா போட்டு மதிய உணவு கொடுக்க ஆரம்பிச்சோம். வசதி படைச்சவங்ககிட்ட நன்கொடையும் வாங்கினோம். அப்போது எல்லாம் மதிய உணவுத் திட்டம்னு எதுவும் கிடையாது'' என்று மலரும் நினைவுகளில் மூழ்கினார் சுந்தரமூர்த்தி.

பள்ளியின் பழம்பெரும் மாணவரான டி.ஆர்.ஸ்ரீகண்டன், ''இப்ப ஒரு வகுப்புக்கு 60 பேர், 70 பேர்னு ஸ்கூல்ல படிக்கிறாங்களே, இது மாதிரி எல்லாம் அப்ப கிடையாது. ஒரு வகுப்புக்கு 20 பேர் 25 பேர்னு குறைவாதான் இருப்போம். வாலாஜாப்பேட்டையில தெலுங்குப் பேசுறவங்க நிறையப் பேர் இருந்ததால ஸ்கூல்ல தமிழ் மீடியம், தெலுங்கு மீடியம்னு வகுப்புகள் இருந்துச்சு. ஏ செக்ஷன் தமிழ் மீடியமாவும் பி செக்ஷன் தெலுங்கு மீடியமாவும் இருந்துச்சு.

ஞாபகம் வருதே!

டியூஷன் என்பதே அப்ப கிடையாது. திருக்குறளுக்குனு தினசரி சிறப்பு வகுப்பு நடக்கும். அதேபோல சாயங்காலம் ஸ்கூல் முடிஞ்சதும் 4 மணியிலேர்ந்து 5 மணி வரைக்கும் ஸ்கூல்லயே இலவசமா சிறப்பு வகுப்பு எடுப்பாங்க.

சுற்று வட்டாரக் கிராமங்கள்லேர்ந்து நிறைய மாணவர்கள் நடந்தே வந்து படிச்சுட்டுப் போவாங்க. அப்போல்லாம் வசதியானவங்க மட்டும்தான் சைக்கிள் வெச்சிருப்பாங்க. ஏழை மாணவர்கள் நிறையப் பேருக்கு ஆசிரியர்கள் நோட்புக், பென்சில்னு கொடுத்து உதவி செய்வாங்க. இதுக்காக ஆசிரியர்கள் வசதி படைச்சவங்ககிட்ட நன்கொடையா நோட் புக், பென்சில்னு வாங்கிவெச்சிருப்பாங்க. கொடுத்தவங்க யாருனு வாங்குறவங்களுக்கும் வாங்கினவங்க யாருனு கொடுத்தவுங்களுக்கும் தெரியவே தெரியாது'' என்கிறார் ஏக்கப் பெருமூச்சோடு!

செய்தி, படங்கள்: ரியாஸ்

அடுத்த கட்டுரைக்கு