Published:Updated:

சுட்டேபுடுவோம் !

உ.அருண்குமார் படங்கள்: பா.காளிமுத்து

##~##

மதுரை மச்சான்ஸ் மட்டும் இல்லை. மதுரை தாவணீஸும் மதுரை குட்டீஸும் கூட எப்பவும் செம தில்தான். அதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் மதுரை ரைஃபிள் கிளப்.

பல்வேறு ரைஃபிள் சாம்பியன்களை உருவாக்கிக் கொடுத்து இருக்கும் இந்த கிளப்பின் சமீபத்திய சாதனை, புனேயில் நேஷனல் ரைஃபிள் அசோசியேஷன் சார்பாக நடத்தப்பட்ட வெவ்வேறு தொடர்களில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளியதுதான்.

இந்தக் குழுவில் உள்ள இல்லத்தரசியான சவீந்தனாதேவி கூறும்போது, 'எனக்குத் திருமணம் ஆகி 11 வருஷம் ஆகுது. ரெண்டு பெண்குழந்தைங்க இருக்காங்க. நான் ஸ்கூல் படிக்கும்போது என்.சி.சி-யில இருந்ததால அப்போ இருந்தே ரைஃபிள் மேல ஒரு ஈர்ப்பு உண்டு. அதுதான் என்னை கிளப்புல சேர வெச்சது. போன வருஷம் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவுல மொத்தம் 300 பேர் கலந்துகிட்டாங்க. அதில் நான் தங்கப்பதக்கம் வென்றேன்.  குடும்பத் தலைவியா இருந்து ஸ்போர்ட்ஸ்ல கலந்துக்கிறது கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கு. ஆனா, ஜெயிக்கும்போது எல்லா சிரமங்களும் மறந்திடும். இன்னும் நிறைய சாதனைகள் செய்யணும்'' என்றார்.

சுட்டேபுடுவோம் !

அவரைத் தொடர்ந்து பேசிய கல்லூரி மாணவி நூருல் அனிஷா, ''நான் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி ஹோம் சயின்ஸ் படிக்கிறேன். ப்ளஸ் டூ விடுமுறையில உருப்படியா ஏதாவது செய்யலாமேனு ரைஃபிள் கிளப்ல சேர்ந்தேன். ஆர்வம் வந்து தொடர்ந்து பயிற்சி எடுத்துகிட்டேன். இதுவரைக்கும் தேசிய அளவில் இரண்டு முறை வெள்ளிப் பதக்கங்களும் மாநில அளவில் இரண்டு முறை தங்கப் பதக்கமும் வென்று இருக்கேன். ஆகஸ்ட்ல புனேயில் நடந்த போட்டிகள்ல மொத்தம் நான்கு பிரிவுகள். அதுல தேஜஸ்வினி உட்பட பல பிரபல வீராங்கனைகள் கலந்துகிட்டாங்க. அவ்வளவு பேரோட மோதி,  இண்டர்நேஷனல் அளவிலான சீனியர் பெண்கள் பிரிவில் எட்டாவது இடத்தையும், நேஷனல் அளவிலான சீனியர் பெண்கள் பிரிவில் 12 வது இடத்தையும், இண்டர்நேஷனல் அளவிலான பெண்கள் பிரிவில் 30-வது இடத்தையும், நேஷனல் அளவிலான பெண்கள் பிரிவில் 12-வது இடத்தையும் பிடிச்சேன். ஒலிம்பிக்தான் என்னுடைய இலக்கு. அதுக்கு முதல்ல இண்டர்நேஷனல் பிளேயரா இந்தியா சார்பில் செலெக்ட் ஆகணும். அதுக்குச் சொந்தமாகத் துப்பாக்கி வெச்சிருக்கணும். எனக்கு அந்த அளவுக்கு வசதி இல்லை. ஆனா, எல்லாம் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு' என்றார்.

சுட்டேபுடுவோம் !

இன்னும் பலரையும் கனவுகளுடன் வளர்த்துக்கொண்டு இருக்கும் மதுரை ரைஃபிள் கிளப்பின் செக்ரெட்டரி வேல்சங்கர், ''1956-ம் வருஷம் இந்தக் கிளப்பை ஆரம்பிச்சாங்க.  இப்ப இந்தக் கிளப்ல 135 பேர் ஆயுட்கால உறுப்பினர்களாக இருக்காங்க. அத்துடன் 120 மாணவர்களும் உறுப்பினர்களாக இருக்காங்க. புனேயில் நடந்த போட்டிகள்ல மொத்தம் 1,200 வீரர் கள், வீராங்கனைகள் கலந்துகிட்டாங்க, அதுல எங்க கிளப்பைச் சேர்ந்த சவீந்தனாதேவி, நூருல் அனிஷா மற்றும் நித்திலேஷ் மூணு பேரும் பெரிய அளவில் சாதிச்சு இருக்காங்க. ரொம்ப உற்சாகமா இருக்கு. இந்த வெற்றிகள் மூலமா இவங்களை மாதிரி இன்னும் பலரை உருவாக்கணும்னு உத்வேகம் வந்திருக்கு!'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு