Published:Updated:

மாற்றத்துக்கான முதல் விதை!

மாற்றத்துக்கான முதல் விதை!

##~##

''எங்களைப் போன்ற திருநங்கைகளுக்குச் சமுதாயத்துல எந்த மாதிரியான அநீதிகள் இழைக்கப்படுகிறது என்பதை எடுத்துச் சொல்ல ஒரு கூட்டம் நடக்குது. நீங்க அவசியம் வரணும்!''- திருநங்கையான சுதா வாய்ஸ் ஸ்நாப்பில், இப்படி ஓர் அழைப்பு விடுத்திருந்தார். 

ஜூன் 21-ம் தேதி சென்னை ஆஷா நிவாஷில் நடந்தக் கூட்டத் துக்கு ஆஜரானேன். ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவும் நடிகை   சி.ஆர்.சரஸ்வதியும் விழாவின் சிறப்பு விருந்தினர்கள்.

அமுதா பேசும்போது, 'சில ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரியில் நான் கலெக்டராக இருந்த போது திருநங்கைகள் காய்கறிக் கடை வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் திருநங்கைகளிடம் ஆர்வமும் திறமையும் கொட்டிக்கிடக்கிறது. அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கத்தான் ஆட்கள் இல்லை. வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் இவர் களும் ஜெயிப்பார்கள். இனிமேல் திருநங்கை களை யாரும் வேறுபடுத்திப் பார்க்காதீர்கள். அவர்களும் நமக்குள் ஒருவர்தான்'' என்று பேசி முடிக்க... பலருடைய கண்கள் பனித்திருந்தன.

மாற்றத்துக்கான முதல் விதை!

தொடர்ந்து, நடிகை சி.ஆர்.சரஸ்வதி பேசிய போது ''இங்கே சுய உதவிக் குழுவைச் சேர்ந்த நிறைய பெண்கள் வந்திருக்கிறீர்கள். சமுதாய மாற்றம் பெண்களில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். நம் எல்லோரையும்விட திருநங்கைகள் பல இடங்களிலும் பாதிக்கப்படுகிறார்கள். அதை மாற்ற வேண்டும்'' என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் வந்திருந்த பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளைத்தாள் கொடுக்கப்பட்டது. திருநங்கைகள் பற்றிய கருத்தை அதில் எழுதி, அருகில் இருந்தப் பெட்டியில் போடும்படி அறிவிக்கப்பட்டது. எல்லா பெண்களுமே  எழுத ஆரம்பித்தார்கள். மாற்றத்துக்கான முதல் விதை அந்தப் பெட்டியில் விழுந்தது!

- சா.வடிவரசு

படங்கள்: பா.காயத்ரி அகல்யா                              

அடுத்த கட்டுரைக்கு