Published:Updated:

’’இனிமேல் எனக்கு இது நாவல் பெற்ற ஸ்தலம்!’’

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - விழுப்புரம்

’’இனிமேல் எனக்கு இது நாவல் பெற்ற ஸ்தலம்!’’
’’இனிமேல் எனக்கு இது நாவல் பெற்ற ஸ்தலம்!’’
##~##
''வி
ழுப்புரம் ரயில்வே காலனியில் வீதிகள் பல உண்டு. நான்கு, ஆறு, எட்டு என்ற வரிசையில் வீடுகள் (Blocks இருக்கும். பணிக்கு ஏற்ப ரயில்வே சிப்பந்திகள் ஒவ்வொருவருக்கும் குறைந்த வாடகைக்கு வழங்கப்படும். வீட்டு வரிசைப்படி எண் வழங்கப்பட்டு இருக்கும். அப்படியோர் எண்ணான 78 டி-யில்தான் அந்தக் குழந்தை அவதரித்தது. அந்தக் குழந்தையே நான் தானுங்கோ'' என்று நகைச்சுவையாகத் தொடங்கி தன் ஊரான விழுப்புரம் பற்றியும் குறிப்பாகத் தான் வாழ்ந்த விழுப்புரம் ரயில்வே காலனி குறித்தும் பேச ஆரம்பித்தார் எழுத்தாளர் அன்பாதவன்.

''இதே தெற்கு ரயில்வே காலனியில்தான் இலக்கியச் சிங்கம் ஜெயகாந்தன் சிறுவயதில் விளையாடி வளர்ந்திருக்கிறார். அவர் தன்னுடைய தோழர்களோடு விளையாடிய 'கம்யூனிஸ்ட் பிள்ளையார்’ கோயிலின் அரசமரக் காற்றுக்கு, ராஜ்யத்தில் பாதியைக் கொடுக்கலாம். தெற்கு காலனியில் கம்யூனிஸ்ட் கட்சி நேசர்கள்தாம் அதிகம். ஆனால், 1977-ல் ஒரு புதிய உதயமாக வெள்ளைத் தொப்பியும் கறுப்புக் கண்ணாடியும் சந்தன உருவமுமாக ஒரு 'சக்தி’ கிளம்ப என் வயசுப் 'பசங்க’ எல்லோரும் கொடி பிடித்துக் கூச்சலிட்டு அலைந்தோம் 'எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று.

’’இனிமேல் எனக்கு இது நாவல் பெற்ற ஸ்தலம்!’’

வெவ்வேறு ஊரைச் சார்ந்தவர்கள் பணிநிமித்தமாக ரயில்வே காலனியில் குடிபுக, தெக்கத்திப் பாஷை, தெலுங்கு, மலையாளம், அரபு என எல்லாமும் கொஞ்சம் கொஞ்சம் அறிமுகமானது. தீபாவளிப் பலகாரங்களும், ரமலான் பிரியாணியும், கிறிஸ்துமஸ் கேக்கும், மூடிய பாத்திரங்களில் வீட்டுக்கு வீடு பறக்கும். தைப்பொங்கல் கரும்பு சமத்துவமாய் இனிக்கும்.  எதிர்வீட்டு திருச்சிக்காரம்மா அத்தை, போக்குட்டி நாயர் மாமா, முறுக்கு மீசை மலையாளத்தார் சேட்டன், உஷா அக்கா, அபுதாஹிர் அண்ணன் என ரயில்வே காலனியில் எல்லோரும் சொந்தங்கள்தான். புளியம்பழ சீசனில் அத்தனை வீடுகளிலும் 'புளி ஆய்தல்’ நடக்கும். சின்ன வெங்காய சீசனில் வீட்டுக்கு வீடு வடகம் மணக்கும். மார்கழிக் காலைகளில்  யார் வீட்டு வாசலில் கோலம் பெரிதெனப் போட்டி நடக்கும்.

விழுப்புரம் அறிஞர் அண்ணா கல்லூரியில் படிக்கும்போது ஆதவனும் இப்போது விழி.பா. இதயவேந்தனாக இருக்கும் அண்ணாத்துரையும் அறிமுகம் ஆனார்கள். என் நண்பன் ஆதவன் மறைவுக்குப் பின்னால் அன்புசிவம் என்கிற நான் 'அன்பாதவன்’ ஆகிவிட்டேன். நண்பனின் பெயரை இணைத்து புனைபெயர் வைத்துக்கொண்டு இருக்கிற இரண்டாவது கவிஞன் நான். முதல் கவிஞர் அறிவுமதி. வைத்தியண்ணன் கடை பன்னீர்சோடாவும், ராஜிக்கடை டீயும், தாடிக்காரர் கடை வடைகறியும், சென்ட்ரல் கஃபே மசால் தோசையும் ரயில்வே காலனிவாசிகளுக்கு மனசுக்கு நெருக்கமானவை. எனக்குத் தனிப்பட்ட முறையில் காதல் மனைவியை அறிமுகப்படுத்தி வைத்ததும் இதே ரயில்வே காலனிதான்.

’’இனிமேல் எனக்கு இது நாவல் பெற்ற ஸ்தலம்!’’
’’இனிமேல் எனக்கு இது நாவல் பெற்ற ஸ்தலம்!’’

நீராவி என்ஜின்களின் வரலாறு முடிவுக்கு வந்ததும் புகழ்பெற்ற 'லோகோ செட்’ திருச்சிக்கு மாறியதும் ரயில்வே காலனியில் மாற்றங்களைக் கொண்டுவந்தன. காலனியில் இருந்த படிப்பகம் இடித்துத் தள்ளப்பட்டது.

அரசாங்கம் உருவாக்கிய சமத்துவபுரச் சிந்தனையை அன்றைக்கே விதைத்தது ரயில்வே காலனிதான். ஆனால், ஏனோ தென்னக ரயில்வே, ரயில்வே காலனியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே புறக்கணிக்கிறது. இன்றைக்கு மிக மோசமாக சிதிலமடைந்து கிடக்கும் ரயில்வே காலனியைப் பார்க்கும்போது எனக்குள் அடக்கமுடியாத சோகம் பொங்குகிறது. அதனாலேயே அந்தப் பால்யத்தை இலக்கியமாய் மாற்றத் திட்டமிட்டு இருக்கிறேன்.

சமய இலக்கியங்களில் ஒவ்வொரு ஊரையும் கோயிலையும் அடியார்கள் சிறப்பாகக் குறிப்பிடும்போது 'பாடல் பெற்ற ஸ்தலம்’ என்று அழைப்பார்கள். விரைவில் நான் எழுதப்போகும் புதினத்தின் ஜீவநாடியே விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனிதான். அதனால், எனக்கு இது 'நாவல் பெற்ற ஸ்தலம்’!''

படங்கள்: ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு