Published:Updated:

சிலந்திப் பெண் !

சண்.சரவணக்குமார் படம்: சக்தி அருணகிரி

##~##

குளிப்பதற்காகக் கும்பக்கரை அருவிப் பக்கம் போய் இருந்தோம். அடர்ந்த வனப் பகுதிகளில் வலையைவைத்து மரங்களின் இடுக்குகளில் ஏதோ பிடித்துக்கொண்டு இருந்தார் ஒரு பெண். அருகில் சென்று விசாரித்தபோதுதான் அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிலந்தி ஆராய்ச்சி செய்யும் கார்த்திகேயனி என்று தெரிந்தது. தமிழ்நாட்டில் சிலந்திகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் இரண்டு பெண்களில் ஒருவர்தான் இவர். பேசும்போது கார்த்திகேயனியின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு உற்சாகம்.

''பொதுவா ஆராய்ச்சிப் படிப்பு படிக்கிறவங்க வகுப்பறைகள், ஆய்வுக்கூடங் களைத் தாண்டி வெளியே எங்கேயும் வர மாட்டாங்க. ஒரு சிலர்தான் ஆய்வுக்காக வெளியில் வருவாங்க. நான் பெரும்பாலும் பூச்சிகளைத் தேடி அடர்ந்த காட்டுக்குள் போவேன். ஆனா, சில சமயம் பெண் என்பதைக் காரணம் காட்டிக் காட்டுக்குள் குறிப்பிட்ட தூரத்துக்கு மேலே போக வனத் துறை அனுமதி கொடுக்க மாட்டாங்க. அதனால, நான் எங்கே போனாலும் என் அப்பா துணைக்கு வந்திடுவார்.  நான் கும்பக்கரையில் மொத்தம் 55 வகையான சிலந்திகளைக் கண்டுபிடிச்சு இருக்கேன். இதுவரை வெளியில பலரும் அறியாத மூன்று புதிய வகைச் சிலந்திகளையும் கண்டுபிடிச்சு, அதைக் கொல்கத்தாவில் உள்ள 'ஜுவாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா’ என்கிற அமைப்புக்கு அனுப்பினேன்.  அவங்க அதைப் புதிய இனம்னு ஒப்புக்கொண்டு சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்காங்க. சமீபத்தில் ஆறு புதிய வகை சிலந்தி களையும் அனுப்பி இருக்கேன்'' என்கிறவர் தொடர்கிறார்.

சிலந்திப் பெண் !

''சிலந்திகள் 400 வருடங்களுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினம். இது பூச்சி இனத்தில் சேராது. ஏன்னா, பூச்சிகளுக்கு ஆறு கால்கள்தான். ஆனால், சிலந்திக்கு எட்டு கால் கள். அதனால இது விலங்கினம் பட்டியலில் சேர்ந்திடுச்சு. உலகத்தில்  42,055 வகையான சிலந்திகள் இருக்கு. பெரும்பாலான மக்களுக்கு சிலந்தியைப் பிடிக்காது. ஆனா, சிலந்திகளைப் பற்றி முழுமையாகத் தெரிஞ்சுக்கிட்டா ரொம்பப் பிடிச்சுப்போகும். சிலந்தி இனம் ஒரு பயோ கன்ட்ரோல் ஏஜென்ட். அதாவது, கொசு, ஈ, வெட்டுக் கிளி இவைகள்தான் சிலந்தியின் உணவு வகைகள்.

இவை எல்லாமே மனுஷங் களையும் விவசாயத்தையும் பாதிக்கிற விஷ  யங்கள். மனிதர்களைப் பாதிக்கிற பூச்சிகளைச் சாப்பிடுறதால, சிலந்திகளை 'விவசாயிகளின் நண்பன்’னு சொல்வாங்க. நெற்பயிரைச் சேதம் செய்யும் வெட்டுக்கிளியை சிலந்திதான் கொல் கிறது. எல்லாச் சிலந்தி இனங்களும் விஷத் தன்மை கொண்டவை. ஆனால், மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு விஷம் இல்லை. இந்தியா வில் காணப்படும் சிலந்திகளுக்குப் பெரும்பாலும் அதன் உணவு வகைகளான பூச்சிகளைக் கொல் வதற்குத் தேவையான அளவே விஷம் இருக்கும்.

சிலந்திப் பெண் !

ஆப்பிரிக்கக் காடுகளில் வசிக்கும் 'லாக்சலஸ்’ என்னும் சிலந்திதான் கொடிய விஷத் தன்மை கொண்டது. இது மனிதனைக் கடித்ததும் மார டைப்பு, பக்க வாதம் போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு. சில சமயம் மரணம் கூட ஏற்படலாம். இன்னமும் நிறைய மலைக் கிரா மங்களில் ஆதிவாசிகள் 'காய்ச்சல்’ நோயை குணமாக்கச் சிலந்தியைத்தான் மருந்தாக உட் கொள்றாங்க. கம்போடியா நாட்டில் அவர்களின் பாரம்பரிய உணவே சிலந்திப் பூச்சிங்கதான். இப்படி மனுஷங்க வாழ்க்கையோட சிலந்திகள் இணைஞ்சே இருக்கு.  

சிலந்திப் பெண் !

பல வகையான சிலந்திகளில்  சூழலுக்குத் தகுந்த மாதிரி நிறம் மாத்திக்கிற சிலந்திகள், தண்ணீரில் மட்டும் வாழும் சிலந்திகள் ஆகி யவை அரிய ரகங்கள். சிலந்தி இனத்திலே ரொம்பப் பயங்கரமானது தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் வாழும் 'பிளாக் பின்டோ’ வகைதான். அது கடிச்ச உடனே மரணம்தான். அந்தச்  சிலந்தி பின்னுற வலைகள் அதிக வலி மையா இருக்கும். அந்த வலைகளை வெச்சு வயர்கள் தயார் செய்றாங்க. கை, வலை, குச்சி, பானை, காய்ந்த இலைகள் இதுல ஏதாவது ஒண்ணைப் பயன்படுத்திதான் சிலந்தியைப் பிடிக்கணும். இல்லைன்னா சிலந்தி இறந்திடும். நான் பெரும்பாலும் சிலந்திகளைக் கையிலேயே பிடிச்சிடுவேன். கும்பக்கரையில் மட்டும் 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 60 வகையான சிலந்திகளைக் கண்டுபிடிச்சிருக்கேன். இந்தியக் காடுகளை ஆய்வு செஞ்சா,  இன்னமும் நிறையக் கண்டுபிடிக்கலாம். சிலந்தி இனம் காக்கப்படணும். சிலந்தியின் வாயில் இருந்து வர்ற திரவம் ஒரு வகை புரோட்டினால் ஆனது. அந்தத் திரவம்தான் அது வாழ்ற நாள் வரைக்கும் விவசாயிகளுக்கு நண்பனா இருக்க உதவுது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு