Published:Updated:

நாளை திருமணம்... இன்று விபத்து!

இதயங்களை இணைத்த காதல்

##~##

ஜூலை- 5. காலை 7.30 மணி. 

வடபழனி முருகன் கோயில். கல்யாணக் கோலத்தில் பெண் ஒருவர் காத்திருக்க... அலறியபடி வந்து நிற்கிறது ஒரு ஆம்புலன்ஸ். ஸ்ட்ரெக்சரில் இருந்து ஒருவரை அப்படியே  தூக்கிக்கொண்டு கோயிலுக்குள் நுழைகிறார்கள்.

கல்யாணப் பெண்ணின் கண்கள் கலங்கி நிற்க... ஸ்ட்ரெக்சரில் இருந்தபடியே பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறார் மாப்பிள்ளை. கூடி இருந்த நண்பர்கள் அட்சதை தூவ... கலங்கிய கண்களோடு மீண்டும் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு மாப்பிள்ளையை அழைத்துச் செல்கிறார்கள். வடபழனியில் வாக்கிங் போனபோது இந்தச் சம்பவம் கண்ணில் பட கவனிக்க ஆரம்பித்தேன்.

கல்யாணப் பெண்ணுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தவர் நடிகர் திருமுருகன். 'களவாணி’ படத்தில் ஓவியாவுக்கு அண்ணனாக நடித்தவர். அவரிடம் பேசினேன். ''இப்போ ஆம்புலன்ஸ்ல போன லோகநாதன், டைரக்டர் சற்குணம் எல்லாரும் என்னோட ஊர்க்காரங்கதான். லோகநாதன் இங்கே ஒரு கட்டுமான கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தான்.  ராமலட்சுமிங்கிற பொண்ணுகூட காதல் வந்திடுச்சு. ரெண்டு பேரும் வேற வேறசாதி. அதனால, பொண்ணு வீட்டுல கல்யாணத்துக்கு ஒத்துக்கலை. நாங்களும் விடாம போராடி அவங்க சம்மதத்தை வாங்கினோம். கல்யாணத்துக்கும் நாள் குறிச்சோம். ரெண்டு நாளைக்கு முன்னாடி காலையில லோகநாதன் கோயிலுக்குப் போறதுக்காக வண்டியில வந்திருக்கான். வேகமாக வந்த ஒரு கார் அவன் வண்டி மேல மோதி, கீழே விழுந்தவன் கால் மேல கார் ஏறிடுச்சு. இரண்டு காலுமே முறிஞ்சு போச்சு. உடம்பு முழுக்க பயங்கர அடி. ஆஸ்பத்திரியில சேர்த்து ஆப்ரேஷன் செஞ்சாங்க. அவன் எழுந்து நிற்கவே இன்னும் மூணு மாசம் ஆகும்னு சொல்லிட்டாங்க.

நாளை திருமணம்... இன்று விபத்து!

எவ்வளவோ பிரச்னைகளுக்கு நடுவில் பொண்ணு வீட்டுல சம்மதம் வாங்கினோம். இப்போ கல்யாணம் நின்னு போனா, மறுபடியும் நடத்துறது ரொம்பக் கஷ்டம். அதனால, அந்தப் பொண்ணுகிட்டப் பேசி, அவங்களுக்கு நம்பிக்கை கொடுத்தோம். அப்புறமா ரெண்டு குடும்பத்தையும் ஒண்ணா உட்கார வெச்சிப்

நாளை திருமணம்... இன்று விபத்து!

பேசி, 'குறிப்பிட்ட தேதியில கல்யாணத்தை நடத்திடுவோம்’னு சொன்னோம். ஆனா, அவங்க ரெண்டு பேருமே அதுக்கு சம்மதிக்கல. ஆனாலும், நாங்க விடாம போராடி ரெண்டு வீட்டுல யும் சம்மதம் வாங்கினோம்.

ஹாஸ்பிட்டலுக்குப் போனா, 'இப்போ இருக்கிற கண்டிஷன்ல பேஷன்ட்டை வெளியில அனுப்ப முடியாது’னு சொல்லிட்டாங்க. டாக்டர்கிட்ட பேசினோம். 'காலைக் கொஞ்சம்கூட அசைக்காம அழைச்சிட்டுப் போயிட்டு வர முடியும்னா போய்ட்டு வாங்க. கூடவே நர்ஸும் இருப்பாங்க’னு டாக்டர் சொன்னார். எல்லாம் தயார் பண்ணிட்டுக் காலையில லோகநாதனை ஹாஸ் பிட்டல்ல இருந்து கொண்டுவந்தோம். தாலி கட்டி முடிச் சதும் திரும்ப ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வெச்சிட்டோம்'' என்றார்.

நாளை திருமணம்... இன்று விபத்து!

மணமகள் ராமலட்சுமிக்கு வாழ்த்துக் களைச் சொன்னேன். ''லோகு மீது எனக்கு இருந்தது உண்மையான காதல். சொல்லப்போனா முன்பைவிட இப்போதான் அவரை அதிகமா லவ் பண்றேன்.

அவருக்குக் கோயிலுக்குப் போற பழக்கமே கிடையாது. நான் சொன்னேன்னுதான் அன்னைக்குக் கோயிலுக்குப் போனாரு. ஆனா, இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்ல. அவருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுங்குற தகவல் கேட்டதும் எனக்கு உசிரே நின்னுபோச்சு. இப்படி ஒரு சூழ்நிலையில எங்க கல்யாணம் நடக்கும்னு நான் கனவுலகூட நினைக்கலை. அவரோட நண்பர்களுக்குதான் நான் நன்றி சொல்லணும்.

நல்ல நண்பர்கள் நாலு பேர் கூட இருந்தால் போதும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் ஜெயிக்கலாம்கிறதுக்கு என் வாழ்க்கைதாங்க உதாரணம்'' ராமலட்சுமியின் கண்களில் கண்ணீரும், குரலில் நெகிழ்ச்சியும் வழிகிறது.

காதல் வாழட்டும்..!

- கே.ராஜாதிருவேங்கடம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு