''இயற்கையும் இசையும் ஒண்ணுதான்! மனுஷங்க மத்தியில ஏற்றத்தாழ்வைப் பார்க்காம எல்லாருக்கும் ஒரே மாதிரியான ஆனந்தத்தை ரெண்டுமே வழங்குது. சக மனுஷனால் புறக்கணிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியையும் உலகமே திரும்பிப் பார்க்கவைக்கிற இடத்துல கொண்டு அமர்த்துகிற மாயாஜாலம் இசைக்கு உண்டு'' மாதுவின் யதார்த்த வார்த்தைகள் மனம் வருடுகின்றன.

இசைச் சேவை!

ஈரோட்டைச் சேர்ந்த கொங்கு இசைக் குழுவின் உரிமையாளர் மாது. பணத்துக்காக மட்டும் இசைக்காமல் ஆத்மார்த்தமாகவும் இசையைப் பயன்படுத்துகிறார். முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற சிறுவர் இல்லங்கள் ஆகிய இடங்களுக்குச் சென்று இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார். குஜராத் பூகம்ப நிவாரணம், சுனாமி பேரழிவு நிவாரணம் போன்றவற்றுக்காக இசை நிகழ்ச்சி நடத்தி, வசூல் செய்து அரசிடம் வழங்கி இருக்கிறார். அவரிடம் பேசினேன்.

##~##

''இன்னைக்கு இந்த ஆர்க்கெஸ்ட்ராவை நடத்துறேன்னா அதுக்குக் காரணம் எங்கப்பா சீனிவாசன்தான். அருமையான டிரம்ஸ் கலைஞர் அவர். மவுத் ஆர்கன் வாசிக்குறதுலயும் வல்லவர். அதே சமயம் என் அம்மா பட்டுரோஜா, 'குப்பையைப் பொறுக்குற வேலையைப் பார்த்தாலும் கூட பரிதாபத்துக்கு உரிய மனுஷங்க நாலு பேருக்கு உதவியா இருக்கணும்டா’னு சொல்லித்தான் என்னை வளர்த்தாங்க. அதோட வெளிப்பாடுதான் இப்ப நான் செஞ்சிட்டு இருக்கிற விஷயங்கள்.

மாற்றுத் திறனாளி அன்பர்களை இசையில மாஸ்டராக்கணும் அப்படிங்கிறது என்னோட நீண்ட நாள் விருப்பம். சமீபத்துல ராகவேந்தர், மகேஷ்னு ரெண்டு பசங்க என்கிட்டே இசைப் பயிற்சிக்காக வந்தாங்க. வயதுக்கேற்ற மனவளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாதவர் ராகவேந்தர். மகேஷ் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இதனாலயே பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டவர். ரெண்டு பேருக்குமே ஏதோ ஒரு துறையில் சாதிக்கணும்கிற வெறி இருந்துச்சு. அவங்களுக்கு வாத்தியங்களை வாசிக்கக் கத்துக் கொடுத்தேன்.  

இந்த ஒரு வருஷப் பயிற்சியில் டிரம்ஸ், கீ-போர்டு, தபேலான்னு ராகவேந்தர் பின்னி எடுக்கிறார். மகேஷ் டிரம்ஸ், மிருதங்கம் ரெண்டும் கத்துக்கறார். கோயில் திருவிழா இசை நிகழ்ச்சியில அவருக்கு வாய்ப்புக் கொடுத்தேன். 'கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்’ங்கிற பாட்டைப் பிய்ச்சு உதறிட்டார். உடலில் எந்தக் குறையும் இல்லாம இருக்கிறவங்களைவிட இவங்க நூறு மடங்கு சிறப்பா செயல்படுறாங்க. இன்னொரு விஷயம், இந்த ரெண்டு பசங்களோட பெற்றோரும் இவங்க மேலே வெச்சிருக்கிற பிரியமும், நம்பிக்கையும் அசாதாரணமானது. ரொம்பப் பொறுப்பா வகுப்புக்குக் கூட்டிட்டுப் போறதும், நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லித் தேற்றுவதும் நெஞ்சை உருகவைக்கும்.

இசைச் சேவை!

இவங்க ரெண்டு பேர் தவிர சின்னசாமிங்கிற பெரியவரும் இசைக் கத்துக்கிறார். தெளிவா பேசத் தெரியாத சின்னச்சாமி,  ஆர்கெஸ்ட்ரா அலுவலகத்துல  உதவியாளராகத்தான் சேர்ந்தார். இந்த ரெண்டு பசங்களையும் பார்த்துட்டு அவருக்கும் இசைக் கத்துக்கணும்னு ஆசை வந்திருச்சு. அவருக்கு ரிதம் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸை வாசிக்கக் கத்துக் கொடுத்துட்டு இருக்கேன். தெளிவான, துல்லியமான பர்ஃபார்மென்ஸ் கொடுக்குறார். தாழ்வு மனப்பான்மையில உள்ளுக்குள்ளே உடைஞ்சுகிடந்த மனுஷன் இன்னைக்கு எல்லார்கிட்டயும் கலகலப்பாப் பேசுறது சந்தோஷமா இருக்கு. எத்தனை மாற்றுத் திறனா ளிகள் வந்தாலும் அக்கறையா சொல்லிக் கொடுக்க ஆர்வமாக இருக்கேன். நாளைக்கு இவங்களே ஒரு ஆர்க்கெஸ்ட்ரா ஆரம்பிச்சாலும்,   அதில் ஓரமா உட்கார்ந்து டிரம்ஸ் வாசிக்கிற வாய்ப்புக் கிடைச்சாப் போதும். முழுமையா வாழ்ந்த சந்தோஷத்தை உணர்ந்துடுவேன்!'' என்கிறார் நெகிழ்ச்சியோடு!  

இசைச் சேவை!

- எஸ்.ஷக்தி
படங்கள்: க.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு