வலையோசை - முரளி கண்ணன்
##~##

இந்த ஆண்டு பிப்ரவரி 18 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தி.மு.க-வின் பொதுக் குழுத் தீர்மானங்களை விளக்கித் தீப்பொறி ஆறுமுகம் உரையாற்றினார். அந்தப் பொதுக்கூட்டம் குறித்த ஒரு பார்வை.

கூட்டம் நடந்த இடத்தில் சென்ற மாதம்தான் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பத்துப் பேர்தான் பார்வையாளர்களாக இருந்தார்கள். ஆனால், நேற்று நடந்த கூட்டத்துக்கு இரவு 7.30 மணிக்கு மேல் மக்கள் கூட்டம் சிறுகச் சிறுக வர ஆரம்பித்தது. கிடைத்த இடைவெளியில்  தங்கள் டூ வீலர்களைப் பார்க் செய்துவிட்டு ஆங்காங்கே பொதுமக்கள் நின்றுகொண்டு இருந்தார்கள்.

19 வயதில் மேடை ஏறித் தற்போது 72 வயது வரை 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகம் முழுவதும் பேசிவரும் தீப்பொறி ஆறுமுகத்துக்கு இன்னும் கூட்டம் குறையாமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது. ஏகப்பட்ட விஷயங்களை அப்டேட் செய்துகொண்டே இருக்கிறார். எத்தனைப் பேரூராட்சிகள் இப்போது மாநகராட்சியில் இணைந்தன என்று  லிஸ்ட் போடுகிறார். பேப்பரேபடிக்காத ஆட்களுக்கு மட்டுமல்ல; எந்த நேரமும் இணையச் செய்திகளை மேய்ந்துகொண்டு இருப்பவர்களுக்குக்கூட அவரிடம் தகவல்கள் இருக்கின்றன.

வலையோசை - முரளி கண்ணன்

கூட்டத்துக்கு வந்தவர்களின் குறைந்தபட்ச வயது 35. பெரும்பாலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம் கண்ணில்பட்டார்கள். தி.மு.க. விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. 25 வயது இளைஞர்கள் யாருமே அங்கு இல்லை. அழகிரியின் பிறந்த நாளுக்கு அவரை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனர்களில் நகரப் பொறுப்பில் உள்ள பலருடைய வாரிசுகளின் படங்கள் இருந்தன. ஆனால், அவர்கள் யாரையும் இந்தக் கூட்டத்தில் காணவில்லை. நான் சிறுவனாக இருந்தபோது, பார்த்த கூட்டங்களில் எல்லாம் இளம் வயதினர்தான் அதிகம் இருப்பார்கள். அவர்கள்தான் இன்னும் வருகிறார்களோ என்ற எண்ணமே ஏற்பட்டது!

வலையோசை - முரளி கண்ணன்

 அது 1986-ம் ஆண்டு. அப்போதுதான் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. முதல் இரண்டு ஆண்டுகள் மிக ஆர்வமாகப் பார்த்த எனக்கு அதற்குப் பின் கிரிக்கெட் பார்க்கவே பிடிக்கவில்லை. 87-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தோல்விக்குப் பின்னர் அணிக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட வெங்சர்க்கார் தலைமையோ  இன்னும் சொதப்பியது. அசார், வெங்கி, அமர்நாத் எல்லாம் சிறப்பாக ஆட மாட்டார்கள். கபில்தேவ் தன் வசந்த கால இறுதியில் இருந்தார். டபிள்யூ.வி.ராமன், அஜய் சர்மா என ரஞ்சிக் கோப்பை வென்றவர்களை எல்லாம் கூட்டிவந்தார்கள். அவர்களும் சோபிக்கவில்லை. பவுலிங் அதைவிட மோசம். ஆனால், இதே சமயத்தில் பாகிஸ்தானில் இம்ரான், வாஸிம், வக்கார், காதர் என்று ஜாம்பவான்கள் இருந்தார்கள். பேட்டிங்கிலோ சலிம் மாலிக், மியான் டாட் போன்ற அபாரமான ஆட்டக்காரர்களும் இருந்தனர். இலங்கையில் டி.சில்வா, ரணதுங்கா, மகானாமா போன்றவர்கள் அபாரமாக ஆடினார்கள். மேலும் ரிச்சர்ட்ஸ், மார்டின் குரோவ், அலன் லாம்ப், டீன் ஜோன்ஸ் எனப் பல அதிரடி ஆட்டக்காரர்கள் மற்ற அணிகளில் இருந்தார்கள். 'என்னடா நம்ம ஆளுக இப்படி சொதப்பலா விளையாடுறாங்களே’னு ஆதங்கத்தில் இருந்தபோதுதான் அந்தச் செய்தி வந்தது. டெண்டுல்கர்னு ஒரு பையன். 16 வயசுதான். 13 பாலில் ஆஃப் செஞ்சுரி. அதுவும் அப்துல் காதர் ஓவர்ல தொடர்ந்து நாலு சிக்ஸ் அடித்து இருக்கிறார் என்று.

சிறு நகரங்களில் அந்த நாளில் வசித்த டீன் ஏஜ் பையன்களுக்கு என்ன பொழுதுபோக்கு இருந்தது? வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், மாதத்துக்கு ஒரு சினிமா, பிளஸ் டூ மார்க்கை நோக்கிய பயணம். இந்தச் சூழ்நிலையில் மோட்டிவேட் செய்ய, நம்ம ஆளும் உலகத் தரத்துக்கு நிற்க முடியும் என்று காட்ட, தொடர்ந்து ஆர்வத்துடன் கிரிக்கெட்டைப் பார்க்க உதவியது சச்சின்தான். அதனாலேயே அவரை எனக்குப் பிடித்துப்போனது!

வலையோசை - முரளி கண்ணன்

பேருந்துப் பயணங்களில்தான் எத்தனை விதமான கண்டக்டர்கள். இடது தோள்பட்டையில் தோல் பையைத் தொங்கவிட்டு, அந்தக் கையிலேயே எல்லா டிக்கட் புத்தகங்களையும் அடுக்கிக்கொண்டு விரல் இடுக்கில் ஐந்து, பத்து ரூபாய் நோட்டுகளை மடித்து வைத்துக்கொண்டு, வலதுகையில் நீள நகங்களை வளர்த்துக்கொண்டு, வாயினாலேயே விசில் கொடுக்கும் மதுரை ஏரியா கண்டக்டர்கள், நீள் செவ்வக அட்டையில் விலை வாரியாக டிக்கெட்டுகளை அடுக்கிக்கொண்டு மெதுவாக இயங்கும் நாஞ்சில் ஏரியா கண்டக்டர்கள், பயணிகளை மரியாதையாக நடத்தி பஸ்ஸை வழிநடத்தும் கொங்கு ஏரியா கண்டக்டர்கள், பில்கேட்ஸே ஏறினாலும் பிச்சைக்காரனைப் போல் மதிக்கும் சென்னை கண்டக்டர்கள் என கண்டக்டர்களில் மட்டும் எத்தனை வகை?

கூட்டம் எவ்வளவு இருந்தாலும், பாடல் எவ்வளவு சத்தமாக ஒலித்தாலும், அரை டிக்கெட் பிரச்னை, லக்கேஜ் பிரச்னை என எல்லாவற்றையும் சமாளித்துக் கடைசி டிக்கெட் கிழித்த உடனேயே அடுத்த கண்டக்டரிடம் கணக்கு ஒப்படைக்கும் அளவுக்கு தசாவதானிகள் கூட உண்டு.

எண்பதுகளில் கண்டக்டர் வேலைக்கு வந்தவர்கள் பெரும்பாலும் தந்தை, உறவினர்களைப் பின்பற்றி வந்தவர்களாகத்தான் இருந்தார்கள். பி.யூ.சி-யோ, பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தோ, நூல் பிடித்து பாஸ் செய்தவர்களுக்கோ கடைசிப் போக்கிடம் போக்குவரத்துத் துறையாகத்தான் இருந்தது. 90-களுக்குப் பின் கண்டக்டராக வந்தவர்களை குடும்ப வறுமையே அந்த வேலைக்குத் தள்ளி இருக்கும்!

வலையோசை - முரளி கண்ணன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு