Published:Updated:

சமண முனிவரா? தலைவெட்டி முனிவரா?

வரலாற்று விபரீதம்

லக நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் இந்தியர்களே என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது விஜயமங்கலம் சமணப் பள்ளி. கி.பி. 6-ம் நூற்றாண்டில் சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக் காலத்தில் சுமார் 8,000 சமணர்கள் சமணக் கொள்கையைப் பரப்புவதற்குத் தென்னகத்துக்கு வந்து இருக்கிறார்கள். அப்படி வந்தவர்கள் சமணத்துறவியான எட்டாம் தீர்த்தங்கரருக்காக எழுப்பிய கோயில் இது.

சமண முனிவரா? தலைவெட்டி முனிவரா?
##~##

1,400 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோயில் இப்போது சிதைந்த நிலையில் இருப்பதுதான் வேதனை. இது குறித்து பிரபல தொல்லியல் அறிஞர் புலவர் செ.ராசுவைச் சந்தித்துப் பேசினேன்.

''காணாமல் போய்க்கொண்டு இருக்கும் பண்டைய வரலாற்றுச் சின்னங்களில் விஜயமங்கலக் கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலில் உள்ள வரலாற்றுச் சின்னங்கள் இந்தியத் தொல்லியல்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டாலும் பாதுகாப்பற்ற நிலையில்தான் இருக்கிறது.

தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்த சமணர்கள், தமிழைக் கற்பிக்க ஆங்காங்கே பள்ளிகள் அமைத்தனர். அவற்றில் விஜயமங்கலம் 'பெரும் பள்ளியாக’ (பெரிய பள்ளிக்கூடம்) விளங்கி இருக்கிறது. மருத்துவம், அன்ன தானம், கல்வி மூன்றையும் தலையாய சேவையாகக்கொண்ட சமணர்கள், இங்கு தமிழ்ச் சங்கம் நிறுவி வழி நடத்தி உள்ளனர். அதில் இயற்றப்பட்டதே கொங்குவேளரின் 'பெருங்கதை’ நூலாகும். மேலும், அங்கே தமிழர் வரலாறு கூறும் தமிழ்க் கல்வெட்டுகள் பல கண்டெடுக்கப்பட்டு ஈரோடு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

சமண முனிவரா? தலைவெட்டி முனிவரா?

இப்படிப்பட்ட மேலான சமணர்களின் வாழ்க்கை, கி.பி. 13-ம் நூற்றாண்டில் இருந்து வீழ்ச்சி அடையத் தொடங்கியது. பல்லாயிரம் சமணக் குடும்பங்கள் வாழ்ந்த விஜயமங்கலத்தில், தற்போது நான்கு சமணக் குடும்பங்களே இருக்கின்றன. அதனால், இந்தக் கோயிலைப் பராமரிக்கவும் வழி இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோயிலில் இருந்து ஐந்து சிலைகள் காணாமல் போன கொடுமையும் நிகழ்ந்தது.

'கொல்லாமை, கொன்று உண்ணாமை’ என்று வாழ்ந்த சமணர்களின் தெய்வங்களை, வேறு கோயில்களில் மாற்றிவைத்து 'மாரியம்மன்’ என்றும் 'தலைவெட்டி முனிவர்’ என்றும் பெயர்கள் வைத்து, கிடா வெட்டி வழிபாடு செய்வது அறியாமை. இது, சமணத்தை புண்படுத்துவது மட்டுமின்றி வரலாற்றை அழிக்கும் செயலும்கூட. இந்தச் சிலைகளை மீட்டு மீண்டும் பழைய இடங்களில் வைத்துப் பராமரிக்க வேண்டும். இந்திய அரசு, வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கப் போதிய மானியம் தந்து, பழைய வடிவம் மாறாமல் சீர் அமைத்தால்தான் இந்தப் பண்பாட்டுச் சின்னங்கள் காக்கப்படும்'' என்றார்.

தமிழகம் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் உடையது என்பதை இத்தகையக் காலப் பொக்கிஷங்களைக் காப்பாற்றுவதன் மூலம்தான் நிரூபிக்க முடியும்.

சமண முனிவரா? தலைவெட்டி முனிவரா?

கட்டுரை, படங்கள்: மு.கார்த்திகேயன்

அடுத்த கட்டுரைக்கு