Published:Updated:

ஏழு ஸ்வரங்களும் பிறக்கும் இடம் !

Madurai
Madurai

இ.கார்த்திகேயன் படங்கள்: எல்.ராஜேந்திரன்

##~##

இன்று கீ-போர்டு மாதிரி அன்று ஆர்மோனியம். கிராமங்களில் சொல்வதைப் போல் அஞ்சுக் கட்டை, எட்டுக் கட்டை எல்லாமே ஆர்மோனியப்பெட்டிக்குள் இருந்து வந்தவைதான். ஓர் இசைக்கலைஞனின் வார்த்தைகளில் சொன்னால்,  ஏழு ஸ்வரங்களும் பிறக்கும் இடம் இங்கேதான். இப்படிப்பட்ட பழம் பெருமை வாய்ந்த ஆர்மோனியப் பெட்டிகள் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில்தான் தயாரிக்கப்பட்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன. இதைப் பற்றி வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் சொல்லியிருந்தார் என் விகடன் வாசகர் மூர்த்தி.

பணகுடி கிராமத்தில் உள்ள முத்தாரம்மன்கோயில் தெருவில் ஆர்மோனியப் பெட்டி செய்துகொண்டு இருந்த லெட்சுமணன் மற்றும் முருகனைச் சந்தித்தோம்.

'எங்க தாத்தாவுக்குத் தாத்தாவோட காலத்துல இருந்தே ஆர்கன், ஆர்மோனியப்பெட்டி செஞ்சிக்கிட்டு இருக்கோம். ஆர் மோனியத்தோட சேர்த்து ஆர்கன்ங்கிற இசைக்கருவியை இந்தியாவிலேயே பணகுடியில் மட்டும்தான் உருவாக்குறோம். ஆர்கனுக்கும் ஆர்மோனியத்துக்கும் வித்தியாசம் உண்டு. இசை அமைக்கும்போது துவாரங்கள் மூலம் காற்றை வெளிப்படுத்தும் இசைக் கருவி ஆர்மோனியம். காற்றைத் துவாரங்கள் மூலம் உறிஞ்சி இசை எழுப்பும் கருவி ஆர்கன். ஆர்கனில் மேற்கத்திய இசைகளை மட்டுமே இசைக்க முடியும்.

ஏழு ஸ்வரங்களும் பிறக்கும் இடம் !

ஆனால், ஆர்மோனியத்தில்தான் கர்னாடக இசையை இசைக்க முடியும். ஆர்மோனியப் பெட்டிகளை 'ரெட்சிடார்’ங்கிற மரத்தில் இருந்து செய்கிறோம். எடை குறைவாகவும் அதிகத் திடத்தன்மையும் உள்ள இந்த மரத்துக்குத்தான் இசையின் அதிர்வுகளைச் சேதப்படுத்தாமல் வெளிப்படுத்தும் குணம் உண்டு. பழங்கால கிராமபோன், ரேடியோப் பெட்டிகள், மணிஅடிக்கும் கடிகாரம் இவை எல்லாம் இந்த வகை மரத்தில் செய்யப்பட்டவைதான். பணகுடி பக்கத்துல உள்ளக் காடுகளில் இந்த வகை மரம் அதிகமாக இருக்கு. அதுதான் பணகுடி ஸ்பெஷல்!'' என்றார் லெட்சுமணன்.

தொடர்ந்து பேசிய முருகன், ''கீ-போர்டு மாதிரியான மேற்கத்திய இசைக் கருவிகளின் வரவால், யாரும் ஆர்மோனியத்தை அவ்வளவாக ரசிக்கிறதில்லை. நாடகங்களில் பழமை மாறாமல் இருக்குறதுக்காவும், சத்தமா ஒலி கேட்கவும் ஆர்மோனியத்தை இன்னமும் பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க. ராமநாதபுரம், காரைக்குடி, சிவகங்கை மாதிரி யான ஊர்களில் நாடகக் கலை இன்னமும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு. அதனால், எங்க வயித்துப்பாடு ஏதோ ஓடுது.

ஏழு ஸ்வரங்களும் பிறக்கும் இடம் !

இந்தியாவிலேயே ஆர்மோனியப் பெட்டிகள் செய்யவும், ஆர்மோனிய இசை வகுப்புகள் நடத்தவும் மத்திய அரசு எங்களுக்குத்தான் அங்கீகாரம் கொடுத்துச்சு. ஆனால், பொருளாதார வசதி இல்லாததுனால அதைத் தொடர முடியலை. இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னாடி வரைக்கும் கல்கத்தாவைச் சேர்ந்த 'டுவார்கரின்’ங்கிற கம்பெனியும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த மானுவேல் இண்டஸ்ட் ரீஸும்தான் ஆர்மோனியப் பெட்டியைத் தயாரிச்சுக்கிட்டு இருந்தாங்க. இப்போ நாங்க மட்டும்தான் தயாரிக்கிறோம். மர ஆர்கனுக்குப் பதிலா எலெட்ரானிக் கீ-போர்டு, பியானோ செய்ய முடியும். ஆனா, அதுக்கு நிறையவும் முதலீடு வேணும். எங்க ரெண்டு பேர் காலத்துக்குப் பின்னாடி, பாரம்பரியம் மிக்க இந்தத் தொழிலை யாரு செய்யப் போறாங்கன்னு தெரியலை!'' என்றார் கம்மிய குரலில்.

அடுத்த கட்டுரைக்கு