டலுக்கு அடியில் திருமணம், பாராசூட்டில் வானத்தில் மிதந்தபடி திருமணம் என்று வித்தி யாசமான திருமணங்களைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த  இந்தக் காதல் ஜோடி 'கட்டினால் தமிழகத்தில்தான் தாலி கட்டுவோம்’ என்று பொள்ளாச்சிக்குக் கிளம்பிவந்து இந்து முறைப்படி தங்கள் திருமணத்தை நடத்தி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்கள்.  

அமெரிக்கா டு சாமியாண்டிபுதூர்!
##~##

அமெரிக்காவைச் சேர்ந்த வேலன்டைன்,  பிரிட்ஜ் இருவரும் பொள்ளாச்சி அருகில் உள்ள பசுமையான ஊரான சாமியாண்டிபுதூரில் ஊர் மக்கள் சூழ, தாலி கட்டிய அந்தத் தரு ணத்தைக் காண கோடிக் கண்கள் வேண்டும்.  பட்டு வேட்டி சரசரக்கக் கழுத்தில் மாலையுடன் இருந்த மணமகன் வேலன்டைன் முகத்தில் டன் கணக்கில் வெட்கம். ஊரே கூடி நின்று மாப்பிள்ளையைப் பற்றி கொங்குத் தமிழில் கிண்டல் அடித்துக்கொண்டு இருக்க, அதைப் பார்த்துச் சிரித்துச் சிரித்து மேலும் சிவந்துகொண்டு இருந்தார் மணப்பெண் பிரிட்ஜ்.

வேலன்டைனிடம் பேசினேன். 'தென் அமெரிக்கா - மெக்ஸிகோதான் என் சொந்த நாடு. என் காதலி சான்ஃபிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்தவர். நாங்க ரெண்டு பேரும் கலிஃபோர்னி யாவுல இருக்கிற ஒரு பள்ளிக்கூடத்துல படிச்சோம். அப்பவே எங்களுக்குள்ள ஒரு ஈர்ப்பு இருந்தது. பள்ளிப் பருவம் முடிஞ்சதும் ரெண்டு பேரும் ஒரே கல்லூரியில் சேர்ந்தோம். கல்லூரி படிக்கும்போது, நான்தான் முதல்ல என்னோட காதலைச் சொன்னேன். 'இதைச் சொல்ல இத்தனை வருஷமாச்சா?’னு கேட்டு பிரிட்ஜ் என்னை கட்டிப்பிடிச்சுக்கிட்டா.  நாங்க 15 வருஷமா காதலிச்சோம்.

என் கல்லூரிக் காலத்தில் சில புத்தகங்கள் மூலமாக இந்து மதம், இந்திய கலாசாரம், குறிப்பாக தமிழர்களின் கலாசாரம், அவங்களோட ஆரோக்கியமான, சத்தான உணவுப் பழக்க வழக்கங்களைப் பத்தி படிச்சோம். அதனால, உங்க நாடுமேல ஈர்ப்பு வந்திருச்சு. இதைப் பத்தி மேலும் தெரிஞ்சிக்க முயற்சி செஞ்சப்ப என் கல்லூரியிலேயே இந்தியாவைச் சேர்ந்த நண்பர்கள் அறிமுகம் ஆனாங்க. அதில் ஒரு நண்பரோட திருமணம் அமெரிக்காவில் இந்து முறைப்படி நடந்தது. ஓர் உருளையான கல்லைக் கல்யாணப் பொண்ணு மிதிச்சதும் மாப்பிள்ளைப் பொண்ணுக்கு ஒரு மஞ்சள் கயிறைக் கழுத்துல கட்டினார். இதை எல்லாம் பார்த்து எனக்கு ஆச்சர்யம் தாங்கலை. இதைப் பத்தி நான் என் நண்பர்கிட்ட கேட்டப்ப ஒவ்வொரு சடங்குக்கும் ஒரு கதை சொன்னாங்க. அதுல இருந்து பிரிட்ஜை இந்து முறைப்படிதான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு முடிவு பண்ணேன்.

அமெரிக்கா டு சாமியாண்டிபுதூர்!

இதைத் தமிழகத்தைச் சேர்ந்த என் கல்லூரி நண்பரின் தந்தையான கிருஷ்ணனிடம் சொன் னேன். அதைக் கேட்டு ஆச்சர்யப்பட்ட அவர், 'தாராளமா வாங்க’னு சொல்லிக் கல்யாணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சார். நான், பிரிட்ஜ், என் தங்கச்சி மூணு பேரும் ஒரு மாசத்துக்கு முன்னாடியே இங்க வந்துட்டோம்'' என்றார் பூரிப்புடன்.

மணமகனின் பெற்றோர் சார்பாக கிருஷ் ணன் - ஜெயந்தி தம்பதியரும் மணமகளின் பெற்றோர் சார்பாக மற்றொரு கிருஷ்ணன்-கீதா தம்பதியரும் முன்நின்று திருமணத்தை நடத்தி வைத்தார்கள். கணபதி ஹோமம், நவகிரஹா ஹோமம், லட்சுமி பூஜை என்று திருமணம் களை கட்டியது. கிருஷ்ணன் - கீதா தம்பதியர் இந்துத் திருமணச் சடங்காக மணமகனின் காலைத் தட்டில் வைத்துக் கழுவப் போக பதறிவிட்டார் வேலன்டைன். அப்புறம் அந்தச் சடங்கைப் பற்றி அவர்கள் அவரிடம்  விளக்கமாகச் சொல்ல, கண் கலங்கிவிட்டது அவருக்கு.

அமெரிக்கா டு சாமியாண்டிபுதூர்!

மணமகளிடம் பேசினோம். ''உங்கள் ஊர் மக்கள் எங்கள் மீது காட்டும் அன்பைப் பார்க்கும்போது, எனக்கு என் நாட்டுக்குத் திரும்ப மனமே இல்லை. ஏதோ அவர்களுக்குப் பிறந்த குழந்தையாகப் பாவித்து என் திருமணச் சடங்குகளைச் செய்கிறார்கள். எனக்கு  அழுகையே வந்துவிட்டது. இவர்களைப் பிரிவதை நினைக்கக்கூட கஷ்டமாக இருக்கிறது.'' என்றார் கலங்கிய கண்களோடு!

அமெரிக்கா டு சாமியாண்டிபுதூர்!

ரா.அண்ணாமலை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு