Published:Updated:

வலையோசை

வலையோசை

ஒரு ஊழியனின் குரல்

வலையோசை


எல்.ஐ.சி. வேலூர் கோட்ட அலுவலகத்தில் பணிபுரிந்துவருகிறார் ராமன். அகில இந்திய இன்ஷூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்டப் பொதுச் செயலாளராகக் கடந்த 13 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இவர்,
http://ramaniecuvellore.blogspot.in //என்ற வலைப்பூவில் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து எழுதிவருகிறார். அவருடைய வலைப்பூவில் இருந்து...

சபாஷ் ஜெயலலிதா!

வலையோசை

பாலியல் கொடுமைகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களைப் பணி நீக்கம் செய்வது, அவர்களுடைய சான்றிதழ்களை ரத்து செய்வது என்று தமிழக அரசு எடுத்து உள்ள  முடிவு நிஜமாகவே பாராட்டத்தக்கது.

பாலியல் கொடுமைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவது பற்றிய புகார்கள் சமீப காலத்தில் அதிகரித்துவருகின்றன. மதுரை மாவட்டம் பொதும்புவில் ஆரோக்கிய சாமி என்கிற தலைமை ஆசிரியர் பல ஆண்டுகளாக ஏராளமான சின்னஞ்சிறு மாணவிகளைச் சீரழித்துள்ளார். ஆனால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் பிருந்தாகாரத் அங்கே வரவேண்டி இருந்தது.

தெய்வத்துக்குச் சமமாக மதிக்கப்படும் ஆசிரியர் இனத்தில் இப்படிக் கேடு கெட்ட புல்லுருவிகளும் உண்டு. பல சமயம் எவ்வித நடவடிக்கையும் கிடையாது. சில சமயம் மாறுதல் என்பது மட்டுமே தண்டனையாக இருக்கும்.

இப்படிப்பட்ட சூழல் நிலவும் நேரத்தில் ஆசிரியர் இனத்தையே களங்கப் படுத்தும்  அற்பப் பதர்களுக்குக்  கடுமையான தண்டனை என்பது மிக மிக அவசியமான ஒன்று.

ஜெ எப்போதாவது அரிதாகத்தான் நல்ல முடிவுகளை எடுக்கிறார்... அதில் இதுவும் ஒன்று. நன்று!

மரணிக்கவா மழலைகள்?

வலையோசை

தயத்தைப் பாதித்த இரு மழலைகளின் மரணம் பற்றிய பதிவு இது. ஒன்று அனைவரும் அறிந்த ஹரியானா குழந்தை மஹி. பிறந்த நாள் கொண் டாடிய அந்தச் சிறுமலர், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சடலமாக வெளியில் வந்தாள்.

ஆழ்துளைக் கிணறு தோண்டி அதிலே தண்ணீர் வரவில்லை என்றால் அதை அப்படியே விட்டுவிட்டுப் போவதால்தான் அதிலே சிக்கிக்கொள்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி போர் போட முடிகின்றவர்களால், அதற்கு மேலே ஒரு மூடியைப் போட்டு மூட 200, 300 ரூபாய் செலவிட முடியாதா?

##~##
இன்னொரு மழலையின் மரணம் இன்னும் வெகுவாகப் பாதித்தது. சென்னையில் பணியாற்றும்  ஒரு ஊழியருக்குத் தெரிந்தவரின் குழந்தை ரத்தப் புற்று நோய்க்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. ரத்தம் தேவை என்று அந்த ஊழியர் எனக்குத் தெரிந்த ஒரு அதிகாரி மூலம் தொடர்புகொண்டு பேசினார். 'இரண்டு பாட்டில் ரத்தம் இந்த வாரம் தேவை’ என்றார்கள். வெள்ளிக் கிழமை அன்று நான் ரத்த தானம் செய்து விட்டேன். இன்று காலை எங்கள் இணைச் செயலாளர் தோழர் பட்டாபி அளிப்ப தாக ஏற்பாடு. காலை 10 மணிக்கு அந்த சென்னைத் தோழரிடம் இருந்து தொலைபேசி வந்தது. ரத்த தானம் பற்றி நினைவுபடுத்தத் தான் தொலைபேசி செய்கின்றார்கள் என்று நினைத்து, அவர் பேசுவதற்கு முன்பாகவே அவசரம் அவசரமாக 'இன்னும் அரை மணி நேரத்துக்குள் தோழர் பட்டாபி ரத்த வங்கி சென்றுவிடுவார்’ என்றேன். அவரோ, 'அதற்கு அவசியம் இல்லை. நேற்று இரவு அந்தக் குழந்தை இறந்துவிட்டது’ என்று தழுதழுத்தக் குரலில் சொன்னார்.

நான் அந்தக் குழந்தையை, ஏன் அதன் பெற்றோரைக் கூடப் பார்த்தது இல்லை. ஆனாலும் மனதை என்னவோ செய்கிறது  மார் வான் என்ற பெயர் உடைய அந்த மழலையின் மரணம்!

பிரமிப்பின் பெயர் டேப் ரிக்கார்டர்!

வலையோசை

டேப் ரிகார்டர்  ஒரு காலத்தில் என்னுடைய கனவு. கல்லூரிக் காலத்தில் விடுதி அறையில் பக்கத்து அறையில் இருந்த பணக்கார மாணவன் ஒரு சின்ன டேப் ரிக்கார்டரைக் கொண்டுவர, அவன் அந்த  நிமிடமே ஹாஸ்டலின் வி.ஐ.பி. ஆகிவிட்டான். மற்றவர்களுக்கு அதை எட்டி நின்று பார்க்க மட்டும்தான் அனுமதி. அவன் விரும்பும் பாடல்களை மட்டும்தான் கேட்க வேண்டும், மற்றவர்கள் படிக்கும்போதோ, எழுதும்போதோ அவன் பாட்டுப் போட்டால் அவர்கள் அந்த வேலைகளை அப்படியே விட்டு விட்டுப் பாட்டுக் கேட்க வேண்டும்... என்றெல்லாம் நிபந்தனைகள் போடத் தொடங்கிவிட்டதால் திராட்சைக் கிட்டாத நரிகளாக ஒரு கட்டத்தில் வெளியேறிவிட்டோம்.

வலையோசை

என்னுடைய இரண்டாவது அண்ணன் முதன்முதலில் ஒரு டோஷிபா கம்பெனியின் டேப் ரிக்கார்டர் வாங்கிவந்தான். கூடவே இரண்டு கேசட்டுகள், ஒன்று ஜேம்ஸ் பாண்ட் படங்களின் டைட்டில் பாடல்கள், இன்னொன்று ஒரு போனியெம் கேசட் என்று நினைக்கி றேன். புரிந்ததோ புரியவில்லையோ, பிடித்ததோ, பிடிக்கவில்லையோ, அதைக் கேட்டுக்கொண்டே இருந்தது ஒரு காலம்.

அப்போது இருந்த சம்பளத்துக்கு ஒரு மாதத்துக்கு ஒரு கேசட் வாங்குவதே சிரமமாக இருக்கும். அலுவலக விஷயமாக வேலூர் வந்தால் கிடைக்கும் பயணப்படியை மிச்சம் பிடித்து கேசட்டுகள் வாங்கிய காலமும் உண்டு.

இனி வரும் தலைமுறைக்கு டேப் ரிக்கார்டர் கேசட்டுகள் போன்றவற்றைப் பற்றித் தெரிய வாய்ப்பே இல்லை!

அடுத்த கட்டுரைக்கு