வலையோசை - பயணங்கள்

தத்துவம்!

ஒரே கதையை நாலு விதமா எடுத்தா அது ஷங்கர்.

நாலு கதையை ஒரே விதமா எடுத்தா அது பாலா!

வலையோசை - பயணங்கள்

கதை கதையாம்... காரணமாம்!

ஓர் ஊர். அதற்குப் பக்கத்தில் ஒரு காடு. அந்தக் காட்டில் இருக்கும் சிங்கம் ஒன்று அடிக்கடி ஊருக்குள் வந்து ஆடு மாடுகளை அடித்துக் கொன்றுவிடுகிறது. தொல்லை தாங்காமல் ஊர் மக்கள் புகார் அளிக்கவே முதலில் அந்தச் சிங்கத்தைப் பிடிக்க சி.ஐ.ஏ. ஆட்கள் வருகிறார்கள். அவர்கள் இரண்டு நாட்களாக அலைந்து சிங்கத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி விடுகிறார்கள்.

அதன் பிறகு கே.ஜி.பி. ஆட்கள் வருகிறார்கள். அவர்களும் இரண்டு நாட்களுக்குப் பின் காட்டை விட்டுத் தோல்வியுடன் வெளியேறுகிறார்கள்.

அதன் பிறகு, ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாகக் கூறப்படும் போலீஸ் குழுவினர் சிங்கத்தைத் தேடிக் காட்டுக்குள் செல்கிறார்கள். ஒரு வாரமாக எந்தவித சத்தமும் இல்லை.

ஊர் மக்கள் பயந்துபோய்க் காட்டுக்குள் சென்றால்  அங்கு ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாகக் கூறப்பட்ட குழுவினர் 'உண்மையை ஓப்புக்கோ, நீதான்னு ஒப்புக்கோ' என்று கூறியபடி ஒரு கரடியைப் போட்டு அடி அடி என்று அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கரடி கதறுகிறது. 'ஐயா அடிக்காதீங்க. நான் சிங்கம்னு நானே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்கய்யா. இருந்தாலும் உங்களுக்காக ஒப்புக்கிறேன்'

கடைசியில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான குழு மீசையை முறுக்கியபடி சொல்கிறது. ''நாங்க யார் தெரியுமா... சிங்கம்லே!''

ஆதாமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் என்ன?

வலையோசை - பயணங்கள்

ஆதாமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் என்ன என்ற கேள்விக்கு நீங்கள் உடனடியாக 'ஆப்பிள்’ என்று சொல்வீர்கள் எனத் தெரியும்.

விவிலியம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா? 'நன்மை மற்றும் தீமை குறித்த அறிவின் மரம்’ என்று.

எத்தியோப்பியர்களின் புனித நூலான ஈனோகின் புத்தகத்தில் (31:4) இந்த மரம் குறித்து விளக்கப்பட்டு இருக்கிறது. 'அது புளிய மரம்போல் இருந்தது, அதன் பழங்கள் மெல்லிய திராட்சைப் பழங்களைப்போல் இருந்தன, அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது’ என்று.

யூதர்களின் தல்முத் என்ற புத்தகம், அந்தப் பழம் திராட்சை என்கிறது. மற்றொரு கதையிலோ 'ஏவாள் அந்தப் பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட  வொயினை அருந்தினாள்’ என்கிறது. அதை அத்திப்பழம் என்றும், கோதுமை என்றும்கூடச் சிலர் கருதுகிறார்கள்.

மேல்நாட்டு ஓவியர்கள் மட்டுமே அந்தப் பழத்தை ஆப்பிள் ஆக்கினார்கள். (அவர்களுக்குத் தெரிந்த பழம் அதுதான்). அதனால்தான், மேல் நாட்டு (ஐரோப்பிய) ஓவியங்களில் அந்த மரம் ஆப்பிள் மரமாகவும் அந்தப் பழம் ஆப்பிளாகவும் காட்டப்படுகின்றன. ஒரு வேளை ரவிவர்மா,  முதன்முதலாக இந்தக் காட்சியை வரைந்து இருந்தால் ஆப்பிளுக்குப் பதில்  தேங்காய் வரைந்து இருக்கலாம்!

              நட்பா? காதலா? உயிரா?

வலையோசை - பயணங்கள்

நான் அரசுப் பணியில் சேர்ந்த புதிதில் நடந்த மேலாண்மை வகுப்பு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி:

நீங்கள் ஒரு நாள் மாலை அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் செல்கிறீர்கள். அப்போது லேசாக மழை தூறிக்கொண்டு இருக்கிறது.  பேருந்து நிறுத்தத்தில் இரண்டு நபர்கள் பேருந்துக்காகக் காத்திருக்கிறார்கள்.

நீங்களோ காதலிக்கும் நபரின் வீட்டுக்குச் செல்ல வேண்டும். உங்கள் உயிர் நண்பன், ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்ல வேண்டும். மூச்சு விட சிரமப்படும், உங்களுக்கு அறிமுகம் இல்லாத முதியவர் ஒருவரை உடனடியாக மருத்துவமனைக்குக்கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் உங்கள் இரு சக்கர வாகனத்தில் இருவரில் யாரை ஏற்றிச் செல்வீர்கள்?

எது முக்கியம் நட்பா? காதலா? உயிரா? பலரும் பல விடைகளைக் கூறி அதற்கான காரணத்தையும் கூறினார்கள். நான் கூறிய விடை: இரு சக்கர வாகனத்தை நண்பனிடம் அளித்து அந்த முதியவரை மருத்துவமனையில் சேர்த்தபின் நேர்காணலுக்குப் போகக் கூறிவிட்டு, கடலை போட நினைத்திருக்கும் பெண் வீட்டுக்குப் பொடி நடையாக நடப்பேன்.

இதைத்தான் பக்கவாட்டுச் சிந்தனை என்று அழைக்கிறார்கள்.

இதில் உள்ள நீதி என்னவென்றால்,  

ஒரு புதிருக்கு ஒரு விடைதான் இருக்கவேண்டும் என்பது இல்லை.

ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லை என்று தோன்றும் இரு விஷயங்கள் கூட ஒரே விடையில் வரலாம்.  நீங்கள் நேராக யோசிக்காமல் பக்கவாட்டில் யோசித்தால் அப்படித் தோன்றும்!

வலையோசை - பயணங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு